(Reading time: 15 - 30 minutes)

'திடீரென்று இவளுக்கு என்ன ஆனது?' என்று தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்ட வசந்த் மீண்டும் படிப்பதில் கவனம் செலுத்தினான். பாதி கதையை படித்த வசந்திற்கு லேசாக உறக்கம் வந்தது. கொட்டாவி விட்டபடியே புத்தகத்தை மூடிய வசந்த், திரும்பி படுத்திருந்த அமேலியாவை நோக்கினான்.  

அமேலியா வரைந்த காகிதங்கள் காற்றில் சலசலத்து அவற்றின் மீது வசந்தின் கவனத்தை விழச் செய்தன. அதை எடுத்து பார்த்தான் வசந்த். அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. ஓவியத்திலேயே கதையை வடித்திருந்தாள் அமேலியா.

அட்டைப் படத்திலுள்ள காதலர்களை முதலில் வரைந்திருந்தவள், அதன் பின் அவர்களது வாழ்க்கை முறைகளை படமாக வரைந்திருந்தாள். அது படமா? அல்ல அல்ல. மனதை வருடும் கற்பனையின் காவியம்!

அந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. இருவரும் மகிழ்கிறார்கள். உயிர் வாழத் தேவையான உணவினை தாங்களே உற்பத்தி செய்கிறார்கள். இயற்கை அன்னையின் கருணையால் மழை பெய்து பயிர் வளர்ந்து அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. அதை மற்ற உயிரினங்களுக்கும் பிரித்து கொடுத்து தாங்களும் உண்டு வாழ்கிறார்கள்.

சிறிய குழந்தை வளர்கிறாள். மரங்களோடும் பறவைகளோடும் விளையாடுகிறாள். சிறகு முளைத்து வானில் பறக்கிறாள், தங்கள் குழந்தை விண்ணில் பறப்பதை ஆச்சர்யத்தோடும் மகிழ்ச்சியோடும் பார்க்கிறார்கள்.

விஞ்ஞான சாதனங்கள் எதுவும் இல்லாமல் அவர்களது காலம் ஓடுகிறது. அவர்களின் மகிழ்ச்சி குறையவே இல்லை. அதற்கான காரணத்தை அமேலியா நுட்பமாக சொல்லியிருந்தாள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் உறக்கம் கொள்ளும்போது அன்று நடந்தவை எல்லாம் மறந்து காலையில் புதிய மனிதர்களாய் விழிக்கிறார்கள். ஏற்கனவே பார்த்த இடங்கள் எல்லாம் அவர்களுக்கு நினைவில்லாமல் போனதால் தினமும் புதிய உலகத்தில் பிறந்தது போல் உணர்ந்தார்கள். பார்த்து சலித்தால் தானே வாழ்க்கை வெறுப்படையும். மறதி என்ற நிம்மதியை அமேலியா என்னும் தேவதை அவர்களிடத்தில் கொடுத்திருந்தாள். அவர்களது வாழ்க்கை என்றுமே மகிழ்ச்சி நிரம்பியதாக இருந்தது.

அவர்களின் வாழ்க்கை முறையை தத்ரூபமாக ஓவியமாய் தீட்டியிருந்த அமேலியா கடைசி இரண்டு ஓவியங்களில் கிறுக்கியிருந்ததைக் கண்டு திகைப்படைந்தான் வசந்த். காதலனும் காதலியும் ஒன்றாக மழையில் குடை பிடித்தபடி நடந்து செல்வதை போன்ற ஓவியங்கள் அவை. இதை எதற்கு அழித்திருக்கிறாள் என்ற கேள்வி வசந்தின் மனதினை குடைந்தது.

பார்த்த ஓவியங்களை மீண்டும் திரும்பி பார்த்தான். ஒரே மாதிரியான ஓவியங்கள் தான். ஆனால், இரண்டிலும் நாயகன் நாயகியின் முகங்கள் வெவ்வேறாக இருந்ததை கண்டுபிடித்தான். ஓர் ஓவியத்தை உற்றுப் பார்த்தவன் திடுக்கிட்டான். அந்த ஓவியத்தின் நாயகி அச்சு அசல் அமேலியா போலவே இருந்தாள். நாயகனின் முகம் சரியாக புலப்படவில்லை.

வசந்திற்கு குழப்பமாக இருந்தது. எதற்காக அமேலியா ஓவியத்திற்குள் வந்தாள்? அப்படியென்றால் நாயகன் யார்? மீண்டும் ஓவியங்களை திருப்பி நாயகனின் முகத்தை ஆராய்ந்தான் வசந்த். அவனால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ஓவியங்களை டேபிளில் வைத்துவிட்டு குழப்பத்துடன் சோபாவில் வந்து படுத்தான். காற்றில் மீண்டும் ஓவிய காகிதங்கள் சலசலத்தன. வசந்தின் நினைவுகள் முழுவதும் ஓவியத்திலேயே லயித்திருந்தன.

ஓவியத்தின் முடிவு அமேலியாவின் கனவுலகில் தொடக்கமாக உருவானது.

வானில், நிலவும் விண்மீன்களும் மினுமினுக்க, வெளிச்சத்தோடு மழை பெய்து கொண்டிருக்க, சாலையின் இரு ஓரங்களிலும் பனிக்கட்டிகள் உறைந்திருக்க, குடை பிடித்தபடி காதலர்கள் இருவர் நடந்து சென்றனர்.

அவர்களது விழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. நாயகியின் தோளின் மேல் நாயகன் கை போட அவன் நெஞ்சில் நாயகி சாய்ந்து நடை போட, நீண்ட தூரம் நடந்து சென்றனர் வசந்தும் அமேலியாவும்.

தொடரும்...

Episode # 35

Episode # 37

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.