(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 07 - சகி

Uyiril kalantha urave

காற்றோடு கலந்துவிடும் தனிமைகளில் சில பொழுதுகள் மட்டும் பசுமரத்தாணியாய் இதயத்தில் பதிந்து போகின்றன.காலம் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டிருப்பினும்,தழும்புகளை விட்டு செல்வதில் எவருக்கும் பாரப்பட்சம் காட்டுவதில்லை தான்!!அவன் மனதில் இதுக்குறித்து முழுதும் பரவி கிடந்த அச்சம்,தன் சரித்திரத்தை அவளிடத்தில் எடுத்துக் கூறலாமா என்று தயங்கி நின்றது.அவள் மனதில் சுரந்த காதல் நதி தன் பாதையை முடித்துக் கொண்டால்????

அவளோ தன் முகத்தையே பார்த்தவண்ணம் எதிர் நிற்கிறாள்!அந்தக் கருவிழிகள் ஆயிரமாயிரம் கணைகளை தொடுக்கின்றன.வேறு வழியில்லை அவளிடத்தில் அனைத்தையும் கூற தான் வேண்டும்!!

பெருமூச்சு விடுத்தான் அவன்.

"இவங்க என்னுடைய அம்மா!"-தன் தாயின் புகைப்படத்தினைச் சுட்டினான்.அவள் முகத்தில் பணிவு தொனித்தது.

"தர்மா!அது தான் இவங்க பெயர்!"-அவர் பெயர் கேட்ட மாத்திரத்தில் விளக்க இயலாத ஒரு மரியாதை பிறந்தது அவளுக்குள்!!

"நான்...அதாவது...சில...உண்மைகளை உங்கக்கிட்ட சொல்லணும்!"-எனத் தொடங்கியவன்,சில நிமிடங்கள்....அல்ல!!பல நிமிடங்கள் தனது விரிவாக்கத்தை விரிவாக கூற,அதை கேட்டவளின் விழிகள் அதிர்வோடும்,கண்ணீரையும் சிந்தின.

"எனக்குத் தெரியும்...உங்களுக்கு நான் வாழுற சூழல் புரியும்னு நினைக்கிறேன்!என்னை நிச்சயமா உங்க வீட்டில் ஏற்றுக்க மாட்டாங்க!ஆனா....சிவன்யா மறுபடியும் யோசிங்க!என்னால நீங்க எந்தக் கஷ்டமும் அனுபவிக்க கூடாது!"-அவள் முகத்தில் பலத்த ஏமாற்றம்!!சில நொடிகள் மௌனம் அங்கே நிலைத்திருக்க,செய்வதறியாது திகைத்தனர் இருவரும்!!

அவன் அவள் பேச அவகாசம் அளித்து மௌனம் சாதித்தான்.அவள் சிந்தனை ஓட்டம்,பல திசைகளில் பயணம் செய்து,மீண்டும் அவளிடம் திரும்பியது.

சில அடிகள் முன்னேறியவள்,மேசை மீதிருந்த தீப்பெட்டியை எடுத்து,அணைந்திருந்த விளக்கை ஏற்றி,உயிர்பித்தாள்.

"இனி உங்க பையன் என்னுடைய பொறுப்பு!இனி அவரைப் பற்றி கவலைப்பட வேணாம்மா!நான் இருக்கேன்!என்னை நம்புங்க!"-என்ற மொழிகளை உதிர்த்தவளை,வினாவுடன் பார்த்தான் அசோக்.

"இங்கே யாரும் குற்றவாளி இல்லை!செய்யாத தவறுக்கு யாரும் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை.பெயருக்கேற்ற மாதிரி வாழ்க்கையிலும் இவங்க தர்மத்தைச் சார்ந்தே வாழ்ந்திருக்காங்க!உங்களையும் அப்படி வளர்த்திருக்காங்க!"-என்றவள்,அவனருகே வந்து,அவன் இரு கன்னங்களையும் தன் கரத்தில் ஏந்தியவள்,

"என் முடிவுல எந்த மாற்றமுமில்லை."-என்றாள் விளக்க இயலாத நாணத்துடன்!!

