(Reading time: 12 - 24 minutes)

‘ஆஹான்.. அதையும் பார்க்கலாம். இப்போ ரெண்டே ரெண்டு பூரி குடு அனும்மா. ரொம்ப பசிக்குது’ விடுவதாக இல்லை அவன் பூரியை!

ஒரு முறை அவனை நன்றாக முறைத்துவிட்டு நகர்ந்தாள் அங்கிருந்து

டுத்த சில நிமிடங்களில் அவள் கொண்டு வந்த பூரிகளை ரசித்து சாப்பிட ஆரம்பித்தான் ஹரிஷ். அவன் அருகில் நின்றிருந்த அவள் பார்வை அவனறியாமல் அவன் முகத்தை மெல்ல வருடியது. அது சென்று நின்றது அந்த தழும்பின் மீது! அவன் கன்னத்தின் ஓரத்தில் இருந்த அந்த தழும்பின் மீது.

அந்த ஏதேதோ நினைவுகளுக்கு கொண்டு சென்றது. அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது.  விளையாட்டுக்களும், கிண்டல்களும், சீண்டல்களும் நிறைந்த காலம்தான் அது. அதுவே சற்றே அதிகமாகும் போது வேறு வடிவம் எடுத்து பிரச்னைகளை கொடுக்கிறதே!

அன்றும் அது போலத்தான் நிகழந்தது. இன்னொரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சில மாணவர்களிடம் சிக்கிகொண்டாள் அனுராதா. பேருந்து நிறுத்தம் தொடங்கி அவள் போகுமிடமெல்லாம் தொடர்ந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். அவர்கள் கிண்டலும் கேலியும் அவளது கோபங்களுக்கு அடங்கவில்லை.

இரண்டு நாட்களாக தொடர்ந்துக்கொண்டிருந்த அவர்கள் அன்று அவள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது கொஞ்சம் அத்து மீற ஆரம்பிக்க எங்கிருந்தோ வந்து நின்றது ஹரிஷின் கார்.

‘என்னாச்சு அனு?” என்றான் காரம் ஏறிய குரலில். ‘நீ கார்லே ஏறு. நான் இவங்களை ஒரு கை பார்த்திட்டு வரேன்’

‘வேண்டாம் ஹரிஷ். நாம போகலாம். நீயும் வா’ இவள் சொல்வதற்குள் இவன் அவர்கள் மீது பாய்ந்திருந்தான். அவனை தடுக்க இவள் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.

‘நாங்க யாரையோ என்னமோ செஞ்சா உனக்கென்னடா? நீ என்ன அவளுக்கு புருஷனா?’ அந்த கூட்டத்தில் எவனோ கேட்க

‘ஆமாம்டா. நான் அவ புருஷன்தான். அவ மேலே கைய வெச்சு பாரு கொன்னுடுவேன்.’ சொன்னபடி அவன் மீது பாய்ந்தான் ஹரிஷ். அவன் எதை நினைத்து இப்படி சொன்னான்? உணர்ந்து சொன்னானா? கோபத்தில் சொன்னானா? தெரியவில்லை. இப்போது போல் முதிர்ச்சி இல்லாத வயது அது. அவன் சொன்ன வார்த்தையில் அவளுக்குள் சில்லென்ற வெண்பனி சாரல்.

அவன் சொல்லி முடித்த நேரத்தில் அங்கிருந்த ஒருவன் கத்தியை எடுத்திருந்தான். அவன் முகத்தில் சர்ரென ஒரு கீறல் விழுந்தது. ரத்தம் வெளியேற இவள் அலற, அதன் பிறகும் கொஞ்சம் போராடிவிட்டு மயங்கினான் ஹரிஷ்.

அவர்கள் எல்லாரும் தப்பித்து ஓட மருத்துவமணைக்கு கொண்டு சென்றது இவளே. அங்கே தையல்கள் போடப்பட்டு, அரை மயக்க நிலையில் படுத்திருந்தான் ஹரிஷ். இவள் கண்களில் கண்ணீர் சுரந்துக்கொண்டே இருந்தது.

‘நான் அவ புருஷன்தான்’ அவன் வார்த்தைகள் அவளுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்க, எனக்காக இத்தனை வலிகளை அனுபவிக்கிறானே என எண்ணம் மேலோங்க, ஒரு உந்துதலில்  அவன் கன்னத்தில் காயத்தின் அருகே சின்னதாய் முத்தமிட்டாள் அனுராதா.

அவ்வளவுதான்! அரை மயக்க நிலையிலிருந்து தீ சுட்டதைபோல் சரேலென விழித்துக்கொண்டான் ஹரிஷ்.

‘அ....னு..’ அவன் குரலில் அப்படி ஒரு காரம். ‘என்ன பண்றே நீ. ச்சே..’ ‘ஒரு பொண்ணுன்னா கொஞ்சமாவது வெட்கம் வேண்டாம்’

அந்த ‘ச்சே’ வில் உடல் கூசிப்போனது இவளுக்கு.

‘அது.... இல்ல.. எ...னக்கு உ....ன்...னை ரொ...ம்...ப பி...டி...க்கும்....ஹ...ரி...ஷ்’ அவள் தடுமாற

‘எனக்கு உன்னை பிடிக்காது’ சுள்ளென சொல்லியபடியே  எழுந்து அமர்ந்தான் அவன். சட்டென வெட்டுப்பட்டது அவள் இதயம். அவள் முகம் போன போக்கில் அவன் கொஞ்சம் தளர்ந்தான்.

‘பிஹேவ் யுவர் செல்ஃப் அனு. லுக். எனக்கு உன் மேலே கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லை. புரிஞ்சுக்கோ கூட படிக்கிற பொண்ணு அப்படிங்கிற ஒரே எண்ணத்திலேதான் நான் அவங்களோட சண்டை போட்டேன். அவன் சொல்ல ’ அதற்கு மேல் ஏனோ அங்கே நிற்க கூட பிடிக்கவில்லை அவளுக்கு.

‘சாரி.. ஹரிஷ்...’ சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்திருந்தாள் அனுராதா அப்படியும் அவன் தந்தை வரும் வரை மருத்துவமனையில் காத்திருந்தாள். அவளது கண்ணீருடன் கூடிய முகத்தை கூர்ந்து பார்த்தார் அவன் தந்தை.

‘என்னாச்சுமா.. ஹரிஷ் எப்படி இருக்கான்?’

‘அவனுக்கு ஒண்ணுமில்லை அங்கிள் நீங்க பார்த்துக்கோங்க அவனை. நான் வீட்டுக்கு கிளம்பறேன்.’ அங்கிருந்து அகன்றாள் அவள்.

அது அவர்களது இரண்டாம் வருட படிப்பின் கடைசி நாட்கள். நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் முன்னால் வரக்கூட அவளுக்கு கூசியதுதான். அந்த வருடம் முடிந்துவிட வேறு ஒரு கல்லூரிக்கு மாறி இருந்தாள் அனுராதா.

அவனை விட்டு தூரமாய் விலகிய போதும் மனதால் எப்போதும் அவனை விட்டு அவள் விலகவில்லை என்பதுதான் உண்மை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.