(Reading time: 15 - 30 minutes)

சந்தும் அமேலியாவும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் அந்த உணர்வின் பெயர் காமமற்ற தூய்மையான அன்பு. காமத்தை அன்பாக கருதி விட முடியாது. காமமும் அன்பு தான் என்று கூறுபவர்களும் உண்டு. அந்த அன்பை விலைமாதுவிடம் கூட பெற்றுக்கொள்ள முடியும். காமமில்லா கள்ளம் கபடமற்ற அன்பு தூய நறுமணத்தை போன்றது. அந்த நறுமணத்தை நுகர்ந்தால் தெய்வத்தின் தன்மை காட்சியளிக்கும். அது போன்ற தூய்மையான அன்பைத்தான் மௌனத்தில் இருவரும்

பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.  

அமேலியாவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் வசந்த் வார்த்தைகளால் அவளை ஆறுதல்படுத்தியிருப்பான். தன்னுடைய இலட்சியத்தை கூறியிருப்பான். தான் கடந்து வந்த பாதை, தன் இன்ப துன்பங்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் பட்டியலிட்டு இருப்பான். அதன் பின் வேறு என்ன பேசுவது? தன்னுடைய காதலை சொல்லவும் வாய்ப்புண்டு. அவன் ஆசை கொண்ட காதலும் கிடைத்துவிட்டால், வேறு என்ன பேசுவது? தங்களுடைய வாழ்நாள் ஆசையை பேசலாம். அதற்கு பிறகு, என்ன பேசுவது? என்ன பேசுவதென்று யோசிக்க தோன்றும். பிறகு, ஏதோ பேச வேண்டுமே என்று பேசுவார்கள். இப்படியே தான் காலம் ஓடும்.

மௌன மொழி அப்படியல்ல. அது மனங்களோடு தொடர்பு கொள்ளும். தெய்வம் பேசாததற்கும் இது தான் காரணம். கோவிலுக்கு செல்லும் பக்தன் தெய்வத்திடம் மனதிற்குள்ளிருக்கும் மௌனத்தை தான் பேச வைப்பான். அதில் தான் நிம்மதியும் அடங்கியிருக்கிறது.

மெழுகுவர்த்தி தன் ஆயுளை முடித்துக்கொண்டு வெளிச்சத்தை நிறுத்தியது. அந்த நேரத்தில் கொடிய மின்னல் ஒன்று பளிச்சிட்டு அடுத்த சில நொடிகளில் இடியும் இடித்தது.

அமேலியா பயந்து கடவுளின் பெயரை உச்சரித்தாள். ஈராக்கில் தான் வாழ்ந்த நாட்களை எண்ணிப் பார்த்தாள். விளக்கொளி இல்லாமல் தீவிரவாதிகளுக்கும் போலீசுக்கும் பயந்து இருளிலேயே கழித்திருக்கிறாள். அந்த நேரத்தில் அவளுக்கு துணையாய் அவளுடைய அம்மா இருப்பார். அது போன்ற கடினமான நினைவுகளை நினைத்து வெகு நாட்களாகி விட்டன.

வேறொரு மெழுகுவர்த்தியை கண்டுபிடிக்க வசந்திற்கு பத்து நிமிடத்திற்கு மேல் ஆனது. மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை நோக்கினாள் அமேலியா. இன்னும் எத்தனை நாள் தான் இந்த அறையிலேயே அடைந்து கிடப்பது என்று எண்ணியவள் நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தாள்.

புத்தக அலமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்தான் வசந்த். இருளில் தான் தேடியது கிடைக்கவில்லை என்பதனால் கொஞ்சம் டென்ஷனாக இருந்தான். மெழுகுவர்த்தியை எடுத்துக்கொண்டு வசந்திடம் சென்று அவன் தேடுவதற்கு வெளிச்சத்தை கொடுத்தாள் அமேலியா.

திடீரென அமேலியா தன் பின்னால் வந்து நிற்பதை பார்த்த வசந்த், இதழ்களில் புன்னகையை ஓட விட்டான். என்ன தேடுகிறான் என்ற கேள்வியை பார்வையால் கேட்டுக்கொண்டே நடப்பதை வேடிக்கை பார்த்தாள் அமேலியா.  

அவளது பார்வையைப் புரிந்துகொண்ட வசந்த், "என்ன தேடுறேனு பாக்குறியா? ரொம்ப நாள் முன்னாடி ஜெஸிகாவுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருந்தேன். அதை தான் தேடுறேன்" என்றபடி தேடினான் வசந்த். அவன் சொன்னதை புரிந்து கொண்டதை போல் அமேலியா அவன் தேடுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஆங் கிடைச்சிடுச்சு இது தான் அந்த புத்தகம்" என்று அமேலியாவிடம் காட்டினான் வசந்த்.

அட்டைப் படத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசத்தில் காதலர்கள் இருவரும் கைபிடித்து வானில் செல்லும் பறவைகளை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த புத்தகத்தை கொடுக்குமாறு தன்னையறியாமல் கை நீட்டினாள் அமேலியா. முதன்முதலாக தன்னிடம் கேட்கும் அமேலியாவின் கோரிக்கையை வசந்தால் எப்படி நிராகரிக்க முடியும். அடுத்த நொடியே அவளிடம் புத்தகத்தை கொடுத்தான். 

அட்டைப் படத்திலிருக்கும் காதலர்களையே சில நிமிடங்கள் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் அமேலியா. எந்த அளவுக்கு தன்னை மறந்திருந்தாள் என்றால், மலையே உடைந்து விழும் அளவிற்கு இடி இடித்தும் கூட அவள் அசையாமல் இருந்தாள்.  

அந்த ஓவியத்திலிருக்கும் காதலர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களுக்குள்ளிருக்கும் அன்பு அவர்களது கண்களில் நன்றாகவே பளிச்சிட்டது. அதுமட்டுமில்லாமல் தனிமையில் இயற்கையோடு அவர்கள் வாழும் பகுதி அமேலியாவிற்கு ரொம்பவே பிடித்து போனது.

அடுத்த பக்கத்தை ஆவலோடு திருப்பி பார்த்தவள் எழுத்துக்கள் நிறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானாள். காதலர்களின் ஓவியமிருக்கும் என்று எதிர்பார்த்தவளுக்கு அதற்கு பின் ஏமாற்றமே மிஞ்சியது.

ஓவியத்தை ரசித்த அமேலியாவை ரசித்துக்கொண்டிருந்த வசந்த் கனவுலகில் மிதந்துகொண்டிருந்தான். சோகமுகத்தோடு வசந்திடம் புத்தகத்தை நீட்டினாள் அமேலியா. வசந்த் புத்தகத்தை வாங்காமல் சிலையென நின்றிருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்த அமேலியா லேசாகத் தொண்டையை செருமினாள். அதிர்ந்தபடி வசந்த் நிகழ்காலத்திற்கு வந்தான்.

"அதுக்குள்ள படிச்சிட்டியா?" என்றவன் தன் தலையில் லேசாக தட்டிக்கொண்டு,."உனக்கு தான் ஆங்கிலம் தெரியாதே" என்றான்.

'இந்த ஓவியம் ஏன் புத்தகத்தினுள் இல்லை' என்று தயக்கத்தோடு சைகையில் கேட்டாள் அமேலியா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.