அவள் ஏற்றுக்கொண்டாள்!தன் கடந்தக்காலத்தை எவ்வித குறைப்பாடுமின்றி ஏற்றுக் கொண்டாள் அவள்!!என்பதை உணர்ந்தவன்,விழிகளில் சில கண்ணீர்த்துளிகளுடன்,அக்கன்னிகையை அணைத்துக் கொண்டான்.

சில நொடிகளில் நாம் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாய் அமையும்.காரிய சித்தியை எதிர்நோக்குவர்,அக்காரியமோ கைக் கூடாமலே போய்விடும்!வெற்றியை எண்ணியவர் தோல்வியடைவார்.இது நிகழவே நிகழாது என்ற காரியம்,பல்வேறு தடைகளை தகர்த்துக் கொண்டு தன் எல்லையை அடைந்திருக்கும்!மனித மனம் இதுபோன்ற எதிர்பாரா நிலைகளை தன் வாழ்வில் கடந்தே ஆக வேண்டுமென்பது விதி!!அதற்காக,எடுக்கும் அனைத்திலும் ஏற்படும் தோல்வியை கண்டு துவளுவதால் எப்பயனும் ஏற்பட போவதில்லை.தோல்வியும் மனிதர்களிடத்தில் வெற்றிப் பெறுகிறது என்றால்...மனிதன் வெற்றி பெற இயலாதா என்ன????

"சிவன்யாவை நினைத்தால் பயமா இருக்குங்க!"-கவலையுடன் கணவரிடத்தில் உரையாடினார் மீனாட்சி.

"முதல்முறை பார்த்த வரனும் கைக்கூடவில்லை.அவளும் அதைப் பற்றியே கவலைப்படலை!அடுத்ததா,வரன் பார்த்தா முதல்முறை பார்த்தவங்க ஏன் அவளை வேண்டாம்னு சொன்னாங்கன்னு கேள்வி வருமே!ஊர் என்ன பேசும்?"-கண்ணீர் சிந்தினார் அவர்.

"ஏன்மா?எப்போதும் ஊரைப் பற்றி தான் கவலைப்படுவியா?சிவன்யா அவ வாழ்க்கையை அவளே வாழணும்னு ஆசைப்படுறா!வாழட்டும்மா!இன்னும் எந்தக் காலத்துல இருக்க நீ?"

"ஒரு பையன் எப்படி வேணும்னாலும் வாழலாம்!ஆனா,ஒரு பொண்ணு வாழ சில வரைமுறை இருக்குங்க!"-அதுவரை ஏதே எழுதிக் கொண்டிருந்தவர் எழுதுவதை நிறுத்திவிட்டு தன் மனையாளை உற்று நோக்கினார்.

"அது உண்மையா இருந்தா,நான் கூட தான் எப்படியோ போயிருக்கலாம்!உனக்கு சமமான மரியாதை கொடுக்காம,உன்னை பொம்மை மாதிரி என்னால நடத்தி இருக்க முடியாதா சொல்லு?இத்தனை வருஷத்துல உன்கிட்ட சொல்லாம எதையாவது செய்திருக்கேனா?அப்பறம் நீ எப்படி பெண்கள் இப்படி தான் வாழணும்னு பிடிவாதம் பிடிக்கிற?"

"............."

"சிவன்யா விருப்பப்படி வாழட்டும்!ஒருவேளை,அவ மனசுல வேற யாராவது பையன் இருந்தா அவனையே...."-மகளின் நடவடிக்கைகளிலிருந்து தான் யூகித்த ஒன்றை பட்டும் படாமல் அவர் வெளிக் கொணர,மீனாட்சியின் முகத்தில் ஒரு பிரளயமே வெடித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.