(Reading time: 20 - 40 minutes)

கழுத்துப்பகுதியில் ஏற்பட்ட வலி வசந்தை துன்புறுத்தியது. மெல்ல கண்களை திறந்த வசந்த் கழுத்து பகுதியை சிறிய முனகலோடு தடவி பார்த்தான். இரவில் நடந்த நிகழ்வுகளை ஒருமுறை மனக்கண் முன்னால் ஓட்டியவன், அமேலியாவின் முகத்தை நோக்கினான். அவள் மூச்சுக் காற்று வசந்தின் மேல் பட்டது. காற்றில் கலந்து வந்த அவளது வாசம் வசந்திற்கு ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியது. சில நிமிடங்கள் அமேலியாவையே பார்த்துக்கொண்டிருந்தவன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியபடி எழுந்து ஜன்னலின் அருகே சென்றான்.

சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததால் அரசு பணியாளர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தனர். வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் வெளியில் சென்று அடுத்த வேளை உணவுக்கு ஏதேனும் ஏற்பாட்டினை செய்வோம் என்று எண்ணிய வசந்த், முகத்தை கழுவி முடித்து சத்தமில்லாமல் வெளியில் சென்றான். சாலைகள் பழுதடைந்திருந்ததால்  காரில் செல்லாமல் நடந்து சென்றான். மக்கள் வீட்டை விட்டு வெளிவர தொடங்கினர்.

சாலையில் நடந்துகொண்டே தன் பேண்ட் பையில் இருந்த பர்ஸை எடுத்து பார்த்தான். சில நூறு டாலர்கள் இருந்ததை பார்த்து நிம்மதி அடைந்தவன், 'நல்லவேளை! நேற்று வந்த அவசரத்தில் பர்ஸை தவறவிடவில்லை' என்று எண்ணினான். அரை மணி நடைப்பயணத்தில் சுற்றும் முற்றும் கண்களை அலையவிட்டபடி சென்றவனுக்கு ஒரு கடை கூட திறந்திருக்காதது சோர்வை ஏற்படுத்தியது. புயலில் தங்கள் கடைகள் என்னவானது என்று பார்க்க கூடவா யாரும் வர மாட்டார்கள் என்று நினைத்த வசந்த் நீண்ட மூச்சினை விட்டான்.

சிறிது தூரத்தில் ஜனக்கூட்டம் சூழ்ந்திருப்பதைக் கண்டு அங்கு சென்றான் வசந்த். தனியார் தொண்டு நிறுவனமொன்று மக்களுக்கு பால் பாக்கட்டையும் சிறிது உணவும் கொடுத்துக்கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் நான் நீ என கடுமையாக போட்டி போட்டு உணவினை பெற முந்திக்கொண்டிருந்தனர். எந்த யோசனையும் செய்யாமல் வசந்தும் அவர்களோடு கலந்தான். ஜனங்களோடு கடுமையாக போராடி உணவு பொட்டலத்தை பெற்றுக்கொண்டு .வீட்டினை நோக்கி சென்றான்.

கூட்டத்தோடு கலந்து உணவை பெற்றது வசந்திற்கு புது அனுபவமாக இருந்தது. சிறிது நேரத்தில் வீட்டை அடைந்த வசந்த் உணவு பொட்டலத்தை மேஜை மீது வைத்துவிட்டு. அமேலியாவை எழுப்ப தண்ணீரை எடுத்து வந்தான். ஆனால், அதற்கு தேவைப்படாமல் அமேலியாவே தடுமாறியபடி எழுந்தாள். ஜன்னலின் வழியே வந்த சிறு சூரிய வெளிச்சம் அவள் கண்களை கூசச் செய்தது.

கண்களை கசக்கியபடி படுக்கையில் எழுந்து அமர்ந்தவள், சில நிமிடங்கள் ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தாள். கனவில் தோன்றிய வசந்தின் முகம் அவள் நினைவிற்கு வந்தது. அவன் ஏன் தன் கனவுக்குள் நுழைந்தான் என எண்ணியவள்,.கனவில் யார் வேண்டுமானாலும் வருவார்கள். இதெல்லாம் ஒரு கேள்வியா என்று சிந்தித்தபடி பக்கவாட்டில் பார்த்தவள், அங்கு வசந்த் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவளின் இமைகள் பட்டாம்பூச்சி போல் சிறகடித்தன. அதைக் கண்டு வசந்த் சிரித்தான்.

"நல்ல வேளை எழுந்துட்ட. நேத்து ராத்திரி உன்னை எழுப்ப நான் படாதபாடு பட்டேன்" என்றான் வசந்த் புன்னகை சிந்தியபடி.

அமேலியாவிற்கு பயம் வந்தது. படுக்கையின் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சோர்வான மூச்சினை நாசி துவாரத்தில் வெளியேற்றிய வசந்த், "உனக்கு புரிய வைக்க எனக்கு சக்தி இல்லை. ரொம்ப பசிக்குது. ஒரு காபி போட்டு கொண்டு வா" என்று உணவு பொட்டலத்தை நோக்கி கை காட்டினான். 

அமேலியா எந்த அசைவும் இல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளது விழிகள் வசந்தையே நோக்கிக்கொண்டிருந்தன. அவர்களுக்குள் ஆழ்ந்த அமைதி நிலவியது. அதில் ஏராளாமான புரிதல்கள், சொல்ல முடியா உணர்வுகள். அமேலியா மெல்ல தன்னை இழப்பது போல் உணர்ந்தாள்.

அவளுக்கு தான் உடம்பு முடியலையே, அவளால எப்படி காபி போட முடியும் என்று எண்ணிய வசந்த் சோம்பலை முறித்தபடி சமையலறைக்குச் சென்று காபி தயார் செய்தான். வாழ்நாளில் சில முறை மட்டுமே காபி தயார் செய்திருக்கிறான் வசந்த். மேகலா வெளியே சென்றிருக்கும் சமயத்திலோ அல்லது அவளுடன் சண்டையிட்டு கோபத்திலிருக்கும் நாட்களிலோ மட்டுமே தனக்கென காபியோ தேனீரோ போட்டுக்கொள்வான்.

உலகில் புத்துணர்ச்சி பெற காபியை விட சிறந்த மருந்து ஏதுமில்லை என்று வசந்த் அடிக்கடி கூறுவதுண்டு. நேற்றிலிருந்து தான் சமையல்காரன் ஆனதை தன் வீட்டில் கேள்விப்பட்டால் அவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள். அதை நினைக்க வசந்திற்கே சிரிப்பு வந்தது. சிறிது நேரத்தில் காபியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் வசந்த். அமேலியா அசையாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.  

"காபி சுமாரா தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க" என்றபடி அவள் முன் காபி கப்பை வைத்தான் வசந்த். அமேலியா காபியை குடிக்கலாமா வேண்டாமா என்று தயங்கினாள். "ம் எடுத்துக்க. காபி ஒண்ணும் அவ்வளவு மோசமா இல்லை" என்றபடி காபி கப்பை எடுத்து அமேலியாவிடம் கொடுத்தான்.

அமேலியா சற்று தயக்கத்துடன் கப்பை வாங்கினாள். அப்பொழுது வசந்தின் விரல் அவளை தீண்டியது. தன் உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல் உணர்ந்தாள் அமேலியா. பசி எடுக்கவே காபியை மெல்ல பருகத் தொடங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.