(Reading time: 20 - 39 minutes)

பிறந்த வீட்டிற்கு வந்தால், ஏதாவது சாக்கு சொல்லி ஓய்வெடுக்கும் ரகத்தை சேர்ந்தவள் இல்லை எழில், தன் சகோதரியும் அண்ணியும் வேலைகளை பகிர்ந்து செய்வதால், அவளும் இங்கே வந்தால், அவர்களோடு வேலைகளை பகிர்ந்துக் கொள்வாள்.. பின் மூவரும் சேர்ந்து விரைவில் வேலையை முடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.. அதன்பிறகு ஓய்வு எடுப்பார்கள்.

ஆனால் இன்று நிச்சயதார்த்தத்தை குறித்து நிறைய வேலைகள் இருந்தும், அவர்களோடு ஐக்கியமாகாமல் அந்த வீட்டில் அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் வந்து அமர்ந்துக் கொண்டாள். கதிரவன் தன் மாமியாரோடு பேசிக் கொண்டிருக்க, பிள்ளைகளோ டிவியில் ஆழ்ந்துவிட்டனர்..

தான் பார்த்து வளர்ந்தவர்கள் தான் அருள்மொழியும் மகிழ்வேந்தனும், இன்று அவர்களுக்கு ஒரு நல்லது நடக்கப் போகும் நேரம், மனமோ அதில் ஈடுபடாமல் தன் வீட்டை சுற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.. என்றும் இல்லாமல் இன்று ஏதோ குற்றம் புரிந்தது போல் அவளுக்கு தோன்றியது!! நானா இப்படியெல்லாம் நடந்துக் கொண்டேன்? என்று அவளே அவளுக்குள் கேட்டுக் கொண்டாள்.

மனைவி வழக்கம் போல் இல்லாமல், இன்று இப்படி அறைக்குள் முடங்கி கிடந்ததை பார்த்த கதிரவன் எழிலை தேடி அறைக்குள் வந்தார்.. அவள் கட்டிலின் மேல் கீழே காலை தொங்கப் போட்டப்படி எதையோ யோசித்தப்படி அமர்ந்திருந்தாள்.

“எழில்..” என்று குரல் கொடுக்க, அவளோ அவரை திரும்பி பார்க்காமல் அந்த நிலையிலேயே “ம்” என்று ஒற்றை எழுத்தில் பதில் கொடுத்தாள்.

*எழில்… இப்போ ஏன் இப்படி இருக்க? இன்னிக்கு விசேஷம் அதுவுமா இப்படி இருந்தா.. எல்லாம் என்ன நினைப்பாங்க?

“நான் எதுக்கு இப்படி இருக்கேன்னு உங்களுக்கு தெரியாதா?”

“தெரிஞ்சதால தான் பேசிக்கிட்டு இருக்கேன்.. எனக்கென்னமோ நீ இன்னைக்கு செஞ்ச காரியம் தான் சரின்னு தோனுது.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம நீ பண்ணதுக்கான பலனை பார்த்துட்டல்ல.. நீ உன்னோட அண்ணன் மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும்.. இந்த குடும்பத்தை பத்தியும் எனக்கு தெரியும்.. நம்மால இந்த குடும்பத்துக்கு சங்கடம் வரக் கூடாது.. புகழேந்தி சாருக்கு என்னால எந்த கெட்ட பேரும் வரக்கூடாது.. இதுவரை நடந்ததுக்கே என்னைப் பத்தி என்ன நினைப்பாங்களோன்னு நான் ரொம்ப பயந்தேன்.. ஆனா அவங்க இன்னும் என்மேல நல்ல மரியாதை வச்சிருக்காங்க.. அதை நாம கெடுத்துக்க கூடாது.. அதனால, நீ செஞ்சதும் பேசினதும் தப்பில்ல.. இப்போ தான் நல்ல முடிவெடுத்துருக்க.. அதனால எதையும் போட்டு குழப்பிக்காத.. உங்க அக்கா சொன்னதை கேட்டல்ல, இன்னிக்கு உங்க அக்கா சார்புல நாம தான் அருளுக்காக முன்ன இருந்து இந்த நிச்சயத்தை நல்லா நடத்திக் கொடுக்கனும்.. அதனால இப்படி உம்முன்னு இருக்காம, கண்டதை யோசிச்சிக்கிட்டு இங்க இருக்கறத விட்டுட்டு, வெளிய வந்து எல்லோரோடவும் சகஜமா இரு..” என்று சொல்லிவிட்டு சென்றார்.

எழிலோ அறையை விட்டுச் சென்ற கணவனையே பார்த்திருந்தாள்.. அந்தநேரம் அவள் மனதில், “இவர் ஏன் இப்படி இருக்கிறார்..??” என்ற கேள்வி தான் உதித்தது..

