(Reading time: 14 - 28 minutes)

உள்ளே அறைக்கு அழைத்துச் சென்று ஏ.சி.யை ஆன்  செய்தான்.. பின் தானும் அமர்ந்து தாயையும் அமரச் சொன்னவன், மீண்டும் கதவுத் திறக்கக் கண்டான்.. தங்கை காஃபி கோப்பையுடன் வருவதைக் கண்டவன் மனம் நெகிழ்ந்தது.

தாய் மீண்டும் எழுந்து அலமாரியைக் குடைவதைக் கண்டவன், தங்கையைப் பார்த்து..

"வா தமிழ்.. உக்காரு.. ", என்று கட்டிலில் ஒதுங்கி அமர்ந்து அவளுக்கு இடம் கொடுத்தான்.

நாற்காலியில் தாயும் அமர்ந்தவுடன்..

காஃபியை உறிஞ்சியவன், “சொல்லும்மா எது அவ்வளவு அவசரம் உங்களுக்கு.. எதுக்கு என்னை உடனே வர சொன்னீங்க?..", என்று ஊக்கினான்.

"இந்தா ராஜா இதைப் படிச்சுப் பாரு", என்று ஒரு கடித உறையைத் தந்தார்.. அது ஃபாரீன் உறை என்பது பார்த்தவுடன் தெரிந்து விட்டது.. அதுவும் தம்பியின் கையெழுத்தில்

வியந்தவன்.., "என்னம்மா இங்கே வீட்டிலே கம்பியூட்டர் இருக்கு, மேலும் தமிழ் கிட்டே இருக்குற ஃபோனில் ஸ்கைப் செய்ய முடியும்.. அதெல்லாம் விட்டுட்டு இவன் எதுக்கு லெட்டர் போட்டிருக்கான்.. என் மெயில் ஐ டி இருக்கு.. இதென்ன புதுசா.. ஏதோ இடிக்குதே..", என்று அதைத் திறந்து உள்ளிருந்த கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

படிக்கப் படிக்க முகம் சிவந்தே போனது அவனுக்கு.. அவன் தம்பியா.. அவனா?.. வாயில்லாப் பூச்சி.. அமெரிக்கா போவதற்கு எப்படியண்ணா நீ பணம் புரட்டுவாய் என்று பெண்பிள்ளைப் போல அழுதவன்.. அவனா இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறான்.

"அம்மா..இதைப் படிச்சீங்களா?..", என்று கேட்டான்.

"ஏன்டா படிக்காமயா பதறிப் போயி உன்னை வரச் சொன்னேன்.. நல்லா படிச்சேன்.. அந்த நாசமாப் போனவன் தலையில் இடியை இறக்கியிருக்கிறானே.. எங்கே ஃபோனிலோ ஸ்கைபிலோ மூஞ்சியைப் பார்க்கணுமே.. இதுன்னா நைஸா முகம் பார்க்காம என்ன வேணா எழுதித் தள்ளிடலாமே.. புருஷன் போயிக் கஷ்டப்பட்டு இப்போ இதுவும் படணும்னு இருக்கு போல என் தலையில்.. குதிர் போலப் பொண்ணை வெச்சிகிட்டு ராவிடயத்தூக்கமில்லாம நானே இருக்கேன்.. இதிலே இவளைவிட ரெண்டு வயசு சின்னவன் அவன் தானே இப்படிப் பொருப்பில்லாம யாரோ வடக்கத்திகாரியைக் கட்டிகிட்டேன்னு சொல்லறான்.. இது அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா?.." என்று கண்ணீர் விட்டார்.

தாயின் கண்ணீர் பொறுக்காமல், "ஸ்ஸ்.. அம்மா சும்மா இருங்க உங்க வாயால சபிச்சிடாதீங்க.. நம்ம பையன் மா.. அவன் நிச்சயம் காரணமில்லாம எதுவும் செஞ்சிருக்க மாட்டான்..", என்றவன்,

"தமிழ் உனக்கு எதுவும் தெரியுமா இதைபத்தி.. உனக்கு ஏதாவது ஹின்ட் குடுத்தானா?..", என்று தங்கையைக் கேட்டவனுக்கு வெறும் தலையாட்டலே பதிலாய்க் கிடைத்தது.

