(Reading time: 15 - 30 minutes)

‘நீ பெரியவளா நான் பெரியவளா உனக்கு அதிகம் உரிமையா எனக்கு அதிகம் உரிமையா’ இப்படி ஏதும் இல்லாமல் என் அண்ணாவுக்கு நான் முக்கியம் என்றால் எனக்கு நீ முக்கியம் என்கிறாள் வர்ஷினி. கணவனாக வரித்துக் கொண்டவனின் அத்தை மகளை, தங்கையானவளை தனது குழந்தையாய் அரவணைத்துக் கொள்கிறாள் காயத்ரி.

ஒற்றைப் பெண்ணாய் வளர்ந்தாலும், வருண் வர்ஷினியின் பாசப்பிணைப்பில் தன்னையும் அழகாய் இணைத்துக் கொண்டுவிட்டாள் காயத்ரி.

தாய் தந்தை இல்லாத போதும் உறவின் பாசத்தைப் பரிபூரணமாக பெற்றிருந்த வர்ஷினிக்கு காயத்ரியோடு அன்பாய் ஒட்டிக் கொள்வது இயல்பாய் வந்து விட்டிருந்தது.

இப்படி ஓர் தெளிவும், புரிதலும், அன்பும் உறவுகளுக்கு இடையில் இருப்பின் வாழ்க்கை சொர்க்கம் தானே.

நிச்சயதார்த்த நாள் நெருங்க ஜெயகுமார் பவானிக்கும் உதவிகள் செய்து கொண்டு எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டிருத்தாள் வர்ஷினி. காயத்ரியின் பெற்றோரிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவள் குறும்புத்தனத்தை வெகுவாய் ரசித்தனர்.

“அத்தை அண்ணியோட போட்டோஸ் ஆல்பம் குடுங்க. சின்ன வயதில் இருந்து இப்போ வரை எல்லாமே வேணும். அண்ணிகிட்ட இது பத்தி எதுவும் சொல்ல கூடாது என்ன ....இட்ஸ் எ சர்ப்ரைஸ்” ஓர் நாள் பவானியின் காதில் ரகசியம் சொன்னாள் வர்ஷினி.

“எதுக்கு போட்டோஸ்ன்னு சொல்லவே இல்ல. இதுல என்ன சீக்ரட் இருக்கு” பவானியும் போட்டு வாங்கினார்.

“சரி கிட்ட வாங்க. நான் ஒரு விடியோ கம்பைல் செய்ய போறேன். அண்ணா அண்ணி பத்தி போட்டோஸ் சாங்க்ஸ் எல்லாம் வச்சு. எனக்கு உங்க ஹெல்ப் கண்டிப்பா வேணும். அண்ணிக்கு பிடிச்ச போட்டோஸ் அண்ட் சாங்க்ஸ் சொல்லுங்க” மீண்டும் காதுக்குள் ஓதினாள்.

“உன் நல்ல மனசுக்கு நல்ல புருஷன் கிடைச்சு மனம் நிறைய சந்தோஷமாய் நீ வாழணும் அம்மு” உணர்ச்சி பெருக்கில் வாழ்த்தினார் பவானி.

ஆனால் அந்த வாழ்த்தைக் கேட்ட வர்ஷினியின் இதயம் தான் கனத்து போனது.

தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் பவானியிடம் சிறிது நேரம் பொதுவாக விழா பற்றி பேசிவிட்டு விடை பெற்றாள்.

சுற்றிலும் அழைப்பு மடல்கள் பரப்பியிருக்க லிஸ்ட்டில் இருந்து பெயர்களை வருண் படிக்க படிக்க இன்விடேஷனில் வர்ஷினி அழகாய் எழுதிக் கொண்டே வந்தாள்.

காயத்ரி எவரேனும் விடுபட்டு விட்டனரா என்று லிஸ்ட்டை சரி பார்த்து கொண்டிருந்தாள்.

