(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 24 - தேவி

vizhikalile kadhal vizha

செழியனிடம் பேசியதில் மனக்கலக்கம் கொஞ்சம் அகன்று இருந்தாலும் முழுதாக அகலாமல் மனதுக்குள் கொஞ்சம் சோர்வாக இருந்தாள் மலர்விழி.

சொன்ன மாதிரியே அன்று இரவே செழியன் வெளியூர் சென்று விட்டான். அங்கே பத்திரமாக வந்து சேர்ந்ததாக மெசேஜ் செய்து இருந்தான்.

காலேஜும் பொங்கல் லீவ் விட்டு விட்டனர். இந்த முறை பொங்கல் வியாழகிழமை வரவே முதல் நாள் போகி முதல் காணும் பொங்கல் ஆன சனி கிழமை வரை லீவ் தான். செழியன் சென்றது அதற்கு முதல் வெள்ளி கிழமை அன்று. அதனால் கிட்டத்தட்ட பத்து நாட்கள் அவனை பார்பதற்கு ஆகி விடும் .

மலர் வீட்டிலும் பொங்கல் வேலைகள் ஆரம்பித்து விட்டார்கள். அன்று திங்கள் கிழமை காலையிலே ஆச்சியின் சத்தம் பெரிதாக கேட்டது.

“இன்னும் ரெண்டு நாளையிலே பொங்க பண்டிகை வருது.. இன்னும் வீட்டிலே ஒரு வேலையும் ஆகலை.. நம்ம ஊரு பக்கம் எல்லாம் இத்தனை நேரம் வீடு சுத்தம் செய்ய ஆரம்பிச்சு இருப்பாங்க. இந்த ஊர்லே கிழக்க மேற்கா எதுவும் தெரிய மாட்டேன்குது.” என்று புலம்ப,

அவரின் மகனோ “ என்னத்துக்கு இப்படி புலம்பற? அதான் வீடு வெள்ளை அடிச்சு முடிச்சாச்சு.. இனி போகி, பொங்கல் பண்டிகை அன்னிக்கு தானே மத்தது எல்லாம்.. இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்கே.. அப்புறம் என்ன ?”

“ஏம்லே .. உனக்கு மறந்து போச்சோ.. நாம ஊருலே எல்லாம் ரெண்டு நா முன்னாடி ஊர் மக்க எல்லாம் சேர்ந்து கோல போட்டிலே ஆரம்பிச்சு எல்லா விளையாட்டு போட்டியும் நடத்துவாங்க.. இங்கே எந்த சத்தமும் காணோம்..”

அப்போது அங்கே வந்த மலர் “ஏன் ஆச்சி.. ? நீயும் திருச்சி வந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆகுது.. இன்னமும் உன் ஊர் பிலாக்கணமே பாடிட்டு இருக்கியே.. ? “WHEN YOU ARE A ROME, BE A ROMANIAN “ இப்படி தான் இரேன்..”

“இந்தாட்டி .. இந்த தஸ் புஸ்ன்னு பேசுறது எல்லாம் உன் காலேசோட வச்சிக்கோ .. என்ன சொல்லுதியோ விளங்குற மாதிரி சொல்லு .. “

“ஐயே.. உன்கிட்ட இங்கிலீஷ்லே பேசிட்டாலும்.. நீ எங்க இருக்கியோ அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி இருன்னு ஒரு பழமொழி இருக்கு.. அததான் சொன்னேன்.

