(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 02 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

யாரும் டி.வி பார்க்காம அது பாட்டுக்கு ஓடிட்டு இருக்கு.. கொஞ்சம் கூட யாருக்கும் பொறுப்பே இல்ல.” ஒரு பொறுப்பான இல்லத்தரசியாய் புலம்பலோடு தொலைக்காட்சியை நிறுத்தினார் பூங்கொடி.. பின் அவர் யாரையோ பார்வையால் தேட, அப்போது தான் வீட்டுக்குள் அறிவழகன் வந்துக் கொண்டிருந்தான்..

“அறிவு.. “ என்று உரக்க குரல் கொடுத்து, அவன் பார்த்ததும் கை அசைவால் அவனை அருகே கூப்பிட்டார்.

“என்ன பெரியம்மா..??” அவன் கேட்டதும்,

“இந்தா மகியோட ட்ரஸ் அயர்ன் பண்ணியாச்சு..” என்று அங்கே வைத்திருந்த ஒரு கவரை எடுத்து அவன் கையில் கொடுத்தார்..

“போய் ரெடிமேட்ல ஒரு ட்ரஸ் எடுத்துட்டு வாங்கடான்னா.. எங்க கேக்கறீங்க.. அவசரமா நிச்சயத்தை முடிவு செஞ்சதால எனக்கும் நேரமில்ல.. இல்லன்னா, நானே போய் எடுத்துக்கிட்டு வந்திருப்பேன்.. சரி சீக்கிரமா மகிய இந்த ட்ரஸ் போட்டுக்கிட்டு ரெடியாக சொல்லு..

“இது நிச்சயதார்த்தம் தானே பெரியம்மா.. கல்யாணத்துக்கு ஜமாய்ச்சிடலாம்.. மகி ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்கான்.. அடுத்து குளிச்சிட்டு வந்ததும் ரெடி தான்.. நீங்க அருளை போய் ரெடியாக சொல்லுங்க.. பொண்ணுங்க ரெடியாக தான் லேட்டாகும், அதுக்குள்ள மகி ரெடியாயிடுவான்..”

“சரி அறிவு.. மங்கைக்கு போன் போட்டியா?? எப்போ கிளம்பினாங்கன்னு கேட்டியா?? விருந்தாளிங்க மாதிரி இவ்வளவு லேட்டாவா வர்றது..”

“பெரியம்மா.. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இலக்கியாக்கு போன் பண்ணேன்.. கோயம்பேடு வரப் போறோம்.. சீக்கிரம் வந்துடுவோம்னு சொன்னாங்க.. வழக்கம் போல கிளம்பற நேரம் அப்பாக்கு ஏதோ வேலை வந்துடுச்சு.. அதை முடிச்சிட்டு கிளம்ப லேட்டாயிடுச்சாம்.. நீங்க போய் வேலையை பாருங்க.. அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க..” என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்றான்.

பேரன் பேத்தியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக தயாராகி அறையை விட்டு வெளியே வந்திருந்தார் முத்தழகி.. பேத்தி மணிமொழியின் திருமணத்தின் போது எடுத்துக் கொடுத்திருந்த சாம்பல் நிறத்தில் சிவப்பு பார்டர் போட்ட பட்டுப் புடவையை கட்டியிருந்தார்.. தலையை படிய வாரி கொண்டையிட்டு, நெற்றியில் திருநீரை கீற்றாக இட்டிருந்தார்… கண்களில் மூக்கு கண்ணாடி, காதில் கல் வைத்த பெரிய தோடு, கையில் தங்க வளையலும், கழுத்தில் இரட்டை வட சங்கிலியும் அணிந்திருந்தார்.. 80 வயதை நெருங்கியிருந்தாலும், உடலில் அந்த வயதிற்குரிய சில உபாதைகள் இருந்தாலும், பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாகவும் இல்லாமல், குண்டாகவும் இல்லாமல் தேவையான உடல் எடையோடு பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவே தெரிந்தார்.

அதிலும் இன்று அவர் ஆசைப்படி மகிழ்வேந்தனுக்கும் அருள்மொழிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதில் இன்னும் பூரிப்போடு தெரிந்தார்.. அவர்கள் பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வரை பெரியவர்கள் யார் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கவில்லை.. முத்துப் பாட்டி தான் அந்த யோசனையை முன் மொழிந்தார்.. அவர் மனதில் ஆரம்பத்திலேயெ இந்த எண்ணம் இருந்திருக்கிறது.. இருந்தும் இத்தனை வருடமாக பொறுமை காத்தவர், சில நாட்களுக்கு முன்பு தான் அதை வெளியில் சொன்னார்.. பின் அனைவரும் பேசி நல்ல முடிவு எடுக்க இருந்த நிலையில், சில சங்கடங்களால் என்னன்னவோ நடக்கவிருந்தது.. அதெல்லாம் பாட்டியின் மனதிற்கு பிடித்தமானதாக இல்லை என்றாலும் அமைதி காத்தவர், இன்று அவையெல்லாம் மீறி தன் பேரன் பேத்திக்கே நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அகமகிழ்ந்து போனார்..

