(Reading time: 20 - 40 minutes)

அமேலியா - 35 - சிவாஜிதாசன்

Ameliya

ஜெஸிகாவிற்கு வசந்தின் செயலைப் புரிந்துகொள்ள சில நிமிடங்கள் பிடித்தன. இது நிச்சயமாக முட்டாள்தனமான யோசனை என்று அவள் எண்ணிய மறுகணமே வாசல் கதவைத் திறந்து ஓடினாள்.

சூறைக்காற்று அவளை திக்குமுக்காட வைத்தது. அவளால் மூச்சு கூட விடமுடியவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்று கூட மறந்து போகுமளவுக்கு நிலைமை விபரீதமாக இருந்தது. கோர மின்னல் அவள் கண்களை சில நொடிகள் குருடாக்கியது. எங்கோ சிறு வெளிச்சம் ஒன்றை அவள் பார்த்தாள். அதை நோக்கி ஓடினாள். அவளால் ஓடமுடியவில்லை  காற்று அவளை வேறு திசையை நோக்கி தள்ளியது. இருப்பினும் தன் உடல் வலுவால் சுதாரித்து அந்த வெளிச்சத்தை அடைந்து காரை நிறுத்தினாள்.

"வசந்த்...வசந்த்..."

அதிர்ச்சியோடு காரை நிறுத்தினான் வசந்த். "ஜெஸ்ஸி நீ எதுக்கு வந்த?"

"நீ எங்க போற?"

"உன் வீட்டுக்கு தான். அமேலியா எந்த நிலைமையில இருக்கான்னு தெரியல"

"இந்த சூழ்நிலைல உன்னால போக முடியாது வசந்த்"

விண்ணைக் குடையும் காற்றின் சத்தம் அவர்களுக்கு கேட்டது.

"உன் வீட்டு சாவி கொடு ஜெஸ்ஸி"

"எனக்கு சரியா கேக்கல"

கதவைத் திறந்து ஜெஸிகாவை காரினுள் அழைத்தான் வசந்த்.

ஜெஸிகா காரில் ஏறினாள். காரினுள் அடைபட்ட பிறகு தான் அவளுக்கு மூச்சு காற்றே நிம்மதியாக வந்தது. கண்களை மூடி மூச்சினை இழுத்து இழுத்து விட்டாள்.

"உனக்கென்ன பைத்தியமா வசந்த்?"

"பைத்தியகாரனாவே இருந்துட்டு போறேன். முதல்ல உன் வீட்டு சாவிய கொடு"

தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து வசந்தின் கையில் திணித்தாள் ஜெஸிகா.

"எந்த தைரியத்துல சாவி இல்லாம என் வீட்டுக்கு கிளம்பின?"

"தெரியல"

"இதுலயே தெரியுது, நீ நிதானத்துல இல்லைனு. உன் முட்டாள்தனமான முடிவை கைவிடு"

"எனக்கு பயமா இருக்கு"

"ஏன்?"

"அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா?"

"ஒரு நாள் சாப்பிடலைனா ஒண்ணும் ஆகாது வசந்த்"

"எது எப்படியோ நான் அமேலியாவை பார்த்தே ஆகணும்".  வசந்த் விடாப்பிடியாக இருந்தான்.

"சரி, நானும் வரேன்"

"நீ எதுக்கு?"

"எதுக்கோ வரேன். கேள்வி கேக்காம கிளம்பு. எல்லாம் என் தலையெழுத்து" என முணுமுணுத்தாள் ஜெஸிகா.

"ஜெஸி உன்னால இந்த சிச்சுவேஷனை தாக்கு பிடிக்க முடியாது"

"உன்னால மட்டும் முடியுமோ?"

"ஓரளவு சமாளிக்க முடியும். நீ வீட்டுக்குள்ள போ"

"முடியாது"

"ப்ளீஸ் ஜெஸ்ஸி"

வேண்டாவெறுப்பாக வண்டியை விட்டு கீழிறங்கினாள் ஜெஸிகா. புயல்காற்றை கிழித்துக்கொண்டு வண்டி சென்றது.

வசந்தின் கார் செல்வதை பார்த்தபடி சிலையென சிறிது நேரம் புயற்காற்றிலேயே நின்றுகொண்டிருந்தாள் ஜெஸிகா. 'அமேலியாவின் மேல் அவனுக்கென்ன அக்கறை. அது உண்மையிலேயே அக்கறை தானா அல்லது அதையும் தாண்டி வேறு ஏதாவது?'.

மலையின் மேல் பாறாங்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போன்று இடி இடித்ததனால் அவளது சிந்தனை தற்காலிகமாக கலைந்தது. வீட்டை நோக்கி ஓடி கதவினை திறந்து உள்ளே சென்றாள். எல்லோரும் ஜெஸிகாவை புது விருந்தாளி போல் பார்த்தனர். அவர்கள் ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று ஜெஸிகாவிற்கு புரியவில்லை.

"வசந்த் எங்க போறான்?" டைரக்டர் கேட்டார்.

"திடீர்னு ஒரு முக்கியமான வேலை"

"இந்த புயல் காத்துல உயிரை காப்பாத்திக்கிறதை விட அப்படியென்ன முக்கியமான வேலை?"

"இதையே தான் அவன்கிட்ட கேட்டேன். அவன் எதுவுமே சொல்லல"

ஜெஸிகா கூறுவது பொய்யென டைரக்டர் புரிந்துகொண்டார். மேற்கொண்டு அவளிடம் வேறு எந்த கேள்வியும் கேட்காமல், வசந்த் எதற்காக இப்படி நடந்து கொள்கிறான் என்ற சிந்தனையில் இறங்கினார்.

எல்லோரையும் கடந்து ஜெஸிகா ஓரிடத்தில் அமர்ந்தாள்.

"வசந்த் எங்க போயிருக்கான்?"

ஜெஸிகா திடுக்கிட்டு அருகே பார்த்தாள். ஜான் அமர்ந்திருந்தான்.

"அதான் எல்லோருக்கும் கேக்கும்படி சொன்னேனே. உன் காதுல விழலையா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.