(Reading time: 15 - 29 minutes)

‘டைம் எல்லாம் வேண்டாம்..’ என்றாள் மெலிதான குரலில்.

‘சரி அப்போ இப்போவே சொல்லு..’ அவன் சொல்ல பதிலில்லை அவளிடத்தில்.

பெருமூச்சுடன் கலந்த புன்னகையுடன் பெரியப்பாவின் பக்கம் திரும்பினான் ஹரிஷ் ‘அவளாலே என்னை பிடிக்கலைன்னு சொல்ல முடியாது அங்கிள் அது மட்டும் எனக்கு கண்டிப்பா தெரியும். இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நீங்க வேணும்னா பாருங்க திங்கட்கிழமை ராத்திரிகுள்ளே கையிலே சாக்லேட்டோட மேடம் என் முன்னாடி வந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாங்க’

‘அதெல்லாம் மாட்டேன்’

‘சொல்லுவே அனும்மா..’

‘அப்படி நான் வரலன்னா சம்மதம் இல்லைன்னு எடுத்துக்கணும் சரியா’ அவசரமாக சொன்னாள் அவள். அவன் முன்னால் சென்று சம்மதம் இல்லை என்று சொல்லும் துணிவு, உன்னை பிடிக்கவில்லை என பொய் சொல்லும் தைரியம் சுத்தமாக இல்லை அவளிடத்தில்.

‘திங்கட்கிழமை பார்க்கலாம் அனும்மா.’ என்றான் அவன் விடாமல். பெரியப்பா இருவரையும் வியப்பு கலந்த புன்னகையுடன் பார்த்திருந்தார்.

‘’நீங்க கவலை படாதீங்க அங்கிள். நான் எங்கப்பாகிட்டே சின்னதா ஒரு ஹின்ட் கொடுத்திட்டுதான் இங்கே வந்தேன். மேடம் மண்டே ஒகே சொல்லிடுவாங்க. அதுக்கு அப்புறம்  எல்லாம் சரியா நடக்கும். நான் வரட்டுமா’ என்றபடி அவருடன் கை குலுக்கினான்.

‘எங்களோட வாழ்க்கைக்கு முதல் பச்சை கொடி நீங்கதான் காமிச்சு இருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்’ அழகான புன்னகையுடன் சொல்லிவிட்டு அவளையும் பார்த்து தலை அசைத்துவிட்டு தொப்பியையும் கண்ணாடியும் அணிந்துக்கொண்டு நகர்ந்தான்.

அவனை வாசல் வரை சென்று வழி அனுப்பினார் பெரியப்பா. அவன் கார் நகர மிகப்பெரிய யோசனையில் விழுந்தது பெரியப்பாவின்  மனம்.

‘அனு ஏன் யோசிக்கிறாள்?’ என்ற கேள்வி ஒரு புறமிருக்க ‘நான் எங்கப்பாகிட்டே சின்னதா ஒரு ஹின்ட் கொடுத்திட்டுதான் இங்கே வந்தேன்’ அவன் சொன்ன அந்த வார்த்தையிலேயே சிக்கிக்கொண்டது அவர் மனம்.

அவன் தந்தை சுவாமிநாதன்! அந்தஸ்திலும், கௌரவத்திலும் மிகப்பெரிய மனிதர் அவர்!

‘மகன் தனது காதலை பற்றி அவரிடம் தைரியமாக சொல்கிறான் என்றால் அந்த அளவு சுதந்திரமும், நம்பிக்கையும் கொடுத்துதான் அவனை வளர்த்திருக்கிறார்.’ அவரை பற்றி நினைக்கும் போதே மனதிற்குள் ஒரு மரியாதை பிறந்தது பெரியப்பாவுக்கு.

‘அதே நேரத்தில் அனு இந்த வீட்டு பெண், ஷங்கரின் தங்கை என்பதை அவன் அப்பா அறிந்திருக்க நியாயம் இல்லை. அது தெரிந்தால் இந்த திருமணத்துக்கு எப்படி சம்மதம் சொல்வார் அவர்? நானே அவர் இடத்தில் இருந்தால் கூட கண்டிப்பாக சம்மதிக்க  மாட்டேனே?’ குழம்பி தவித்தது அவர் மனம்.

வனது கார் அவர்கள் தெருவை தாண்டி நகர, வாசல் வந்து சேர்ந்தது ஷங்கரின் வண்டி. ரகுவின் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது ஹரிஷின் கார்.

வீட்டுக்குள் வந்தான் ஷங்கர். கீதா உள்ளே சென்று விட சொல்லி வைத்ததை போல் அவனது பார்வை நேராக சென்று சேர்ந்தது டைனிங் டேபிளின் மீது. அதன் மீதிருந்தன அனுவுக்கென ஹரிஷ் வாங்கி வந்த பரிசு பொருட்கள்.

‘யார் வந்திருந்தாங்க அனு?’ அவன் பார்வை அனுவை ஏனோ குடைந்தது.

‘யாரும் வரலை. இதெல்லாம் நான்தான் அனுவுக்கு வாங்கிட்டு வந்தேன். அடுத்த மாசம் அவளுக்கு பிறந்தநாள் வருதில்ல அதுக்குதான்..’ ஷங்கரின் பின்னாலேயே உள்ளே வந்த பெரியப்பாவிடமிருந்து வந்தது பதில்.

‘அனு நீ இதெல்லாம் உள்ளே எடுத்திட்டு போய் வைமா’ என்றபடியே அவரது பதிலில் சற்றே திகைத்து போன அனுவை பார்வையால் சமாதான படுத்தினார் பெரியப்பா.  எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் அனு.

பெரிய பணக்கார தோரணைகள் இல்லாத எளிமையான அதே நேரத்தில் அன்பு நிறைந்த வீடாகத்தான் இருந்தது ரகுவின் வீடு.

‘அப்பா ஸ்கூல் டீச்சர்டா..’ முன்பு எப்போதோ அவன் சொன்ன நினைவு ஹரிஷுக்கு. வீட்டில் இருந்த கார் மட்டும் சற்றே புதிதாக இருந்தது. ரகு சில நாட்களுக்கு முன் வாங்கி இருக்க வேண்டுமென தோன்றியது.

ஹரிஷுக்கு அங்கே சந்தோஷமான வரவேற்பு காத்திருந்தது. அவன் ரகுவின் வீட்டுக்கு வருவது அதுவே முதல் முறை. அவனது அம்மாவும் அப்பாவும் தங்கையும் என அனைவரும் அவனை விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டிருந்தனர். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

ஹரிஷ்தான் தவறு செய்து விட்டானோ? கேட்டிருக்கூடாதோ? ரகுவை பார்த்து வெகு சாதாரணமாகத்தான் கேட்டான்  அந்த கேள்வியை.

‘உன் வொய்ஃப் எங்கேடா? நான் அவங்களை மீட் பண்ணவே இல்லையே?’

‘இதோ ஒரு நிமஷம் வந்திடறேன்’ ரகுவும் இயல்பான புன்னகையுடன்தான் நகர்ந்தான். அறையின் கதவை லேசாக தட்டிவிட்டு ஸ்வேதாவின் அறைக்குள் நுழைந்தான் ரகு.

‘என்னமா பண்றே?’ கட்டிலில் கவிழ்ந்து கண்மூடி படுத்திருந்தவளை மெல்ல அழைத்தான் ரகு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.