(Reading time: 14 - 27 minutes)

ண்பர்கள் தன் கண்பார்வையிலிருந்து அகன்ற பிறகு, "எனக்கு என்ன ஆனது? நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன்? சம்யுக்தன் எனக்கு என்ன தீங்கிளைத்தான், அவன் மேல் இப்படி நான் ஆத்திரப்படுவதற்கு?" இப்படி சில கேள்வி அம்புகளை இளவரசன் தன் மனதினுள் செலுத்தினான். அவன் கேட்ட கேள்விகளுக்கு விடை மட்டும் தெரிந்தபாடில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. சம்யுக்தனைப் பிடிக்கவில்லை.

அப்படி யோசித்துக்கொண்டே ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். தன் வாளைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பொங்கி எழுந்தது. பித்துப் பிடித்தவன் போல் நடந்துகொண்டோமே, எல்லாவற்றிற்கும் இந்த வாள் தான் காரணம் என்று எண்ணி தன் வாளை வீசி எறிந்தான். அந்த வாள் பூமியில் ஓர் அழுத்தமான கோட்டினைப் போட்டபடி விழுந்திருந்தது.

இளவரசனுக்கு அந்த வாள் கையில் இல்லாதது ஒரு குறையாகத் தெரிந்தாலும் அவனுள் அமைதி என்னும் இன்பம் சூழ்ந்தது. மரத்தில் சாய்ந்தபடி தன் கண்ணிமைகளை மூடினான். இப்போது உலகம் அவனுக்கு அழகாகத் தெரிந்தது. அந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.

தனிமை... தனிமை... தனிமை

மனதில் சுமை கூடும் போது தான் தனிமையின் இனிமை புரிகின்றது. யாரும் இல்லை; ஆம்! யாருமே இல்லை; இதோ தனிமை; அது என்னை வாட்டவில்லை; இரு கைகளையும் நீட்டி என்னை அழைக்கின்றது; அணைக்கின்றது; தனிமையின் கைகளில் நான் தஞ்சம் புகுந்து விட்டேன்.

இப்படியே இருந்து விடக் கூடாதா. இவ்வுலகத்தில் நான் மட்டும் இருந்து விட்டால் கோபம், பொறாமை ஏது; கஷ்டம் தான் ஏது; பறவை மிருகங்களை நட்பாக்கிக்கொண்டு சந்தோசமாக வாழ்நாளைக் கழிப்பேன். அன்னையின் வயிற்றில் நான் உருவாகும் போது எப்படி இருந்ததோ அப்படி இருக்கின்றது எனக்கு.

காற்றிலே பறக்க வேண்டும்; தண்ணீரில் நடக்க வேண்டும்; மலை மீது ஏற வேண்டும்; உச்சியில் நின்று உலகத்தைப் பார்க்க வேண்டும்; மேகங்கள் மீது படுக்க வேண்டும்; மழைத் துளியைச் சேகரிக்க வேண்டும்; குளிர் காற்றை அனுபவிக்க வேண்டும்.

மரங்கள் பேசுவது கேட்கிறது. மரம் பேசுவதை இப்போது தான் கேட்கிறேன். தனிமையில் தான் பேசும் போலும். அது என்னை விசாரிக்கிறது. கனி வேண்டுமா நிழல் வேண்டுமா என்று கேட்கிறது.

நான் முதலில் தூங்க வேண்டும்; ஆம், தூங்க வேண்டும். நிம்மதியாக இருக்கிறது; தனிமை அன்னை என்னை அரவணைக்கிறாள். ஆம், அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

திடீரென்று பறவைகள் தங்கள் சிறகுகளை படபடவென்று அடித்துக்கொண்டு மரத்திலிருந்து பறந்து சென்றன. ரவிவர்மனின் இமைகள் ஒரு வித அதிர்ச்சியோடு திறந்தன. அமைதியான இடத்தில் சட்டென்று எல்லா பறைவகளும் பறந்து சென்றது, யாரோ வருவதை அவனுக்கு உணர்த்தியது.

உடனே, வீசி எறிந்த வாளை அவனுடைய கருவிழிகள் எச்சரிக்கையுடன் நோக்கின. அந்த எச்சரிக்கையை கொலுசின் ஒலி கலைத்தது. வருவது யாரென்று ஒரு வித எதிர்பார்ப்பு உண்டானது. கொலுசின் ஒலியை உற்றுக் கேட்டான். இரு விதமான கொலுசுகளின் ஒலிகளை அவனால் உணர முடிந்தது.

அவற்றில் ஒரு கொலுசினை ஏந்திய பாதம் அழகாகக் கவி பேசுவது போல மென்மையாக பூமியில் நடந்து வந்தது. அந்த ஒலி ஏற்கனவே பரிட்சயமானது போல இருந்தது. இன்னொரு கொலுசின் ஒலி, மழையின் வருகையை எதிர்பார்த்திருந்த மயில் ஆனந்தக் கூத்தாடுவது போல் இருந்தது.

ரவிவர்மன் கொலுசின் ஒலி வந்த திசையை நோக்கி தலையைத் திருப்பினான். உடனே, அந்த ஒலியை எழுப்பிய கால்கள் மரத்தின் பின்னால் மறைந்து கொண்டன. அதைக் கண்டு கொண்ட ரவிவர்மன் தான் எதுவும் காணாதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மீண்டும் கொலுசுகளின் ஒலி கேட்டது. ரவிவர்மன் ஓரக்கண்ணால் மீண்டும் ஒரு முறை பார்த்தான். வழக்கம் போல கொலுசின் ஒலிகள் மரத்தின் பின்னால் மறைந்தன.

ரவிவர்மன் பேசுவதற்கு ஆயத்தமாவதுபோல் தொண்டையைச் செருமி அவர்கள் மறைந்திருந்த இடத்திலிருந்து பார்வையை விலக்கி நேரே பார்த்தவாறு, "சம்யுக்தனைத் தேடி வந்தாயா, பூங்கொடி" என்றான்.

உடனே பூங்கொடி கூட்டிற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் கிளியைப் போல் திகைப்புடன் ரவிவர்மனை எட்டிப் பார்த்தாள். தான் அகப்பட்டுவிட்டதை அவளுடைய முகம் பிரதிபலித்தது. இரண்டடிகள் நகர்ந்து ரவிவர்மன் முன் தோன்றினாள்.

அவள் தலை கவிழ்ந்தவாறே மரத்தின் பின்னால் மறைந்திருந்த சகுந்தலையை ஓரக்கண்ணால் பார்த்தாள். சகுந்தலை தன் சுட்டு விரலை உதட்டின் மேல் வைத்து தான் இருப்பதை தெரியப்படுத்தாதே என்பது போல் ஜாடை காட்டினாள்.

பூங்கொடியின் கருவிழிகள் மட்டும் மெல்ல உயர்ந்து இளவரசனைப் பார்த்தன. இளவரசன் எதுவும் நடக்காதது போல் அடிவானத்தின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.