“அம்மா தாயே எந்த பிரச்சனையும் இல்லாம இந்த நிச்சயம் நல்லப்படியா நடக்கனும்.. மகியும் அருளும் ரொம்ப காலத்துக்கு சந்தோஷமா வாழனும்..” மனதில் வேண்டிக் கொண்டார்.. அங்கே அறிவழகனிடம் பேசிவிட்டு பூங்கொடி அவர் அறைப்பக்கம் வர, பாட்டி அவரை தடுத்து நிறுத்தினார்..

“பூங்கொடி.. இன்னும் உன் தங்கை வீட்ல வரலயே ஏன்..??”

“அது கிளம்ப லேட்டாயிடுச்சாம் அத்தை.. கிட்ட வந்துட்டாங்கன்னு இப்போ தான் அறிவு சொன்னான்..”

“என்னம்மா… விருந்தாளி மாதிரியா இப்படி லேட்டா வர்றது.. முன்னாடியே வந்து கூடமாட உதவியா இருக்க வேண்டாமா??”

“என்ன செய்யறது அத்தை.. அறிவு அப்பாக்கு கிளம்பும் போது ஏதோ வேலை வந்துடுச்சாம்.. அதான் கிளம்ப லேட்டாம்..”

“புரியுது பூங்கொடி.. ஊர்ல இருந்து வரனும் இல்ல.. இதோ பக்கத்துல இருக்க குரோம்பேட்டையில இருந்து கிளம்பி வர்றதுக்கே உன் நாத்தனாருக்கு இவ்வளவு நேரம் ஆகுது.. நான் மங்கையை சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ஆமாம் எழிலுக்கு போன் பண்ணிப் பார்த்தீயா?? ஏன் இன்னும் வரல அவ..”

“போன் பண்ணேன் அத்தை.. தமிழும், புவியும் ஸ்கூல்ல இருந்து வந்ததும் வந்துட்றேன்னு சொன்னா..”

“அவங்க ஸ்கூல்ல இருந்து வந்ததும் மாப்பிள்ளை கூட்டிட்டு வரப் போறாரு.. இவ முன்னாடி வர்றதுக்கு என்ன?? சரி இவங்க நாலுபேர் மட்டும் தானே வர்றாங்க.. கேட்டுக்கிட்டியா??”

“எழிலுக்கு அது கூட தெரியாதா?? நாலு பேர் மட்டும் தான் வர்றாங்க அத்தை..”

“அவளுக்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சிருந்தா, வினையை கூட்டிட்டு வந்து வீட்ல வச்சிருப்பாளா?? சரி விடு எல்லாம் நம்ம நேரம், ஆமாம் சம்மந்தி வீட்டு ஆளுங்க எல்லோரும் தானே வர்றாங்க.. கிளம்பிட்டாங்களாமா?? இந்த மணியும், மலரும் எங்க?? மாப்பிள்ளைங்களுக்கு போன் போட்டு கேக்க சொல்லு..”

“அவங்களும் கிளம்ப போறதா போன் பண்ணாங்களாம் அத்தை.. இப்போ தான் மலர், மணிக்கிட்ட கேட்டுட்டு வரேன்..”

“சரி சம்பந்தி வீட்டு ஆளுங்களுக்கு எந்த குறையும் இல்லாம நடத்தனும்.. உறவுல சம்பந்தம்னு அவங்களை கண்டுக்காம இருந்திடக் கூடாது.. நம்ம பொண்ணுங்க வாழற இடம்.. அதுங்களுக்கு அங்க இதனால எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாது புரிஞ்சுதா..??”

“எனக்கு தெரியாதா அத்தை.. நான் அதெல்லாம் கவனமா இருந்துக்குறேன்..”

“நீ எல்லாம் சரியாப் பார்த்துப்பன்னு தெரியும்.. இருந்தும் இதுலல்லாம் ஜாக்கிரதையா இருக்கனும்னு சொன்னேன்.. சரி உன்னை நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கேன் பாரு.. உனக்கு நிறைய வேலை இருக்கும் போய் பாரு..” என்றதும் பூங்கொடி இரண்டு அடி எடுத்து வைக்க, திரும்பவும் முத்து பாட்டி அவரை தடுத்து நிறுத்தினார்.

“பூங்கொடி.. நிச்சயதார்த்தம் நல்லப்படியா முடிஞ்சதும், மகிக்கும் அருளுக்கும் சுத்திப் போடனும்.. அதனால அதுக்கு தேவையான பொருளெல்லாம் வாங்கி வச்சிக்க..”

“சரி அத்தை..”

“சரி போய் வேலையை பார்..” என்று பூங்கொடியை அனுப்பி வைத்தவர், வரவேற்பரையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் போய் அமர்ந்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.