(Reading time: 20 - 39 minutes)

பின் தலையை துவட்டிவிட்டு சிறிது நேரம் காய வைத்து விட்டு வருவதாக மணியிடமும் மலரிடமும் சொல்லிவிட்டு அருள்மொழி அங்கிருந்து நகர்ந்தாள்.. தரைத்தளமாக இருந்தாலும் அவளது அறையில் பால்கனி போன்ற அமைப்பு இருந்த அந்த இடத்தில் அவள் தலையை காயவைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் மனம் முழுவதும் குழப்பத்தில் இருந்தது.

மகியோடு திருமணம் என்று அவள் ஒருபோதும் சிந்தித்துப் பார்த்ததில்லை.. யாரும் அவளிடம் அப்படி பேசியதுமில்லை.. ஆனால் சில நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் எடுத்த இந்த முடிவைக் குறித்து அவளிடம் விருப்பம் கேட்டிருந்தால்? பெரியவர்கள் தங்கள் நலம் குறித்து எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று யோசித்து அவளும் சம்மத்திருந்திருப்பாள். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடப்பதை குறித்து தான் அவள் மனம் குழம்பியது. இந்த அவசர ஏற்பாடு இப்போது அவசியம் தானா? என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை.

இந்த ஏற்பாட்டை குறித்து மகியின் மனநிலையும் அவளுக்கு தெரியவில்லை.. அனைவரின் முன்னிலையிலும் அவன் இந்த ஏற்பாட்டைக் குறித்து  சம்மதம் சொல்லியிருந்தாலும், அவன் முழு மனதோடு இதற்கு சம்மதித்தானா? என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது. மகியிடம் நேருக்கு நேராக இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்த சமயத்தில் எல்லாம், அவனுடம் பேச சந்தர்ப்பங்கள் அமையாமலேயே போனது. ஆனால் நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்குள் எப்படியாவது அவனிடம் பேசிவிட அருள்மொழி முடிவு செய்தாள்.

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வந்திருப்பது யாராக இருக்கும், என்று நினைத்தப்படி, வருபவர் யார்? என்று வாயிற் கதவை நோக்கி ஆர்வத்தோடு பாட்டி பார்த்துக் கொண்டிருக்க, அதே சமயம் அங்கு வந்த கலையரசியும் வாசலை எட்டிப் பார்த்தாள், கதிரவனும் எழிலரசியும் இருப் பிள்ளைகளோடு காரில் இருந்து இறங்கினர்.

“அம்மா.. நம்ம எழிலும், அவ வீட்டுக்காரரும் தான் வர்றாங்க..” என்று தன் அன்னையிடம் கூறிய கலை, அவர்களை பார்த்து சிரித்தப்படியே, “வாங்க” என்று வரவேற்றார்.

கதிரவனும் பிள்ளைகளும் கலையரசியை பார்த்து சிரித்தப்படி வந்துக் கொண்டிருக்க, தன் சகோதரியை பார்த்த எழிலோ.. ஒரு தர்ம சங்கடமான மனதோடு முகத்தில் புன்னகையை வரவைத்தப்படி உள்ளே வந்தாள்.

நால்வரும் உள்ளே வரவும், இவர்கள் மட்டும் தான் வருகிறார்களா? இல்லை இன்னும் யாராவது வருகின்றனரா? என்ற சந்தேகத்தோடு வாசலை பார்த்த முத்து பாட்டி, பின் நால்வர் மட்டும் தான் வந்துள்ளனர், என்று உறுதிப்படுத்திக் கொண்டு, “வாங்க மாப்பிள்ளை.. உக்காருங்க..” என்று வரவேற்றார். கதிரவனும் முத்து பாட்டியின் அருகில் உட்கார்ந்தார்.

“என்ன எழில்.. அண்ணன் மகனுக்கும், அக்கா மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது!! இதுக்கு இப்படி தான் லேட்டா வருவாங்களா? என்று மகளை பார்த்து அவர் கேள்வியெழுப்ப,

“கிளம்பி வர வேண்டாமாம்மா” என்று எழில் பதில் கூறினாள். அதற்குள் சமயலறையில் இருந்தப்படி இவர்களின் வருகையை அறிந்த பூங்கொடி, கையில் காபியோடு அவர்களை வரவேற்றார்.

“சார் எங்க காணோம்??” என்று கதிரவன் கேட்ட கேள்விக்கு,

“ சாப்பாடுக்கு வெளிய சொல்லியிருந்தோமில்ல, அதை வாங்கிட்டு வர அவர் போயிருக்கார்..” என்று பதில் கூறியப்படியே பூங்கொடி அனைவருக்கும் காபியை உபசரித்தார்.

“என்னை கூப்பிட்டிருந்தா நான் முன்னாடியே வந்திருப்பேனே அக்கா.. சார் தனியாவா போயிருக்கார்..”

“இல்லை பக்கத்துவீட்டு ராமகிருஷ்ணனும் அவர் கூட போயிருக்கார்.. ஒன்னும் பிரச்சனையில்ல.  நீங்க சாப்பிடுங்க..” என்ற பூங்கொடி சமயலறையில் வேலை இருப்பதாக கூறி உள்ளே சென்றார்.

“அப்புறம் எழில்.. ஒரு முக்கியமான விஷயம்” என்று கலை சொன்னதும் அங்கிருந்த மற்ற மூவரும் என்ன என்று பார்த்தனர்..

“எழில்.. நம்ம அருளுக்கும் மணிக்கும் எல்லாமே செஞ்சு அவங்களை பார்த்துக்கிட்டது அண்ணனும், அண்ணியும் தான்.. மணி கல்யாணத்துல அப்பா, அம்மா ஸ்தானத்துல இருந்து அவங்க தான் எல்லாமே செஞ்சாங்க.. இப்போ மகிக்கும் அருளுக்கும் நிச்சயதார்த்தம் என்பதால, மகியோட அப்பா, அம்மாவா அவனுக்காக நிப்பாங்க.. இப்போ அருளுக்காக நீயும் உன் வீட்டுக்காரரும் தான் இருந்து தாம்பூலம் மாத்திக்கனும்.. மணி அப்பா வீட்டு ஆளுங்களை கூப்பிட்டிருக்கேன்.. வருவாங்களான்னு தெரியாது? அப்படியே வந்தாலும், நீங்க ரெண்டுப்பேரும் எல்லாம் முன்னாடி இருந்து செஞ்சா சந்தோஷம்..” என்று கலை தன் விருப்பத்தை கூறினார்.

எழில் என்ன சொல்லவென்று தடுமாற, “அதுக்கு என்ன எழிலும் மாப்பிள்ளையும் அதுக்கு தடைச் சொல்லவா போறாங்க.. என்ன மாப்பிள்ளை நான் சொல்றது சரிதானே?” என்று பாட்டியே கதிரவனிடம் கேட்டார்.

“ஆமாம் அத்தை சரிதான்..” என்ற கதிரவன், “நீங்க கவலைப்படாதீங்க அண்ணி.. அருள், மகி நிச்சயதார்த்தத்தை சிறப்பா செஞ்சுடலாம்.. உங்க சார்பா நாங்க ரெண்டுப்பேரும் எல்லாமே பார்த்துக்கிறோம்..” என்று கலை விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.