இந்நேரம் அவர் இப்போது பேசிய வசனங்களை, அவள் பேசியிருக்க வேண்டும்.. அவரோ இவளை போல் கவலையோடு அமர்ந்திருந்திருக்க வேண்டும்.. ஆனால் இங்கு எல்லாம் தலைகீழ், “இருந்தாலும் அவருக்கு இவ்வளவு கல் மனசாக இருக்கக் கூடாது..” என்று முனுமுனுத்தாள். அவருடன் வாழ்ந்த இந்த 15 வருடங்களில், இப்போது தான் அவரின் இந்த முகத்தை பார்க்கிறாள். அந்த விஷயத்தில் மட்டும் ஏன் இவர் இப்படியிருக்கிறார்? என்பது அவளுக்கு புரியவே இல்லை..

கதிரவனை பற்றி யோசித்திருந்தவளுக்கு, திடீரென திரும்ப வீட்டை பற்றிய ஞாபகம் வந்தது.. இந்நேரம் அவள் என்ன செய்துக் கொண்டிருப்பாள்? நான் ஏன் அவளிடம் அவ்வாறு பேசினேன்? என்று திரும்ப எழிலரசி வருத்தப்பட ஆரம்பித்தாள்.

ருளில் மூழ்கி இருந்த அந்த அறையில், அலைபேசியில் வந்த சத்தத்தோடு, அதில் இருந்து வந்த ஒளியில், அந்த அறையில் சிறிது வெளிச்சம் பரவியது.. அந்த மெல்லிய ஒளியில் அவள் தெரிந்தாள்.. கட்டிலில் சாய்ந்தப்படி எங்கேயோ இருளை வெறித்து அவள் அமர்ந்திருந்தாள்.. அவள் அருகில் இருந்த அலைபேசி அடித்து அடித்து நின்றது.. ஒளி  வந்து வந்து மறைந்தது..

அந்த மெல்லிய ஒளியில் அவள் முகம் நன்றாகவே தெரிந்தது.. பால்நிலாவின் வண்ணம் அவள் தேகம், ஆனால் அந்த நிலவின் பிரகாசம் அவள் முகத்தில் இல்லை.. சில நிமிடங்கள் அந்த அலைபேசி சத்தத்தை கூட கவனிக்காமல், அதே நிலையிலேயே அமர்ந்திருந்தவள், அதன்பின்பு தான் அலைபேசியில் அழைப்பு வந்ததை கவனித்து, அது யாரென்பது தெரியாமல், அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். திரும்ப அந்த அறை இருளில் மூழ்கியது..

“ஹலோ..” என்றப்படி அவள் பேச்சை ஆரம்பிக்க,

“ஹலோ.. மிஸ் சுடரொளி கதிரவன்…” என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்டது..

“ஆமாம் நான் சுடரொளி கதிரவன் தான்.. உங்களுக்கு என்ன வேணும்??”

“மேம் உங்க ஃப்ளைட் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு.. இன்னைக்கு நைட் ஃப்ளைட்.. டிக்கெட்டை நீங்களே வந்து வாங்கிக்கீறீங்களா?? இல்லை நாங்க கொண்டு வந்து கொடுக்கட்டுமா??”

“இல்லை.. ஏர்ப்போர்ட் போகும் வழி தானே.. நானே வந்து வாங்கிக்கிறேன்..”

“ஓகே மேம்.. தேங்க் யூ..” என்று அந்த பெண் அழைப்பை துண்டித்ததும், அலைபேசியை கீழே போட்டவளின் காதுகளில்,

“நீ லண்டனுக்கே திரும்ப போய்டு.. அதான் எல்லோருக்கும் நல்லது..” என்ற வாக்கியமே திரும்ப திரும்ப ஒலித்தது.

“ஆம் அதுதான் நல்லது..” என்று அதற்கான விடையை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள்.. ஒரு தீர்மானத்தோடு கட்டிலை விட்டு எழுந்து, மின்விளக்கை உயிர்பித்தாள்.

பேன்ட் சட்டைப் போல் இருந்த இரவு உடையை கலைந்து, ஜீன்ஸ் டாப் எடுத்து அணிந்துக் கொண்டாள்.. தோளை தொட்டு விரிந்திருந்த தலைமுடியை குதிரை வால் கொண்டையாக மாற்றியவள், ட்ராவல் பேகை எடுத்து, எது அத்தியாவசியம் என்று தோன்றியதோ அப்படி தேவையான சிலப் பொருட்களை மட்டுமே அந்த பெட்டியில் நிரப்பினாள். பின் சிறிது நேரம் அந்த அறையில் எதையோ தேடியவள், பின் அந்த விஷ பாட்டிலை கண்டெடுத்தாள்.

ஒரே ஒரு கேள்விக்கான விடை மட்டும் அவளுக்கு தெரிய வேண்டும்!! அது எந்த மாதிரி விடை என்பதை பொறுத்து தான், இந்த நாட்டை விட்டு செல்வதா? இல்லை இந்த உலகை விட்டு செல்வதா? என்ற முடிவுக்கு வர முடியும்!! என்று மனதில் நினைத்தவள், அந்த பாட்டிலை தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள். பின் ட்ராவல் பேகை எடுத்துக் கொண்டு, வீட்டை பூட்டியவள், தெருமுனையில் ஆட்டோ ஏறி, “தாம்பரம் போக வேண்டும்..” என்று கூறினாள். 

உறவு வளரும்...

Episode # 01

Episode # 03

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.