(Reading time: 14 - 27 minutes)

பூங்கொடியின் விழிகள் மீண்டும் சகுந்தலையை நோக்கின. சகுந்தலை, என்னைப் பார்க்காதே என்பது போல் கைகளை வேகமாக ஆட்டினாள்.

ரவிவர்மன், "சகுந்தலை, இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே மறைந்திருப்பதாய் உத்தேசம்" என்றான்.

அதைக் கேட்டதும் சகுந்தலை மூச்சுக்காற்றை வேகமாக உள்ளிழுத்தாள். அவளுடைய கால்கள் அவளையறியாமல் பூங்கொடியின் அருகில் சென்றன. பூங்கொடியின் கையைப் பிடித்துக்கொண்டு, "உன்னை யார் என்னைப் பார்க்கச் சொன்னது. அதனால் தான் அவர் என்னையும் கண்டுபிடித்துவிட்டார்" என்று பூங்கொடியின் காதில் முணுமுணுத்தாள்.

ரவிவர்மன், "அவள் உன்னைப் பார்ப்பதற்கு முன்னரே உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றான்.

சகுந்தலை அதிர்ந்து போய் ரவிவர்மனை ஓர் ஆச்சர்யக்குறியோடு நோக்கினாள். இளவரசன் இருவரையும் பார்த்தவாறே எழுந்து ஆடையில் ஒட்டியிருந்த தூசியைத் தட்டி விட்டு அவர்கள் அருகே சென்றான்.

சகுந்தலை, "எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?" என்று ஆவல் மேலோங்க கேட்டாள். 

"தாமரைப் பாதம் மண் பட்டால் நோகும் என்பது போன்ற மென்மையான நடை பூங்கொடிக்கு மட்டுமே சொந்தமானது. அவளுடைய பாதக் கொலுசும் மென்மையான நடைக்கேற்ப சுதியோடு ஒலித்தது."

"அது சரி, என்னை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?" என்று முகத்தில் ஒரு வித எதிர்பார்ப்புடன் சகுந்தலை வினவினாள்.

"அது இன்னும் சுலபம். மலையிலிருந்து பாறைகள் திடீரென்று உருண்டோடினால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் இரைச்சல் நீ கொலுசை மாட்டிக்கொண்டு ஓடி வந்தபோது இருந்தது. அதை வைத்து தான் அது நீயாக இருக்கும் என்று கணித்தேன்." என்று கூறி சிரிப்பை உதிர்த்தான்.

அதைக் கேட்ட சகுந்தலையின் முகம் சிவந்து போனது. பொங்கி எழுந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ரவிவர்மனை முறைத்தாள்.

"சரி, எதற்காக இங்கே வந்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?"

"யாரும் இங்கே வரக்கூடாது என்று சட்டம் ஏதும் தீட்டப்படவில்லையே?" என்று சகுந்தலை குரலில் சற்றே கோபம் தொனிக்கக் கேட்டாள்.

"ஒருவேளை சம்யுக்தன் என்னை வேவு பார்க்க உங்களை அனுப்பினானோ?"

அதைக் கேட்ட சகுந்தலை வாய்விட்டு சிரித்தாள்.

அவள் சிரித்த விதம் அவனுக்கு எரிச்சலூட்டியது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல், "எதற்கு இப்படி நகைக்கிறாய்?" என்று கேட்டான்.

"என் சகோதரனுக்கு எதிரிகளைத் தான் வேவு பார்க்கத் தெரியும். நேருக்கு நேரே நின்று மோதுவானே தவிர தன் பகைவனுக்குக் கூட முதுகில் காயத்தை ஏற்படுத்தி இழிவை உண்டாக்க மாட்டான். ஏனென்றால் அவன் ஒரு சிறந்த வீரன்."

இளவரசனின் கோபம் பெருகிக்கொண்டே போனது.

"எல்லாப் பெண்ணிற்கும் மனதில் ஒரு கற்பனை உண்டு. தன் சகோதரனை இப்பூவுலகில் சிறந்தவனாகவும் வீராதி வீரனாகவும் உலகத்தைக் காக்க வந்த இரட்சகனாகவும் எண்ணி சிறு வயது முதலே ஒரு மாயையை மனதளவில் வளர்த்து வைத்திருப்பர். ஆனால் மற்றவர் பார்வை வேறு. இது ஏற்றுக் கொள்ள சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை." என்று சம்யுக்தன் மேலிருந்த வெறுப்பை வார்த்தைகளால் வடிவமைத்துக் கக்கினான்.

சகுந்தலை ரவிவர்மனை பார்வையாலேயே எரித்து விடும் அளவுக்கு உக்கிரமானாள். அவள் மூச்சுக் காற்று அனலாக வெளிவந்தது. சம்யுக்தன் ஏளனம் செய்யப்படுவதைக் கேட்டும் பூங்கொடி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாளே! என்ன ஆயிற்று இவளுக்கு! என்று பூங்கொடி மீது பார்வையாலேயே பாய்ந்தாள்.

பூங்கொடி நிலத்தைப் பார்த்தவாறு சிற்பம் போல் நின்று கொண்டிருந்தாள். அவள், சிந்தனை உலகில் எதையோ தேடிக் கொண்டிருந்ததைப் போலிருந்தது. சகுந்தலை அவளுடைய தோள்களைப் பிடித்து உலுக்கினாள். பூங்கொடியின் சிந்தனை கலைந்து சகுந்தலையை என்னவென்று கேட்பது போல் பார்த்தாள்.

சகுந்தலை, "இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியுமா?" என்று சற்று கோபத்துடன் கேட்டாள்.

"என்ன நடக்கிறது?" என்று பூங்கொடி சகுந்தலையைப் பார்த்து ஒரு மழலையைப் போல் கேட்டாள்.

"ஏன் இன்று பித்துப் பிடித்தவள் போலவே இருக்கிறாய்? என்ன ஆனது?"

அப்போது ரவிவர்மன் இடைபுகுந்து, "ஒரு வேளை சம்யுக்தனைப் பற்றி நான் கூறியவற்றை எல்லாம் ஒப்புக்கொள்வதைப்போல் மௌனத்தை சம்மதமாகத் தெரிவிக்கிறாளோ என்னவோ?" என்று கேலிப் புன்னகையோடு கூறினான்.

அதுவரை அமைதி காத்து வந்த பூங்கொடி ரவிவர்மனை நேருக்கு நேர் ஆயிரம் கூறிய ஈட்டிகள் அவன் நெஞ்சைத் துளைப்பது போல் பார்த்தாள். புலியின் கண்களை விட அது மிகவும் கூர்மையாக இருந்தது. அப் பார்வையில் இளவரசன் அடங்கிப்போனது என்னவோ உண்மை தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.