“டாக்டர் சிவகுமார் எழுதிட்டியா” வருண் சொல்லிக்கொண்டே போக அந்த வண்ணப் பேனாவை கீழே வைத்து விட்டு அவனை முறைத்தாள்.

“நான் எழுத வேண்டாமா. இது என்ன சுருக்கெழுத்தா. கடகடன்னு சொல்லிட்டே போற”

“டைப் செய்து பிரின்ட் அவுட் எடுக்கலாம்ன்னு சொன்னாலும் கேக்கல. எல்லோருக்கும் கைப்பட எழுதி இன்விடேஷன் கொடுக்கணும்னு சொல்லியாச்சு. சரி நாங்க ஹெல்ப் செய்றோம்னு சொன்னாலும் எல்லாத்தையும் நானே எழுதுவேன்னு அடம் செய்தாச்சு. இப்போ கை வலிக்குது தானே. குடு நான் எழுதறேன்” வருண் வர்ஷினியின் விரல்களைப் பற்றி நீவி விட்டபடியே பேனாவை எடுக்க முயல தடுத்தாள் வர்ஷினி.

“ஹலோ டாக்டர் இது ஒன்னும் பிரிஸ்கிரிப்ஷன் இல்ல. அண்ணியும் நீயும் எழுதினா உங்களுக்கே என்ன பேர் எழுதினோம்ன்னு தெரியாது. அதான் நானே எழுதறேன்னு சொன்னேன். இது தப்பா. என்ன அண்ணி சொல்றீங்க” காயத்ரியை பஞ்சாயத்து செய்ய அழைத்தாள்.

அந்த நேரம் மூவருக்கும் பழச்சாறு எடுத்து வந்த லக்ஷ்மி இவர்கள் உரையாடலை கேட்டு சிரித்தார்.

“இது நாள் வரை நான் நாட்டாமை வேலை செஞ்சுட்டு இருந்தேன். இனி உன் பாடுமா” என்று காயத்ர்யின் தலையை மெல்ல வருடிய படி சொல்லவும்

“அத்தை நீங்கலாம் ஒரு மாமியார், அண்ணி நீங்க மருமகளா... டாம் அண்ட் ஜெர்ரியா இருக்காம ஜீராவும் குலாப் ஜாமுனுமா இருக்கீங்களே” வர்ஷினி வம்பிழுக்க

“உலகத்தில் உள்ள மொத்த வாலையும்  குத்தகைக்கு எடுத்திருக்கா இவ” லக்ஷ்மி வர்ஷினியின் தலையில் செல்லமாய் கொட்டினார்.

“நோ நோ ஆல் பிக் வால்ஸ் ஒன்லி மை ஆஞ்சிநேயர்ஸ்” அதற்கும் சரிக்கு சரி பதில் வைத்திருக்கவும் ஓர் கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தார் லக்ஷ்மி.

“சரி அண்ணா நெக்ஸ்ட்” வர்ஷினி வருணிடம் கேட்க அவன் லிஸ்டை பார்த்து

“டாக்டர் கணேஷ் ராம் அண்ட் பேமிலி” என்று சொல்லவும் டாக்டர் என்று எழுதிய அவளது கரம் மேற்கொண்டு எழுத முடியாமல் நடுக்கம் கொண்டது.

“டாக்டர் கணேஷ்கிட்ட சொல்லிடீங்களா வருண்” காயத்ரி கேட்க

“நான் அல்ரெடி சொல்லிட்டேன். கண்டிப்பா அவர் அம்மா அப்பாவோட வரேன்னு சொல்லிருக்கார்” என்று வருண் கூறினான்.

“அவருக்கு இன்னும் மேரேஜ் ஆகலைல வருண். என்கேஜ்மன்ட்க்கு என் சித்தப்பா பொண்ணு ஷாலினி வருவா. இன்ட்ரோ செய்து வைக்கலாமா. நல்ல மேட்ச்சா இருப்பாங்க” காயத்ரி சொல்லவும் சட்டென ஓர் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.