(Reading time: 20 - 40 minutes)

"எல்லோரும் நம்புற பொய்யை நானும் நம்பணுமா என்ன?"

"உனக்கு மூளை இருக்குனு சொல்லுறியா?"

"உன் அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு எனக்கும் மூளையிருக்கு. உண்மைய சொல்லு, வசந்த் எங்க போறான்?"

"வீட்டுக்கு"

"இந்த நேரத்துல அவன் வீட்டுக்கு ஏன் போகணும்?"

"என் வீட்டுக்கு போயிருக்கான்?"

"எதுக்கு?"

"அமேலியாவை பார்க்க"

ஜானிற்கு ஒன்றும் புரியவில்லை ."அவளை ஏன் பாக்கணும்?"

பொறுமையிழந்த ஜெஸிகா, "எனக்கு அவ்வளவு தான் தெரியும். கொஞ்சம் பேசாம இருக்கியா" என்று எரிந்து விழுந்தாள்.

ஜான் அமைதியானான். 'அமேலியாவை அவன் எதுக்கு பாக்க போயிருக்கான்? இது என்ன லாஜிக்?' என்று சிந்திக்கலானான்.

புயற்காற்று, மழை, இடி, மின்னல் என பல இடர்பாடுகளுடன் பயணம் செய்துகொண்டிருந்தான் வசந்த். அவன் எண்ணம் முழுவதும் எப்படியாவது அமேலியாவை பார்த்து விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது .பெரும்காற்றால் கார் தள்ளாடியபடி சென்றது. வசந்தால் வேகத்தை கூட்ட முடியவில்லை.

ஆங்காங்கே மரம் சாய்ந்திருப்பதை மின்னலின் உதவியால் வசந்தால் காணமுடிந்தது. பாதையில் மழை தண்ணீர் ஆறு போல் ஓடியது. இன்னும் முன்னேற முன்னேற தண்ணீரின் அளவு அதிகரித்து. காரை இயல்பாக செலுத்த முடியாதபடி இயற்கை தடுத்தது. அவற்றையெல்லாம் பொறுமையாக கடந்து சென்றான் வசந்த். எப்பொழுதும் ஆள்நடமாட்டமிருக்கும் சாலை கூட வெறிச்சோடி இருந்தது. இந்த உலகில் உள்ள அனைவரும் காணாமல் போய்விட்டதை போல் உணர்ந்தான் வசந்த்.

சில நேரங்களில் அவன் சிந்தப்பதுண்டு, ஒரு நாள் நமக்கு பிடித்தது போல் உலகம் மாற்றமடைந்தால் முதல் வேலையாக தனக்கு பிடித்தவர்கள் தவிர அனைவரும் மாயமாய் மறைந்திட வேண்டும் என்று. வேடிக்கையான சிந்தனை தான். ஆனால் அதில் ஆழமான கருத்துள்ள சுயநலம் உண்டு.

சுமார் ஆறுமணி நேரம் பயணித்து ஜெஸிகாவின் அபார்ட்மென்ட்டை அடைந்தான் வசந்த். அவன் உடல் லேசாக வலித்தது. கடுமையான குளிரும் அவன் உடலை ஆக்கிரமித்து கொண்டதால் வசந்த் நடுக்கத்திற்குள்ளானான்.

குளிரில் நடுங்கியபடி அபார்ட்மெண்டிற்குள் சென்று லிப்டில் ஏறினான். ஜெஸிகாவின் வீடிருக்கும் பிளோரில் லிப்ட் நின்றது.

ஜெஸிகாவின் வீட்டை நெருங்கியதும், கதவை திறக்க தன் சட்டைப்பைக்குள் சாவியை தேடிக்கொண்டே கண்களை சுற்றும் முற்றும் ஓடவிட்டான். யாரும் கவனிக்காதது அவனுக்கு சற்று நிம்மதியை தந்தது. மெதுவாக கதவை திறந்து உள்ளே சென்றான் வசந்த்.

வீடு இருட்டாக இருந்தது. ஸ்விட்சை தேடி கண்டுபிடித்து விளக்கினை எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் அமேலியாவை தேடினான். அவன் சுவாசக்காற்று வேகமாய் வந்தது. ஜெஸிகாவின் வீட்டிற்கு வசந்த் பலமுறை வந்திருக்கிறான். ஆனால், இவ்வளவு சுத்தமாக ஜெஸிகாவின் வீட்டினை கண்டதில்லை. இது நிச்சயமாக அமேலியாவின் செயல் தான் என வசந்த் எண்ணுவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை.

வசந்தின் கண்கள் அமேலியாவை தேடின. படுக்கையில் விண்ணுலக தேவதை களைத்து படிந்திருப்பதை போல் அமேலியா துயில் கொண்டிருந்தாள்.

அவள் கொண்டிருப்பது தூக்கம் தானா என வசந்த்திற்கு சந்தேகம் எழுந்தது. "அமேலியா....அமேலியா" என அவளுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாய் அழைத்தான் வசந்த். அமேலியாவிடம் எந்த அசைவும் இல்லை. அவளை தொட்டு எழுப்பலாமா என்று யோசித்தான். 'அவள் கோபித்து கொண்டால்?' அந்த கேள்வி வசந்தை சில நொடிகள் யோசிக்க வைத்தது. 'வருவது வரட்டும் வேறெப்படி எழுப்புவது' என எண்ணியவன் அவளது மிருதுவான கன்னங்களை தட்டி, "அமேலியா அமேலியா" என்று அழைத்தான்.  அப்போதும் அமேலியா பதிலேதும் பேசவில்லை. மெதுவாக அமேலியாவின் தோள்களை பிடித்து உலுக்கினான் வசந்த். அமேலியாவிடம் சின்ன முனங்கல். அவள் சுயநினைவில் இல்லையென்பதை வசந்திற்கு உணர்த்தியது.

இத்துணை நேரம் எரிந்துகொண்டிருந்த மின்விளக்குகள் புயற்காற்றால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு எங்கும் இருள் சூழ்ந்து பயங்கரமான சூழலை உருவாக்கியது. கண்களை பறிக்கும் மின்னல் அடிக்கடி தோன்றியது. இடி இடிக்கும் சத்தம் உயிரையே நடுங்க செய்தது.  

மின்னலின் வெளிச்சத்தில் அமேலியாவின் மஞ்சள் முகம் இன்னும் மெருகேறி பேரழகாக தோன்றியது. மழை பேரிரைச்சலோடு பெய்துகொண்டிருந்த ஒலி அமேலியாவின் அழகை பாடுவதை போல் வசந்திற்கு தோன்றியது. ஒவ்வொரு மின்னலின் ஒளியிலும் அமேலியாவின் முகத்தையே வெறித்துக்கொண்டிருந்தான் வசந்த். பார்க்க பார்க்க திகட்டாத அழகு. தான் செய்வது தவறென்ற போதிலும் அந்த தவற்றை செய்யவே வசந்த் விரும்பினான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.