(Reading time: 15 - 30 minutes)

அமேலியா - 36 - சிவாஜிதாசன்

Ameliya

ரவு முழுவதும் கனவுலகுடன் வசந்தின் தூக்கம் பயணித்தது. அவன் ஆழ்மனதிலுள்ள ஆசைகள் அதில் உலாவின. கற்பனைக்கு எட்டா அதிசயங்களில் மூழ்கியவன் கொட்டாவி விட்டபடி எழுந்தான்.

தன் உடலைப் போர்த்தியிருந்த போர்வையை குழப்பத்துடன் நோக்கியவன் அமேலியாவை பார்த்தான். அவளுக்கு போர்த்திய போர்வை தனக்கு எப்படி வந்தது என்று சிந்தித்தவன், அமேலியாவே எழுந்து வந்து தனக்கு போர்த்தியிருப்பாளோ என்று எண்ணினான். ஒரு வேளை, தானே குளிர் தாங்காமல் தூக்கக்கலக்கத்தில் அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டேனா என்றும் சிந்தனையில் இறங்கினான். அவன் அவ்வாறு சிந்தித்ததற்கு காரணமும் இருந்தது. சிறுவயதில் மேகலாவின் போர்வையை அப்படித்தான் அபகரிப்பான்.

அமேலியாவின் உறக்கம் இன்னும் கலையவில்லை. அவளை பார்த்துக்கொண்டே இருக்கும்படி அவன் மனது துடித்தது. நேரம் என்ன ஆனது என்று கூட தெரியவில்லை. மின்சாரமும் வரவில்லை, மழையும் விட்டபாடில்லை. ஆனால், வசந்த் சந்தோசமாகத்தான் இருந்தான்.

அமேலியா சிறு முனகலோடு உறக்கத்தில் இருந்து எழுந்தாள். அவள் பார்த்த முதல் காட்சி வசந்தின் முகமாக இருந்தது. வசந்தின் இதழில் சிறிய புன்னகை. அமேலியாவும் புன்னகை புரியலாமா என எண்ணினாள். ஆனால், புன்னகைக்கவில்லை. அவளது கண்கள் அவளையறியாமல் புன்னகை செய்தன.

பிடித்தவர்கள் உடனிருந்தால் நரகம் கூட சொர்க்கமே. அந்த வகையில் அமேலியாவும் வசந்தும் சொர்க்க பூமியில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். விழிகள் பேசிக்கொண்டன, இதழ்கள் பேச மறந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் சில நிமிடங்கள் இருவரும் ஒருவரையொருவர் திருட்டுத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

மழைத் துளியின் ஆனந்த ராகம் ஓயாமல் இசைத்துக்கொண்டிருந்தது. பகலா இரவா என்கின்ற பேதத்தை உணர முடியாமல் கருமேகங்கள் மறைத்துக்கொண்டிருந்தன.

இருவருக்கும் உணவில்லை, உறக்கமில்லை. ஆனால், கவலையில்லாமல் அவர்களால் இருக்க முடிந்தது. அமேலியாவின் பெண்மைக்குரிய நாணம், வசந்தின் ஆண்மைக்குரிய கவர்ச்சி இரண்டும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருந்தன. 

மழை விடாமல் தூறிக் கொண்டிருந்ததால் சாலை முழுவதும் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. ஏகப்பட்ட மக்கள் புயலால் வீடிழந்து, இருக்க இடமில்லாமல் வாழவே முடியாத பரிதாப சூழ்நிலையில் இருப்பார்களே என வசந்த் வருத்தமுற்றான்.  

அமேலியாவின் காய்ச்சல் இன்னும் குறையவில்லை அதனால் அவள் மிகவும் பலவீனமாக காணப்பட்டாள். அவளது மூச்சுக் காற்று அனலாக வெளிவந்தது.

அமேலியாவின் சோர்ந்த முகத்தைக் கண்ட வசந்த், எழுந்து சமையலறைக்குச் சென்றான். காபி போடுவதற்கு பாலில்லை. வெறும் காபி தூளை வைத்து கருங்காபியை தயார் செய்தான் வசந்த். பசியோடு வாடுவதற்கு இந்த சமையல் எவ்வளவோ பரவாயில்லை என்று அவனுக்கு தோன்றியது.

சமையலறையில் இருந்தபடியே அவ்வப்போது அமேலியாவை பார்த்தான்.  தன்னைத்தான் காண்கிறான் என்ற உண்மை அமேலியாவிற்கு தெரிந்தும் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியுடன் இருந்தாள். அவளது  கண்களும் அவ்வப்போது வசந்தை நோக்கின.  

சிறிது நேரத்தில் காபியோடு அமேலியாவை நோக்கி வந்த வசந்த் அவளிடம் கப்பை நீட்டினான். எந்த மறுப்பும் கூறாமல் அமேலியாவும் வாங்கிக் கொண்டாள். முதன் முதலில் வசந்திடம் வாங்கிய அனுபவம் அமேலியாவிற்கே புதுமையாக இருந்தது.

காபி கப்பை எடுத்து நடுக்கத்துடன் வாயில் வைத்த அமேலியாவிற்கு காபியின் நெடி இருமலை வரவழைத்தது. உடனே, தனது கப்பை கீழே வைத்துவிட்டு அவளது கப்பை வாங்கிய வசந்த் அவளருகில் அமர்ந்து அவளுக்கு காபி குடிக்க உதவி செய்தான். 

பயத்தில் அமேலியா பின்வாங்கினாள். ஆனால் வசந்த் விடாப்பிடியாக காபியை குடிக்க வைத்ததால் வேறு வழியில்லாமல் குடித்தாள். அவள் இதயம் படபடவென துடித்தது, இமைகள் பட்டாம்பூச்சி போல் சிறகடித்தன. வசந்தின் மேலிருக்கும் புரியாத பாசம் கூடிக்கொண்டே சென்றது.

அவளது அனல் மூச்சு வசந்தின் கையில் பட்டு அவளுக்கிருக்கும் காய்ச்சலை அவனிடம் சொன்னது. அவளது நெற்றியில் கை வைத்து காய்ச்சலை பரிசோதிக்க எண்ணினான். அவனது மனம் லேசாக பயந்தது அமைதி காத்தான்.  

காபியின் நெடி மீண்டும் அமேலியாவிற்கு இருமலை வரவைத்தது. அது தான் சமயம் என எண்ணிய வசந்த் அவள் நெற்றியை தொட்டுப் பார்த்து காய்ச்சலை பரிசோதித்தான். அமேலியா அவன் தொடுதலை நிராகரித்து தள்ளி அமர்ந்தாள். அவளது உணர்வை புரிந்துகொண்ட வசந்தும் அங்கிருந்து எழுந்து சென்றான். இயற்கையின் சதியில் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வசந்த் இருந்தான்.  

அது போன்ற சூழலை அமேலியா சந்தித்ததில்லை என்பதனால் பயமும் பதட்டமும் அதே நேரத்தில் இன்பமும் அடைந்தாள். வசந்தின் அக்கறை அவளுக்கு லேசான ஆறுதலையும் கொடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.