(Reading time: 15 - 30 minutes)

"அட்டை முகப்புல மட்டும் தான் ஓவியமிருக்கும். அதன் பின் அவங்களோட கதையை நாம படிச்சு தான் தெரிஞ்சிக்கணும்"

"ஓவியத்துல கதைகள் இருக்காதா?" அமேலியா சைகையில் கேட்டாள்.

"கதையா படிச்சா தான் நல்லாயிருக்கும். ஓவியமா இருந்துட்டா எப்படி புரியும்?"

மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அமேலியா அமைதியானாள்.

மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கதையை படிக்கத் தொடங்கினான் வசந்த். சிறு வயதில் மின்சாரம் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளி புத்தகம் படித்தது அவனுக்கு நினைவு வந்தது. அதன் பின் அப்படியொரு மங்கலான வெளிச்சத்தில் படிக்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்திருக்கிறது.

உங்களையே மறக்க செய்து வேறொரு அழகான உலகிற்கு அழைத்து சென்று உள்ளத்தை மகிழ்விக்கும் உலகிலிருக்கும் ஒரே மந்திரம் புத்தகம் மட்டுமே. வாசித்தல் என்பது ஆழ் தியானக் கலையின் அம்சமாகும். கதாசிரியர் வடிக்கும் பாத்திரங்களை படிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறும் சக்தி வாசிப்பவர்களுக்கு உண்டு.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கற்பனை ஒளிந்திருக்கும். அதை வாசித்தலின் மூலமே காண முடியும். கடவுள் இருக்கின்றார் என்ற உண்மையை கதையும் கற்பனையும் மட்டுமே நிரூபிக்கும். அந்த கனவுக்கும் கற்பனைக்கும் உருவம் கொடுக்க முடியாது. ஏன் கனவு வந்தது என்று விளக்கவும் முடியாது.  

வசந்த், கதாநாயகன் கதாபாத்திரமாக தன்னை நினைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தான். கவிதை நடையில் கதை, அழகான உலகம், ஆசை நாயகியோடு நாயகன் தனிமையான இடத்தில வீடமைத்து வாழ்க்கை நடத்துகிறான். தற்கால இளைஞர்கள் போல் மென்பொருள் நிறுவனம், அரைவேக்காட்டு உணவை நாடாமல் முன்னோர்கள் வழியில் இயற்கையோடு இயற்கையாக அவர்களது வாழ்க்கை பயணமாகிறது. கதையை படிக்க படிக்க நாயகியாக அமேலியாவைப் புகுத்திக்கொண்டான் வசந்த்.

அமேலியா ஜன்னல் அருகே சென்று ஓவியத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த ஓவியம் அவள் மனதை வெகுவாக பாதித்திருந்தது. ஏதாவது செய்ய வேண்டும் என்று அவள் உள்மனம் அவளை துன்புறுத்தியது. ஆனால் என்ன செய்வது என்ற விடை மட்டும் அவளுக்கு தெரியவில்லை.

மின்னலின் வெளிச்சத்தில் சாலையில் ஓடும் வெள்ளநீரை பார்த்துக்கொண்டே சிந்தனையில் இறங்கினாள் அமேலியா. திடீரென ஏதோ விடை ஒன்று பிடிப்பட்டதை போல் அவளின் கண்கள் மின்னின. தாமதிக்காமல் பரபரப்பாக இயங்கி காகிதங்களையம் எழுதுகோலையும் எடுத்தாள்.

அமேலியாவின் கற்பனை சிறகடித்து பறந்தது. சில நேரங்களில் அமேலியாவிற்கு கற்பனையே நல்ல மருந்தாகும். பூமியில் பிறந்து நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்நாளின் பெரும்பகுதி கற்பனை உலகில் தான் அடைந்து கிடந்தாள்.

சின்ன மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் காகிதத்தில் ஓவியம் தீட்டத் தொடங்கினாள் அமேலியா. அவளது கை காற்றில் கதை பேசுவது போல் வளைந்து நெளிந்தது. தான் கண்ட கற்பனை உலகின் கனவினை எல்லாம் தன்னை மறந்து ஓவியமாக தீட்டினாள்.

வசந்த் தன்னை மறந்து எழுத்துலகின் கனவுலகிற்குள் நுழைந்து கொண்டான். இருவரும் புயல், மழை, பசி, தூக்கம் மறந்தார்கள். அவர்களுக்குள் மௌன பாஷை தூது சென்றது. குளிர் கூட அவர்களின் கனவை சிதைக்க முடியவில்லை. எங்கோ ஓர் உலகத்தில் தனித்தனியே இருவரும் பயணம் சென்றார்கள்.

வசந்தின் கற்பனையும் அமேலியாவின் கற்பனை உலகமும் வெவ்வேறாக இருந்தாலும், இருவரும் இரு கற்பனை உலகிலும் வாழ்ந்தார்கள். கடவுளால் கூட இரு இடத்தில இருக்க முடியாது. ஆனால், கற்பனை மனிதர்களால் முடியும்.

வசந்த் கண்ட உலகம் அமேலியாவிற்காக உருவாக்கப்பட்டது. அந்த உலகில் அவர்கள் மட்டுமே இருந்தார்கள். வசந்திற்கு பிடித்தமான சிறிய வீடு, அதில் இருவரும் காதலித்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

ஆனால், அமேலியாவின் உலகம் ஓவியங்களால் உருவாக்கப்பட்டது.  ஓவியத்தால் அழகான உலகை சிருஷ்டி செய்து படைக்கும் பிரம்மனாகிக் கொண்டிருந்தாள் அமேலியா. தான் வரைந்த ஓவிய உலகத்தில் நுழைந்தாள், தான் வரைய உபயோகப்படுத்திய எழுதுகோலை மந்திரத் தூரிகையாக மாற்றினாள். அவள் உருவாக்கிய உலகிற்கு அவளே தேவதை, அவளே கடவுள்

அந்த உலகில் நிலவு மட்டுமே ஒளி கொடுக்கும். சோலைகள், நீரருவிகள், மலைப் பிரதேசங்கள் சூழ்ந்து காணப்பட, கனி மரங்கள், வான் பறவைகள், புள்ளினங்கள், சாதுவான ஜீவராசிகள் மட்டுமே வாழும் இடமாக அவ்வுலகு அமைந்தது.

சோலைகளிலிருக்கும் மலர்கள் வாடாது. அவ்வுலகில் எந்த உயிருக்கும் மரணம் கிடையாது. வயது கூடி மூப்பும் வாராது. அங்கே இயற்கை எல்லோரிடத்திலும் பேசும், தன் ஆசைகளை கூறும்.

நீண்ட நேரம் அந்த கற்பனைக்குள்ளேயே அடைபட்டு ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த அமேலியா திடீரென அதிர்ச்சியானாள். தான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றின் மீது எழுதுகோலால் கிறுக்கிவிட்டு படுக்கைக்கு வந்தாள்.

படுக்கையின் அருகே நாவல் படித்துக்கொண்டிருந்த வசந்த் திடீரென அவள் அவசரமாக வந்ததைக் கண்டு புரியாமல் சற்று விலகி அமர்ந்து கொண்டான். வசந்தின் முகத்தை பார்க்க விரும்பாத அமேலியா வேறு பக்கமாக தன் தலையைத் திருப்பி படுத்துக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.