(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா

Kannathil muthamondru

வீடு நோக்கி வந்துக்கொண்டிருந்தனர் ஷங்கரும், கீதாவும். இறுகிய மௌனத்துடன் பைக்கில் அவன் பின்னால் அமர்ந்திருந்தாள் அவள். ஸ்வேதாவின் வீட்டில் அவன் அவளிடம் காட்டிய இறுக்கம் அவளை உலுக்கி இருந்தது.

எப்போதும் அவனது தோளை பிடித்துக்கொண்டு அளவளாவிக்கொண்டு வரும் மனைவியின் இன்றைய மௌனம் அவனுக்கு புரியாமல் இல்லை

ஷங்கர்! பொதுவாக வீட்டை பொறுத்தவரை அவன் அம்மாவுக்கு கட்டுப்பட்ட அன்பான மகன், அருமையான அண்ணன், பாசமான கணவன். அதே நேரத்தில் வெளியே? வண்டியை ஓட்டிக்கொண்டே தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் ஷங்கர்.

அவன் அணிந்திருந்த அந்த சீருடை அவனது கம்பீரத்தையும், கண்ணியத்தையும் பறை சாற்றியது. கண்ணியம்? ஆம் கண்ணியமானவன்தான்.

மறுபடியும் ஒரு முறை ஹரிஷின் நினைவு வந்து போனது அவனுக்கு. இத்தனை நாட்களில் அந்த ஒரே ஒரு முறை தவிர மற்ற எல்லா நேரங்களில் கண்ணியமானவனாகவே இருந்திருக்கிறான். தனது கடமையை செய்திருக்கிறான். ஆனால் அந்த ஒரே ஒரு முறை?

நடந்தது எல்லாம் இவளால் என்று சொல்வதா? இவளுக்காக என்று சொல்வதா?

கண்ணாடியின் ஒரு பக்கத்தில் தெரிந்த மனைவியின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சாலையில் பார்வையை வைத்துக்கொண்டான் ஷங்கர்.

தே நேரத்தில் அங்கே அனுவின் வீட்டில்

ஹரிஷை நோக்கி கூர்மையாய் ஒரு விழி வீச்சு அவளிடமிருந்து. அன்று மைதானத்தில் ஹாட்ரிகை எதிர்நோக்கி இருந்தானே. ரகு கேட்ச் என்று கூவினானே! அவன் பிடித்துவிடுவானா பந்தை என்று தவித்தானே. அந்த தவிப்பெல்லாம் ஒன்றுமே இல்லை என்று கேலி செய்தது இந்த விழி வீச்சு!

‘என்னடி சொல்ல காத்திருக்கிறாய் என் தேவதையே!’ அவளை விட்டு விழி அகற்றாமல் உயிரை கையில் பிடித்து காத்திருந்தவனை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தாள் அனுராதா.  நிச்சயமாய் அவனுக்குள் பல நூறு அணுகுண்டுகள் வெடித்திருக்கும் என்றே அவளுக்கு தோன்றியது.

பெரியம்மாவுக்கு இது நிச்சியமாக பிடிக்காது என ஒரு உள்ளுணர்வு அவளுக்கு சொல்லிக்கொண்டே இருந்தது. அதனோடு சேர்த்து ஷங்கர்!

அன்று அவள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தை பார்க்க போவதற்கு முன்னதாகவே அவன் கேட்டானே

‘அண்ணன் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?’

‘ஹேய்... சொல்லு குரங்கு ...எதுக்கு சும்மா பில்ட் அப் எல்லாம் கொடுக்கிறே..’

‘இல்ல அது வந்து.... உனக்கு ஹரிஷ் ரொம்ப பிடிக்குமா அனு? அவனுக்குன்னு மனசிலே ஏதாவது ஸ்பெஷலா.....

கொஞ்சம் திடுக்கென்றது இவளுக்கு. இருப்பினும் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல்

‘அப்படி எல்லாம் இல்லை அவன் சும்மா ஃப்ரெண்டுதான். ஏன் அப்படி கேட்கிறே? இவள் தயக்கத்துடன் மறுக்க

‘அதானே... எங்க அனு அப்படி தப்பெல்லாம் பண்ணாது. அவனெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்தா சரியா வராது. நீ அண்ணனுக்கு பிடிக்காததை செய்ய மாட்டே இல்ல? அவன் கேட்க என்ன சொல்வதென்பதை அறியாது தலை அசைத்து வைத்தாள் அனுராதா.

‘குட் வேண்டாம் அதுதான் உனக்கு நல்லது’ அவன் சொன்ன போது அவன் கண்களில் இருந்த தீவிரம் அவளை சுருக்கென தைத்தது. அவன் ஏன் இப்படி சொன்னான்? என்னதான் யோசிக்கிறான் என்று இப்போது வரை புரியவில்லைதான் அனுராதாவுக்கு.

னம் எங்கெங்கோ சுற்றித்திரும்ப அவனை பார்த்து இடம் வலமாக தலை அசைத்துவிட்டு மெல்ல விழிகளை தாழ்த்திக்கொண்டாள் அனுராதா.

அதிர்ச்சியோ, ஏமாற்றமோ, தோல்வியின் பாவமோ இது எதுவுமே எழவில்லை ஹரிஷினிடத்தில். மெதுமெதுவாய் ஒரு சின்ன புன்னகை மட்டுமே அவன் இதழ்களில் ஏற சோபாவை விட்டு எழுந்தவன் பெரியப்பாவை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு அவளருகில் வந்தான்.

‘தலை ஆட்டினா எல்லாம் எனக்கு புரியாது. வாயை திறந்து சொல்லணும் பிடிச்சிருக்கா? பிடிக்கலையா?

சட்டென ஒரு முறை நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு விழிகளை தாழ்த்திக்கொண்டாள் அனுராதா. மறுபடியும் அதே தலை அசைப்பு.

‘வாயை திறந்து சொல்லு..’ சற்றே அழுத்தமாக சொன்னான் ஹரிஷ். அவளால் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது என அவனுக்குத்தான் உறுதியாக தெரியுமே! அசைவில்லை அவளிடம்.

‘அனு என்னடா நீ?’ பெரியப்பா எழுந்து வர

‘இல்ல அங்கிள். அவ மனசிலே ஏதோ ஒரு குழப்பம். அது என்னனு புரியலை’ என்றான் அவன். ‘யோசி அனும்மா. உனக்கு சரியா மூணு நாள் டைம். அதுக்குள்ளே உன் முடிவை சொல்லு. பிடிக்கலைன்னாலும் என் முகத்தை பார்த்து நேரடியா சொல்லணும்’ என்றான் அவளை பார்த்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.