(Reading time: 20 - 39 minutes)

முத்து பாட்டி கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிய பூங்கொடி, சமையலறைக்கு செல்ல, அங்கே கலையரசி ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்ச தயார் செய்துக் கொண்டிருந்தார்..

“கலை… இப்போ எதுக்கு காபி போட்ற.. உங்க அண்ணா தான், சாப்பாடு ஆர்டர் கொடுத்த இடத்துலேயே காபியும் தருவாங்கன்னு சொன்னாரில்ல.. அப்புறம் எதுக்கு நாம போடனும்??”

‘இல்ல அண்ணி.. அண்ணா இப்போ தான் போன் பண்ணாரு.. அங்க காபி தர மாட்டாங்களாம்.. அப்படி கொடுக்கனும்னா இன்னும் கொஞ்சம் பணம் அதிகமா கொடுக்கனுமாம்.. அதான் நம்மளையே காபி போட்டு வச்சிட சொல்லிட்டாரு.. அதான் அறிவுக்கிட்ட பால் வாங்கிட்டு வரச் சொல்லி, பாலை அடுப்புல வச்சிருக்கேன்..”

“சரி கலை.. நான் இங்க பார்த்துக்கிறேன்.. நீ போய் அருளுக்கு வச்சிருந்த புடவை நகையெல்லாம் கொடுத்து, அவளை ரெடியாக சொல்லு.. மணியும் மலரும் கதை பேசிக்கிட்டே உக்கார்ந்திருப்பாங்க.. அதனால சீக்கிரம் அருளுக்கு அலங்காரம் பண்ணச் சொல்லு.. அப்போ தான் எல்லோரும் வந்ததுமே நிச்சயத்தை ஆரம்பிக்க முடியும்..”

“சரி அண்ணி பார்த்துக்கோங்க.. நான் வந்துட்றேன்..” என்றவர், அங்கிருந்து சென்றார்.

பூங்கொடி அயர்ன் செய்து கொடுத்திருந்த உடைகளோடு அறிவு அறைக்குள் வரும்போது மகி ஜன்னலில் நின்றப்படி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..

“ஹே மகி.. என்னடா ஷேவ் செஞ்சுக்கிட்டு இருப்பன்னு பார்த்தா.. நான் போனப்ப நின்னுக்கிட்டு இருந்த இடத்திலேயே நின்னுக்கிட்டு இருக்க..” என்று அறிவு பேசிக் கொண்டே அறைக்குள் வந்ததும், மகி ஜன்னலில் இருந்து பார்வையை அகற்றி அறிவழகனை திரும்பி பார்த்தான்.

நாலந்து நாட்களாக சவரம் செய்யாததால் முகத்தில் முளைத்திருந்த தாடி, அடிக்கடி வெட்டப்படும் தலைமுடி சில நாட்களாக வெட்டப்படாமல் இருந்ததில் கொஞ்சம் வளர்ந்திருந்தது.. மொத்தத்தில் இன்று நிச்சயதார்த்தம் மகிக்கு தானா என்று பார்ப்பவர்கள் சந்தேகிப்பார்கள்.. முகத்தில் சிறிதும் மலர்ச்சியில்லை.

“மகி அதுக்கு தான் பார்லர் போய் எல்லாம் பக்காவா செஞ்சுக்கிட்டு வரலாம்னு சொன்னேன்.. என் பேச்சை கேட்டாத்தானே..”

“விட்றா.. இன்னும் டைம் இருக்குல்ல.. நான் ரெடியாக எவ்வளவு நேரம் ஆகப்போகுது.. பங்ஷன் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கு.. நான் ரெடியாக அரை மணிநேரம் போதும். ரெடியாகிடலாம்..”

“ஆனா ரெடியாகனுமே.. மகி இந்த நிச்சயத்துல உனக்கு முழு சம்மதம் தானே.. இல்ல அருளுக்காகவும் இல்ல பெரியப்பா, பெரியம்மாக்காகவும் மட்டும் தான் இதுக்கு சம்மதிச்சியா..??” மகியிடம் நேருக்கு நேராக நின்று அறிவு கேட்டப்போது, சில நொடிகள் பதில் சொல்ல தயங்கியவன், பின்..

