(Reading time: 12 - 24 minutes)

செழியன் தன் வேலை முடித்துக் கொண்டு சொந்த ஊரை நோக்கி புறபட்டான்.. அவன் மனதில் மலரின் நினைவே.. அவளுக்கு போன் செய்வோமா என்று எண்ணியவன் , பின் பண்டிகை ஆரம்பித்து விட்டதால், அவள் பிஸியாக இருப்பாள் என்று விட்டு விட்டான்..

செழியனின் பெற்றோர் ஏற்கனவே ஊருக்கு சென்று இருந்தனர்.. இங்கே வீடு எல்லாம் சுத்தம் செய்து விட்டு, கடை பொறுப்பை இந்த ஒரு வாரம் மட்டும் அவர் நண்பர் ஒருவரிடம் விட்டு விட்டு சென்று விடுவார்.

அங்கே சொந்த வீட்டில் ஆட்களை வைத்து சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, வீடு முழுதும் கோலமிட்டு, வாசலில் காவியும், வெள்ளையும் மாறி மாறி அடித்து வைத்தனர்.. அந்த மாதிரி பார்க்கும் போது வீடும் ஒரு கோவில் தான் என்ற நினைப்பை உண்டாக்கும்.

செழியன் பொங்கல் அன்று காலையில்தான் போக எண்ணியிருந்தான்.. ஆனால் மனது கேட்கவில்லை.. பொங்கலே விடியற்காலையில் சூரியோததில் தான் கொண்டாடுவார்கள்.. இவன் ட்ரெயினில் போனால் எப்படியும் ஏழு, எட்டு மணி ஆவது ஆகி விடும்..

பண்டிகையும் அதுவுமாக அவன் அம்மாவை வருத்த படுத்த வேண்டாம் என்று முதல் நாள் அங்கே இருக்குமாறு கிளம்பி விட்டான்..

.இரவு கடைசி பஸ்சிற்கு தான் சென்றான். அப்படியும் வீட்டு வாசலில் இன்னமும் கூட்டம் நின்று இருந்தது.. இவனை எதிர்பார்த்து இவன் வயசு பசங்க எல்லாம் நின்று இருந்தனர்..

இவன் நுழையும் போதே.. “ஏ.. நம்ம செழியன் வந்துட்டாம் லே.. “ என , மற்றவர்கள் ஒ வென கத்த, அவன் அம்மா வெளியில் எட்டி பார்த்தார்..

செழியனின் அப்பா, “வாலே.. உன்னதான் உன் சோக்காலிங்க எதிர்பார்த்துட்டு இருக்கானுவ.. “ என

“உடுப்ப மாத்திட்டு வாவே. நாங்க காத்துகிட்டு இருக்கோம். “

“நான் நாளைக்கு வாரேம்லே.. இன்னிக்கு ரொம்ப சடைவா இருக்கு.. தூங்கரேன்..”

“அது எல்லாம் ஊர்லே போய் பொறவு நல்ல உறங்கிக்கோ.. இன்னைக்கு நாம ரெண்டாம் ஆட்டம் படத்துக்கு போறோம். .வா “

அவன் அம்மாவோ “ கண்ணுகளா.. அவன் சித்த சாப்பிட்டு வரட்டுமே..”

கூட்டத்தில் ஒருவன் “அத்த.. உன் மவனுக்கு நாங்க ஸ்பெஷல்ஆ சாத்தூர் பரோட்டா வாங்கி வச்சிருக்கோம்.. உன் சாப்பட்ட தானே வருஷம் பூரா வீட்டிலே சாப்பிடறான்.. அவன் இங்க இருக்கும்தட்டும் .. எங்க கூட தான் இருப்பான்.. நாங்க என்ன திங்கமோ .. அத உன் மவனுக்கும் கொடுப்போம்.. கவலை படாதா.”

“எலேய்.. கண்டத கொடுத்து புள்ள உடம்ப கெடுத்து விடாதிக.. “

“உம் மவன் எங்களுக்கு சொல்லி கொடுப்பான்.. அப்படி உடம்பு கெட்டா ஊருக்கு போய் நல்லா தேத்தி விடு.. “ என்று பதில் கொடுக்க

“உங்கள எல்லாம் திருத்தவே முடியாது லே.. என்னவோ செய்யுங்க...” என்று உள்ளே சென்று விட்டார்..

அவர் மறுநாள் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டுமே என்று படுக்கவும் சென்றார்.

எப்படியும் இந்த கும்பல் தன்னை விடாது என்று உணர்ந்த செழியன், வீட்டிற்குள் போய் ஒரு குளியல் போட்டு விட்டு வந்தான்.. கொஞ்சம் பிரெஷாக இருக்கவும், லுங்கியும், மேலே டீ ஷர்டும் மாட்டிக் கொண்டு வெளியில் வரவும், அவன் கூட்டாளிகள் எல்லாம் அவனை இழுத்துக் கொண்டு சென்றனர்.

இங்கே உள்ளவர்கள் எல்லோருமே உறவுகள்தான்.. எல்லோரும் ஒரு வயது இரண்டு வயது வித்தியாசத்தில் தான் இருப்பார்கள்.. அதனால் எல்லோரும் ஒரே போல் வாலே, போலே என்று தான் கூப்பிட்டு கொள்வார்கள்.

எல்லோரும் படித்தவர்கள் தான்.. வெளியூரில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.. உள்லோரிலேயே இருப்பவர்களும் உண்டு.. கிட்டத்தட்ட ஒரு இருபது பேர் ஒரே வயதில் இருப்பார்கள்..

இவர்கள் எல்லோரும் சேர்ந்து பணம் வசூல் செய்து, அவர்கள் ஊரில் இருக்கும் தெருக்களுக்கு அலங்காரம் செய்து, அங்கே அங்கே ஸ்பீக்கர்கள் வைத்து , விளையாட்டு போட்டிகள் எல்லாம் வைப்பார்கள்..

போகி அன்று எல்லா வீட்டிலும் வேலைகள் இருப்பதால் , அதிகம் போட்டிகள் இருக்காது,,

பொங்கல் அன்று காலையில் இருந்து ஆரம்பித்து விடும்.

இவர்கள் நண்பர்கள் குழுவில் ஒருவனிடம் .

“இப்போ என்ன ப்ரோக்ராம் ..?

“முதலில் சாப்பிடறோம்.. அங்கே நம்ம குளத்து மண்டபத்துலே பரோட்டா வாங்கி வச்சிட்டு இருக்கான் நம்ம முருகேசன்.. முடிச்சுட்டு ரெண்டாம் ஆட்டம் படத்துக்கு போயிட்டு வந்து சீட்டு கச்சேரி மண்டபத்துலே.. ஆடிகிட்டே இருந்தா மூணு, மூன்றை மணிக்கு கிளம்பினா, எல்லா தெருவிலும் நம்ம புள்ளைங்க எல்லாம் கோலம் போட்டுட்டு இருபாங்க.. போனா ஒரு ரவுண்டு வெள்ளனே சைட் அடிச்சுட்டு வரலாம்..”

அப்போது மற்றவன், “டேய்.. காலையிலே அவளுக கிட்டே வம்பு வளர்க்கனுமா ?”

“எலேய்.. அதுதாமலே நல்லா இருக்கும்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.