(Reading time: 20 - 40 minutes)

வசந்த் ஜன்னலருகே நின்று காபியை பருகிக் கொண்டிருந்தான். அமேலியாவின் கண்கள் அவ்வப்போது வசந்த்தை நோக்கின. 'நேற்று இதே ஜன்னலருகில் வசந்த் நின்றது உண்மையிலேயே கனவா? இப்பொழுது அந்த சம்பவம் கனவு போல தோன்றவில்லையே' என எண்ணினாள். 

வசந்தும் காபியை பருகியபடி தன் பார்வையை அமேலியாவின் மீது மேய விட்டான். அவர்களுக்குள் ஆழ்ந்த அமைதி மீண்டும் குடிபுகுந்தது. பசியால் துவண்டிருந்த அமேலியாவிற்கு காபி சற்று நிம்மதியை தந்தது. ஆனாலும் அவளுக்கு பசி முழுமையாக போகவிலை. பசி மயக்கத்தோடு தலைவலியும் சேர, உடல் மிதப்பதை போல் உணர்ந்தாள். திடீரென அவளுக்கு கடுமையாக இருமல் வந்தது. வசந்த் திடுக்கிட்டான். தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டதை போல் கடுமையாக இருமினாள் அமேலியா.

அமேலியாவின் அருகே சென்ற வசந்த், "என்ன ஆச்சு? காபி நல்லா இல்லையா?" என்றபடி மேசையிலிருந்த பிரெட்டை எடுத்து, "இந்தா பிரட், காபியில் தொட்டு சாப்பிடு ஓரளவு நல்லா இருக்கும் என்று பிரெட்டை எடுத்தவன், அது கெட்டுப் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

பிரெட் கெட்டு போயிருக்கும் என்று ஜெஸிகா சொன்னது அப்போது தான் வசந்தின் மூளைக்கு உரைத்தது. தொடர்நது இருமிக்கொண்டே இருந்த அமேலியாவின் அருகே சென்ற வசந்தின் மேல் திடீரென வாந்தி எடுத்தாள் அமேலியா. வசந்த் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. படுக்கையிலிருந்து எழ எத்தனித்த அமேலியா தள்ளாடியபடி கீழே சரிய அவளை தாங்கி பிடித்து படுக்கையில் படுக்க வைத்தான் வசந்த்.

தனது சட்டையை கழட்டி பாத்ரூமில் போட்டுவிட்டு வெறும் பனியனோடு வெளியே வந்து. ஒரு கப்பில் தண்ணீர் கொண்டு வந்து அமேலியாவின் வாயை துடைத்தான். அமேலியாவின் அனல் மூச்சு வசந்தின் நெஞ்சில் விழுந்து சுட்டது. அவளது நெற்றியை தொட்டு பார்த்தான் வசந்த். அமேலியாவிற்கு காய்ச்சல் அதிகமாய் இருப்பது அவனுக்கு புரிந்தது. அவள் நெஞ்சு வரை போர்வை போர்த்திய வசந்த் மேற்கொண்டு என்ன செய்வதென்று தவித்தான். 

சூரிய ஒளி மெல்ல மறைந்து மேக இருள் சூழ்ந்து மீண்டும் மழைப் பொழிவை துவங்கியது. அமேலியாவின் உடல் குளிரில் நடுங்கியது. சமையலறைக்குச் சென்று வெந்நீரை தயாரித்தான் வசந்த். மீதமிருந்த காபியை சிறிது சூடு பண்ணினான். 

அமேலியாவின் அருகில் அமர்ந்து தனது கைக்குட்டையை வெந்நீரில் நனைத்து அமேலியாவின் நெற்றியில் வைத்தான் வசந்த். பதற்றத்துடன் அவள் கைகளை பரபரவென தேய்த்துவிட்டான். அமேலியாவை தன் மடியில் வைத்து காபியை சிறிது சிறிதாக குடிக்க வைத்தான்.

அமேலியாவால் எதையும் உணர முடியவில்லை. அரை மயக்கத்தில் தன் பெற்றோரின் ஞாபகம் வந்து வேதனையடைந்தாள். வசந்தின் அரவணைப்பு அமேலியாவிற்கு புதிதாய் இருந்தது. அவன் ஸ்பரிசத்தை அவள் விரும்பவுமில்லை, வேண்டாமென்று தட்டிக் கழிக்கவும் முடியவில்லை.

இது தவறென்று நினைக்க தோன்றுகிறது. ஆனால், அதில் சுகமும் மறைந்திருக்கிறது. இதுவரை பருவமடைந்த ஆண்மகன் அவளை தொட்டதில்லை. ஆனால், இன்று எல்லாமே மாறுகிறது. தான் பாவமென்று நினைத்த காரியங்கள் சரி என்பது போல் தோன்றுகிறது.

எதற்காக வசந்த் இங்கு வந்தான்? என்னை பார்க்கவா? அமேலியாவின் இதயத்துடிப்பு அதிகமாகியது. கண்களை திறக்க முயற்சித்தாள், முடியவில்லை. வசந்தின் முகம் அமேலியாவின் மனக்கண் முன்னால் தோன்றியது. கூடவே அவள் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆண்மகனும் தோன்றுகிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் வேறு இருக்கின்றன. அந்த குழந்தைகளின் முகத்தை நினைத்துப் பார்த்தாள். 

திடீரென அவள் தந்தை முகம் தோன்றியது. 'என் மகள் எந்த சூழ்நிலையிலும் தவறு செய்ய மாட்டாள்' என்றபடி அமேலியாவை நோக்கினார். பயத்தில் ஓ வென கத்தியபடி எழுந்தாள் அமேலியா.

அவளின் அலறல் சத்தம் வசந்தை பயமுறுத்தியது. "என்ன ஆச்சு அமேலியா?"

"என்னை தொடாதிங்க" அமேலியா அழுதபடி அரபியில் பேசினாள்.

அவள் என்ன கூறுகிறாள் என்று வசந்திற்கு புரியவில்லை. 

பகல் இருளாய் மாறி மழை பொழிந்துகொண்டிருந்தது. ஒருவேளை இருளைக் கண்டு பயம் கொள்கிறாளோ என்று எண்ணிய வசந்த் படுக்கையில் இருந்து எழுந்து மெழுகுவர்த்தியை தேடினான்.

அவன் என்ன செய்கிறான் என்று கண்டுகொள்ளாத அமேலியா.அவன் தன் கைகளைப் பிடித்த அழுத்தத்தை உணர்ந்தாள். அந்த சின்ன அழுத்தம் அவள் வலிக்கு இதம் தந்தது என்னவோ உண்மை தான். ஆனால், இது தவறு என்றும் மனம் எச்சரித்தது. 

சிறிது நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தோடு அவள் முன் வந்து நின்றான் வசந்த். அவன் இதழ்கள் புன்னகை சிந்தின. அவனது புன்னகை அமேலியாவை மெதுவாய் கவர்ந்து அவளை மயங்க செய்தது.

"இருளை கண்டா உனக்கு பயமா?" என வசந்த் கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.