"அவ என்னிக்குடா வாயைத் திறந்து பேசியிருக்கா.. இவ பேசினதெல்லாம் போதாதா.. இவ பேசினப் பேச்சுக்குத்தான் என் புருஷன் போயே போயிட்டார்.. இன்னும் என்ன இருக்கு இவ பேசுறதுக்கு..", என்று கடுப்படித்தவர்..

"ஒருத்தி பேசாமக் கொல்லறா.. ஒருத்தன் பேசிப்பேசியே கொல்லறான்.. நான் எங்க போய் முட்டிக்க..", என்று புலம்பத்தொடங்கினார்.

"அம்மா.. சும்மாயிருங்க.. தமிழை ஒன்னும் சொல்லாதீங்க.. எல்லாம் தெரிஞ்ச நீங்களும் இப்படிப் பேசினா?.. எழில் போனதுக்கு இவளா காரணம்.. இப்பவும் சொல்லறேன்.. அவன் ஏதோ அசட்டுத்தனமா முடிவு எடுத்துத் திடீர்க் கல்யாணம் செஞ்சிகிட்டானோன்னு தோனுது.. இப்போ விசா ப்ராப்லம் நிறைய இருக்கு யூ.எஸ்.ல.. இப்போதான் அவன் படிப்பை முடிச்சு வேலைக்கு உக்காந்திருக்கான்.. இன்னமும் ரெண்டு மூணு மாச சம்பளம் கூட வாங்கலை.. பாவம்.. என்ன பண்ணுவான் அதான் கடனையெல்லாம் நம்மையே கட்டிக்கச் சொல்லிவிட்டுருக்கான்..", என்று தம்பிக்காகப் பரிந்தவனை எரிப்பவர் போல் பார்த்த மங்கயர்கரசி..

"டேய்.. இப்படி ஒரு கேணையனை நான் எங்கேயும் பார்த்ததில்லைடா.. லூசு.. நீ கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சு ஏதோ மெல்ல இப்போத்தான் முன்னேறிட்டு இருக்கோம்.. இதிலே இவன் படிப்புக்கு நீ அடகு வெச்சுக் குடித்த நிலத்துக் கடனையும் நாமே அடைக்கனும்கிறது எந்த விதத்தில் நியாயம்டா.. அப்பவே சொன்னேன்.. பேங்கில் அவன் பேரிலேயே எஜுகேஷன் கடனை வாங்கிக் குடுடான்னு.. வேணாம்.. வாழ்க்கை ஆரம்பமே கடனில் வேணாம்னு பெரிய வேதாந்தம் பேசினே.. எப்பவும் அவங்கவங்கக் கஷ்டத்தை அவங்கத்தான் அனுபவிக்கனும்.. மத்தவங்க மேலே ஏத்திவிடக் கூடாது..", என்று சொல்லிவிட்டு மகள் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு..

"இது எல்லாத்துக்கும் பொருந்தும்.. நல்ல கல்வி, ஞானம், பாசம், ஓரளவுக்கு வசதி.. எல்லாத்தையும் தான் பெத்தவங்க தரோம்.. அதை நல்லவிதமாவோ கெட்டவிதமாவோ பசங்க எப்படி எடுத்துக்கறாங்ககிறதுலே தான் விஷயமே இருக்கு.. எல்லாத்துக்கும் பெத்தவங்களை எதிர்பார்த்துட்டு இருக்கக் கூடாது..", என்று சொல்லியவரை நேர்ப் பார்வையாய்ப் பார்த்த சிங்கார வேலன்..

"அம்மா நீங்க என்ன சொன்னாலும் சரி.. தங்கை தம்பியின் பொறுப்பு அப்பாவிற்குப் பிறகு என்னைச் சார்ந்ததே.. அதை என்னால் உதாசீனப்படுத்த முடியாது.. அவர் இறந்த தினம் நியாபகம் இருக்கில்லை.. நான் வாக்குக் கொடுத்திருக்கேன் இவங்க ரெண்டு பேத்தையும் எப்பவும் கைவிடமாட்டேன்னு.. அதோட நம்ம நிலத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு அவருக்குச் சொல்லியிருக்கேன்.. சோ நீங்க இதுக்கெல்லாம் டென்ஷன் எடுத்துக்காதீங்க.. என்ன என்னை அடகு வெச்சாவது என் கடனை நான் அடைப்பேன்.." என்று அவன் முடிக்கக்கூட இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.