“ஹே எனக்கும் இதுல சம்மதம் தாண்டா.. என்ன இப்படி அவசரமா செய்யனுமான்னு தான் யோசிச்சேன்.. மத்தப்படி ஒன்னுமில்ல.. சரி நான் ஷேவ் பண்ணிட்டு குளிக்கிறேன்.. நீயும் ரெடியாகற வழியைப் பாரு..” என்று சொல்லிவிட்டு வேகமாக குளியலறைக்குள் புகுந்தான்.

ருள்மொழியின் அறையில் மலர்கொடியும் மணிமொழியும் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.. “அருள்” என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த கலையரசி அருள் இல்லாமல் இவர்கள் கதை பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, “அண்ணி சொன்ன மாதிரி ரெண்டுப்பேரும் கதையடிச்சிட்டு இருக்கீங்களா?? ஆமாம் அருள் எங்க?” என்றுக் கேட்டார்.

“அருள் குளிச்சிட்டு இருக்கா அத்தை.. அதான் அதுவரைக்கும் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம்..”

“சரி உங்க வீட்ல இருந்து கிளம்பிட்டாங்களான்னு கேட்டீங்களா??”

“கேட்டுட்டோம் ம்மா.. அவர் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்னு சொன்னாரு.. மலர் வீட்டுக்காரர் அவங்க அப்பா, அம்மாவோட கார்ல வந்துக்கிட்டு இருக்காராம்..” இருவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அருள்மொழி குளியலறையில் இருந்து வெளிவந்தாள்..

“அருள்… இந்தா இதுல இன்னைக்கு நீ போட வேண்டிய புடவை, நகையெல்லாம் இருக்கு.. சீக்கிரம் ரெடியாயிடு..” என்று அவளிடம் அவர் கொண்டு வந்த பையை கொடுத்தவர்,

“மணி, மலர் ரெண்டுப்பேரும் சீக்கிரம் இவளுக்கு அலங்காரம் பண்ணுங்க.. புரோகிதர் பொண்ணை அழைச்சிட்டு வாங்கன்னு சொல்லும் போது அருள் தயாராய் இருக்கனும்” என்று கட்டளையிட்டார்.

பின் அருளை தன் அருகே அழைத்தார், அவள் அருகே வந்ததும்.. “மலருக்கும், மணிக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்ச மாதிரியே, உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நான் வேண்டாத தெய்வமே இல்லை அருள்.. இப்போ என்னடான்னா, என்னோட அண்ணனுக்கே மருமகளா இதே வீட்ல என் கண் முன்னாடி வாழப் போற, அதுவும் மகி மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும்மா..!!” என்று நெகிழ்ச்சியோடு அவள் தலையை வருடியப்படி கலையரசி பேசியதும், முயன்று உதட்டில் சிரிப்பை வரவழைத்தாள் அருள்மொழி.

“ஆமாம்மா.. அருள் ரொம்ப அதிர்ஷ்டசாலி!! அவ கல்யாணம் செஞ்சுக்கிட்டு வேற வீட்டுக்கு போக வேண்டிய அவசியமில்ல!! அம்மா வீடு, மாமியார் வீடு ரெண்டுமே இதுதான்..” என்று மணிமொழி மகிழ்ச்சியாக கூறினாள்.. உடனே மலர்கொடியும்,

“ஆமாம் மணி, இனி நம்ம அருள் பூவெல்லாம் உன் வாசம் படத்துல வர ஜோதிகா மாதிரி ஜாலியா பாடிக்கிட்டு இருக்கப் போறா.. என்றப்படியே

திருமண மலர்கள் தருவாயா? தோட்டத்தில்

நான் வைத்த பூச்செடியே!!

தினம் ஒரு கனியே தருவாயா?? வீட்டுக்குள்

நான் வைத்த மாதுளையே!!

மலர்வாய் மலர்வாய் கொடியே!!

கனிவாய் கனிவாய் மரமே!!

நதியும் நதியும் அருகே..

நானும் அவனும் அருகே..

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை..

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமில்லை..

என்று பாடிக்காட்டியப்படியே இருவரும் சிரிக்க,

“ஏய் பிள்ளைங்களா அவளை கிண்டல் பண்றதை விட்டுட்டு, போய் அவளுக்கு அலங்காரம் செய்யற வேலையைப் பாருங்க..” என்று சொல்லிவிட்டு கலையரசி அறையை விட்டுப் போக, அதுவரை மலர், மணியின் கேளிப் பேச்சுக்கு அருள் வெட்கப்பட்டு சிரிக்க பெரும்பாடு பட வேண்டியிருந்தது.. தன் அன்னையின் மகிழ்ச்சிக்காக!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.