“நாம எங்க இருந்தாலும் நம்ம வேரு நம்ம ஊரு தான்.. நாம பொழைக்க வந்த இடத்துக்கு தகுந்த மாதிரி ஒவ்வொன்னும் மாத்திக்கிட்டா அப்புறம் உனக்கு அப்புறம் வர சந்ததிக்கு உன் மண்ணை பத்தி எதுவும் தெரியாது.. நம்ம ஊரு பக்கம் குழந்தை பெத்தவளை அவ புகுந்த வீட்டுக்கு கொண்டு விடும்போது , குழந்தை தொட்டில்லே பொறந்த ஊரு மண்ணை எடுத்து வச்சு வைச்சு விடுவாங்க... அதே மாதிரி வெளியூர்லே ஒரு மனுஷன் ரொம்ப நாளு இழுத்துட்டு கிடக்கன்னா , அவம் வாயிலே அவம் பொறந்த மண்ணை கரைச்சு விட்டாக்க , அந்த உசுரு அமைதியா போகும்.. மண்ணுக்கு அவ்ளோ சக்தி உண்டு.. இது எல்லாம் உங்க மாறி இளசுகளுக்கு எங்க புரியுது..?”

“ஆச்ச்ச்சி... என்னோட கிளாஸ்லே நான் எடுக்கிற பாடத்த விட உன் லெக்சர் பெரிசா இருக்கு.. ஆள விடு.. இப்போ என்ன உனக்கு குறைஞ்சு போச்சு.. நாங்கதான் நீ சொல்ற மாதிரி எல்லா வேலையும் செஞ்சுகிட்டு இருக்கோமே.. என்ன விட்டு போச்சு.. “

“மார்கழி மாசம் முப்பது நாளும் வாசலிலே பெரிசா கோலம் போட சொன்னா.. உங்கத்தாகாரி ஏதோ தரைக்கும், கோலத்துக்கும் வலிக்குமோன்னு பேருக்கு கோலம் போட்டுட்டு வரா.. “

“ஆச்சி.. நம்ம வீடுலேயாவது காலையிலே கோலம் போடுறோம்.. பல பேர் வீட்டிலே வாசலிலே ஸ்டிக்கர் தான் பார்த்துக்கோ.. நீ ரொம்ப பேசுன.. அப்புறம் நானும் போய் ஒரு ஸ்டிக்கர் வாங்கிட்டு வந்து வாசலில் ஓட்டிடுவேன்.. “

“க்கும்.. நீ செஞ்சாலும் செய்வ.. உங்கப்பனும், ஆத்தாளும் கொடுக்கிற செல்லம் பேசுது..”

“ஏன் நீ மட்டும் குறைய கொடுக்கியோ செல்லம்..”

“ வாசலில் சாணி பிள்ளையார் வச்சு நடுவில் பூசணி பூவு வைக்கணும்.. இங்கே யாரு அதா எல்லாம் காதில் கேக்கா.?”

வள்ளி இது எல்லாம் அவரே பார்த்துக் கொள்வார்.. பால்காரரிடம் சொல்லி வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சாணி கொண்டு வர சொல்லி வைப்பார்.. பூசணி பூவும் இங்கே கிடைப்பது கஷ்டம் என்றாலும் கூட இரண்டு மூன்று பேரிடம் சொல்லி வைத்து வாங்கி விடுவார்.. இந்த முறை தான் எதுவும் செய்யவில்லை.

முதல் தடை சாணி வாங்கி வைக்க அவர் மகளிடம் இருந்து.. வந்தது.. பூவும் இந்த முறை என்னவோ கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.. கடைசி இரண்டு மூன்று நாட்களுக்காவது கிடைக்க ஏற்பாடு செய்து இருந்தார்.. அதற்குள் இப்படி கணவரிடம் மாமியார் புலம்புவார் என்று எதிர்பார்க்கவில்லை..

என்ன பதில் சொல்வது, என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது

“ஆச்சி.. நான் தான் அம்மாவை சாணி வாங்கி வைக்க வேண்டாம் என்று சொன்னேன்..”

“ஏன்.. ?”

“இந்த முறை டெங்கு காய்ச்சல் நடமாட்டம் இருக்கு.. உன் பாட்டுக்கு தோட்டத்துலே குப்பையே சேர்த்தினா, வந்து பைன் போடுவாங்க.. அப்பா அரசாங்க வேலை பார்கிறாரு.. அவரே அத மதிக்கலைனா.. பிடிச்சு ஜெயிலே போட்டுடுவாங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.