(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று  - 06 - வத்ஸலா

Kannathil muthamondru

திடீரென அவள் எதிர்பார்த்திராத நேரத்தில் ஒலித்த அவன் குரலில் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள் அனுராதா.

அடுத்த நொடி ‘என்னது பூரியா? எக்ஸாமா? யாராம் அது வந்திருப்பது?

அவளுக்குள்ளும் மின்னல் வெட்ட அவளையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி  பரவசம். அடுப்பை அணைத்துவிட்டு அவசரமாய் ஓடி வந்தாள் ஹாலை நோக்கி. அவள் ஓடி வருவாள் என்று எதிர்பார்த்தவனாக மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவன்.

ஹேய்...‘ஹ....ரிஷ்... நீ எப்படி இங்கே?. என்னமா விளையாடினே ஹரிஷ் நீ. செம செம ஆட்டம் தெரியுமா? கங்ராட்ஸ்’ உள்ளுக்குள் அவளே போட்டு வைத்திருந்த அணைகளை மீறி அனிச்சை செயலாய் வந்தேவிட்டது ஒரு சந்தோஷ கூவல்.

‘இதுதான் எங்க பழைய அனுராதா!’ அவன் விழிகளில் ரசனையின் பாவம் சேர அவளை பார்த்தபடியே அவள் அருகில் வந்தான். அவன் கையில் ஏதேதோ பரிசு பொருட்களும், இனிப்புகளும் கூடிய பைகள்.

‘எல்லாத்துக்கும் காரணம் யாரு தெரியுமா? எங்க அனும்மா...’ ஆள்காட்டி விரல் அவளை சுட்ட அழகாய் ஒரு சிரிப்பு அவன் இதழ்களில். ‘என் மனசிலே இருக்கறதை எல்லாம் வார்த்தையிலே எப்படி சொல்றதுன்னு தெரியலை. ‘என்னை ஜெயிக்க வெச்சிட்ட அனும்மா நீ. அத்தனை பெருமையும் உனக்குத்தான். தேங்க் யூ சோ மச் அனும்மா’ என்றான் குரலில் நெகிழ்ச்சி சேர.

சில நொடிகள் பேச்சற்று நின்றுவிட்டாள் அவள்.

‘என்ன அனும்மா அப்படி பார்க்கிறே? உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை. அதனாலே கண்ணிலே பட்டது எல்லாம் வாங்கினேன். இது எல்லாம் உனக்குத்தான் இந்தா..’ கையிலிருக்கும் பைகளை அவளிடம் நீட்டினான். ‘ஆமாம்.. நீ ஏன் போன் எடுக்கலை’

இப்போது சட்டென மணியடித்தது அவள் தலைக்குள்ளே. பெரியம்மாவின் வார்த்தைகள் இப்போது மறு ஒலிபரப்பானது. இரண்டடி பின் வாங்கினாள் அவள். வாங்கிக்கொள்ளவில்லை அந்த பைகளை. இப்போது அவள் முகத்தில் ஏற்பட்டிருந்த அப்பட்டமான மாற்றத்தை உணராமல் இல்லை அவன்.

‘வீட்டு முகவரி, போன் நம்பர் என எல்லாவற்றையும் எப்படித்தான் தெரிந்துக்கொள்கிறான் இவன்?’ சின்னதாய் ஒரு யோசனை கோடு அவள் முகத்தில்.

‘அது ஒன்றும் பெரிய வித்தை அல்ல. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் உண்டுதான்.’ பதிலும் தன்னாலே கிடைத்தது அவளுக்கு.

‘நீ இங்கே... இங்கே.....’ அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் தடுமாற

‘எப்படி வந்தேன்னு கேட்கறியா? ஏன் வந்தேன்னு கேட்கறியா என்றபடி டைனிங் டேபிளில் சென்று. கையிலிருந்த பைகளை அதன் மேலேயே வைத்துவிட்டு சுவாதீனமாக அமர்ந்தான்.

‘உன் கையாலே பூரி சாப்பிட்டு நாளாச்சா? அதான் நாலு பூரி சாப்பிட்டு போலாம்னு வந்தேன். ’என்றான் குறுகுறு பார்வையால் அவளை அளந்தபடியே.

‘ஹரிஷ் ப்ளீஸ். யாரவது வந்திட போறாங்க ப்ளீஸ்.. இப்போ பெரியம்மா வர நேரம்தான்’ சற்றே திகைப்புடன் அவன் அருகில் வந்தாள் அவள்.

‘வரட்டுமே. வந்தா என்ன? அவங்களுக்கும் ஒரு ஹாய் சொல்லுவோம்’ கண் சிமிட்டினான் ஹரிஷ். ‘நான் உன்னை எங்கேயாவது சீக்ரெட்டா தள்ளிட்டா வந்திருக்கேன்? நடு வீட்டிலே வந்து தைரியமா உட்கார்ந்திருக்கேன். யார்கிட்டேயும் எதையும் மறைக்கிற ஐடியா இல்ல அனும்மா. நீ போய் பூரி கொண்டுவா’ என்றான் புன்னகையுடன்.

‘சார் நான் பண்ற பூரி எல்லாம் சாப்பிடுவீங்களா? நீங்க எல்லாம் பெரிய ஆளு’ கை விரல்களை ஆராய்ந்துக்கொண்டே சொன்னாள் பெண். பழைய நினைவுகள் அவளை உறுத்துவதை அவன் உணராமல் இல்லை.

‘அப்படி எல்லாம் இல்லை. இனிமே காலம் பூரா உன் கையாலே சாப்பிடலாம்னு முடிவு செய்திருக்கேன்’ திடுக்கென நிமிர்ந்தாள். ஒரு இப்படி ஒரு எண்ணம் அவனுக்கிருக்கும் அதை சடாரென இப்படி போட்டுடைப்பான் என நினைக்கவில்லை அவள்.

‘ஒரு முறை கணவன் என்றே சொன்னனே. அதன் பிறகு சட்டென மனதை உடைத்தானே. இப்போது என்ன வேண்டுமாம் அவனுக்கு.’ உள்ளம் மருகினாலும் முகத்தில் எந்த பாவமும் காட்டிக்கொள்ளாமல் கேட்டாள் அவள்

‘ஏன் உங்க வீட்டிலே சமையல் பண்ணறவங்க ஓடி போயிட்டாங்களா? என்னை சமையல் பண்ண கூட்டிட்டு போலாம்னு பாக்கறியா? பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டவளின் பேச்சில் கிண்டல் ஊசிகள் எட்டிப்பார்த்தன.

‘ச்சே.. ச்சே... அத்தனை பெரிய வேலை எல்லாம் உனக்கு தரமாட்டேன். உன்னை அங்கே மொத்தமா கூட்டிட்டு போய் வீட்டு கொத்து சாவியை மட்டும் உன் கையிலே கொடுத்திடலாம்னு இருக்கேன்’ கொஞ்சம் கூட அசராமல் கண்கள் மின்ன புன்னகை மிளிர சொன்னான் அவன்.

மெதுமெதுவாய் விழிகளை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள். நிறையவே காதலும், மன்னிப்பு கேட்கும் பாவமும் தேங்கி இருந்தது அவன் முகத்தில்.

‘அதுக்கெல்லாம் நான் சம்மதிக்கணும் சார். எனக்கு உங்க மேலே சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்லை’ என்றாள் அவள் மறுபடியும் விரல்களை ஆராய்ந்தபடி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.