(Reading time: 20 - 40 minutes)

'என்ன இது! அமேலியாவோ பசி மயக்கத்தில் இருக்கிறாள். அவளின் பசியைப் போக்க வழி தேடாமல் இப்படி அவளை.....!!!' என தன்னைத்தானே மனதிற்குள் திட்டிக்கொண்டவன், அவள் பசியை எவ்வாறு போக்குவது என்று சிந்தித்தான். 'தான் வரும்போதே அமேலியாவிற்கு தேவையான உணவை எடுத்து வந்திருக்கலாம். அவசரத்தில் மூளையே வேலை செய்வதில்லை' என்று வசந்த் வேதனையோடு எண்ணினான்.   

'அமேலியாவின் பசியை எப்படி போக்குவது. இப்போதிருக்கும் ஒரே தலைவலி இது தான். காலை வரை பொறுமையோடு காத்திருக்க வேண்டியது தானோ? பின்னர் ஏன் தான் இவ்வளவு அவசரப்பட்டு ஓடிவந்தோம். தான் காலையிலேயே வந்திருக்கலாமோ? ம்ஹூம் அமேலியாவிற்கு சாப்பிட ஏதாவது கொடுத்தே ஆகவேண்டும்' என்று எண்ணியவன், சட்டென ஏதோ தோன்ற, பிரிட்ஜை திறந்து உணவு ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தவனின் கண்களுக்கு பிரட் பாக்கெட் ஒன்றும்  இரண்டு முட்டைகளும் புலப்பட்டன.  

எப்போவோ கற்றுக்கொண்ட பிரட் ரோஸ்ட் அவன் நினைவுக்கு வந்தது. முட்டையை உடைத்து ப்ரெட்டில் தொட்டு ரோஸ்ட்டை சுட்டான் வசந்த். வாசம் வீடெங்கும் பரவியது. அது நல்ல வாசம் என்று உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் உணவு என்று ஏதோ தயாரித்தான். சிறிது நேரத்தில் தயாரித்த உணவை எடுத்துக்கொண்டு அமேலியாவை நோக்கி வந்தான்.

அமேலியாவை மீண்டும் எழுப்ப எண்ணி .அவள் கன்னங்களை லேசாக தட்டினான். அவளிடம் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை. என்ன செய்வதென்று சிந்தித்தான். படுக்கையில் அமர்ந்து அமேலியாவின் தலையை தன் மடிமேல் வைத்து, அவளுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க எண்ணி தண்ணீர் டம்பளரை அவள் வாயில் வைத்தான். தன்னை அறியாமல் தண்ணீரை மெதுவாக குடித்தாள் அமேலியா. அவள் தண்ணீரை குடித்த விதம் பிறந்த குழந்தை தன்னை மறந்து அன்னையிடம் பால் குடிப்பது போலிருந்தது.

தண்ணீர் தொண்டையில் இறங்க இறங்க அமேலியாவின் முகத்தில் சின்ன தெளிவு ஏற்பட்டதை .செல்போன் டார்ச் வெளிச்சத்தில் வசந்த்தால் பார்க்க முடிந்தது. பிரட் ரோஸ்ட்டை எடுத்து அவள் நாசியின் அருகே சென்று முகரும்படி செய்தான். தன்னையறியாமல் மெதுவாய் வாய் திறந்தாள் அமேலியா. ரோஸ்ட்டை சிறிய துண்டாக அவள் வாயில் திணித்தான். அதை மெல்ல முடியாமல் அப்படியே முழுங்கினாள் அமேலியா. அதனால் அவளுக்கு இருமல் ஏற்பட்டது.

சட்டென அவள் நெஞ்சை மெதுவாக தேய்த்து விட்டான் வசந்த். எதிர்பாராமல் தன்னை மறந்து செய்த அந்த செயல் தவறென்பது போல். அடுத்த நொடியே உணர்ந்தான் வசந்த். "சாரி சாரி" என தனக்குள்ளாகவே கூறிக் கொண்டவன் .மீண்டும் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். இரண்டு மூன்று முறை உணவு வாங்கிய அமேலியா அதற்கு மேல் வாய் திறக்கவில்லை. அவளை தொல்லை செய்யாமல் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அமைதியாக எழுந்து ஜன்னலின் அருகே சென்றான் வசந்த்.  

ஜன்னலின் அருகே சென்று சிகரெட் ஒன்றை பற்ற வைக்க எண்ணினான். சிகரெட் புகை வாசம் அமேலியாவிற்கு தொல்லை கொடுக்குமோ என்று நினைத்தவன் அந்த எண்ணத்தை கைவிட்டான். தான் கற்பனை செய்த உலகத்தில் அமேலியாவும் தானும் மட்டும் இருந்தால் எப்படியிருக்கும் என்ற விசித்திரமான கற்பனையில் இறங்கி அந்த கற்பனையிலேயே தன்னை மூழ்கடித்து சிலையென நின்றான் வசந்த்.

அமேலியாவிற்கு பாதி நினைவு வந்தது. அதை நினைவு என்று கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. பசியால் மயக்கமடைந்து, தான் ஒரு கனவினை காண்கிறோம் என்று மட்டும் எண்ணினாள். சுற்றி இருள் சூழ்ந்த இடத்தில் தான் இருப்பதை எண்ணி அமேலியா பயந்தாள். அவள் ஒன்றை வெறுக்கிறாள் என்றால் நிச்சயம் அது இருளாகத் தான் இருக்கும். இருள் எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு நமக்கு ஒன்றுமே காட்டாது. அதில் நல்லவையும் ஒளிந்திருக்கும் கெட்டதும் மறைந்திருக்கும்.

திடீரென பிரகாசனமான வெளிச்சம் உண்டானது. அந்த வெளிச்சம் சில நொடிகளே இருந்தாலும் அதில் ஓர் உருவத்தை அவள் கண்டாள். அந்த உருவம் யாரென தெரிந்துகொள்ள குழம்பியவள் மீண்டும் மின்னலின் வெளிச்சத்தில் அவ்வுருவம் வசந்த் என தெரிந்து கொண்டாள். தன் கனவில் அவன் ஏன் வந்தான் என எண்ணியவள் மீண்டும் மயக்கத்தில் விழவே கண்களை மூடிக் கொண்டாள்.

வசந்த் அமேலியாவை நோக்கினான். மெதுவாக அமேலியாவிடம் வந்தவன். படுக்கையில் இருந்த போர்வையை எடுத்து அவள் மேல் போர்த்தினான். பின்னர், படுக்கையின் அருகே அமர்ந்து தலை சாய்த்து தானும் களைப்பில் உறங்க ஆரம்பித்தான்.  

அவனுள் கனவு உருவானது. அந்த கனவில் ஓர் உலகம், அந்த உலகில் இருவர் மட்டும். வசந்தும் அமேலியாவும்.

காலைப் பொழுது. ஊரெங்கும் ஆழ்ந்த அமைதி. அந்த நிசப்தத்தில் வசந்த் தன்னை மறந்து துயில் கொண்டிருந்தான். இரவில் தான் செய்த பயணத்தின் களைப்பால் அவனால் எளிதாக எழ முடியவில்லை. அபார்ட்மெண்டில் மக்களின் நடமாட்டம் தொடங்கியது. முந்தின நாள் வந்த புயலை பற்றி பேசிக்கொண்டிருந்த குரல்கள் வசந்தின் தூக்கத்தை கெடுத்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.