(Reading time: 25 - 49 minutes)

20. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

யற்கை அன்னையின் மடியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது பேருந்து.  பெங்களூருவிலிருந்து கூர்கை (Coorg) நோக்கி செல்லும் சாலையில் நகர்ந்த அந்த பேருந்தில், இசைக்கேற்ப உற்சாகம் பொங்க சிலர் நடனமாடிக் கொண்டும், சிலர் அதை ரசித்து கொண்டும், வேறு சிலர் அந்த பாதையில் கொட்டி கிடந்த இயற்கை அழகை அனுபவித்து கொண்டும் இருக்க... இவை எதிலும் கலந்து கொள்ளாமல், தனக்குள் தானே சஞ்சரித்தபடி பல கேள்விகளோடு அமர்ந்திருந்தாள் சரயூ. 

பதிலில்லாத மனதின் கேள்விகளில் சோர்ந்து போனவளின் பார்வை அவனிடம் தாவியது. 

பேருந்தில் வழிந்த இசைக்கேற்ப உற்சாகமாக ரூபினும் வேதிக்கும் மற்ற சிலரோடு ஆடிகொண்டிருக்க... எதிர் திசையில், அவள் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் உட்கார்ந்து, அவர்களின் ஆட்டத்தை குறுஞ்சிரிப்போடு பார்த்திந்தான் ஜெய்.  மறந்தும் கூட இவள் பக்கம் திரும்பவில்லை அவன்.

இதே தான்...இரண்டு மாதங்களாக அவனுடை இந்த செயலாலே தான் இவளை வாட்டிக் கொண்டிருந்தான்.  போதா குறைக்கு இவளிடம் அவன் பேசாதது பெரும் கொடுமையாக இருந்தது.

அதற்காக அவன் பேசுவதே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.  அவசியத்துக்கு மட்டும், ஏதோ கொஞ்சம் என்பது போலிருந்த, அவன் பேச்சு இவளை கொல்லாமல் கொன்றது.

அன்று, இவள் முன் பூங்கொத்தை நீட்டி, தன் காதலை அவன் சொன்னதும்... மலர்ந்த முகத்தோடு துள்ளி எழுந்த சரயூவிடம் எதை எதையோ எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு கிடைத்த பதிலில் எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்று தான் தோன்றியது.  அவள் அப்படியொரு கேள்வி கேட்பாள் என்று கனவிலும் கூட நினைத்திருக்கவில்லை அவன்.

“வெரி க்யூட்! யூ ஆர் ஸோ ஸ்வீட் சஞ்சு!” என்றவளின் பேச்சிலும் முகத்திலும் வழிந்த மகிழ்ச்சியில் தன்னுடைய இத்தனை நாள் கனவு நிறைவேற போகிறது, காதல் கைகூடப் போகிறது என்றும்.... அவளின் செவ்விதழ்களிலிருந்து வெளிவரப் போகும் காதல் வார்த்தைகளை விதவிதமாக கற்பனை செய்து, நெஞ்சு தடதடக்க அவள் முகத்தையே பார்த்திருந்தான் ஜெய்.

“நல்லா ப்ராக்டிஸ் பண்ணிருக்க சஞ்சு! கொஞ்ச முன்னாடிதா நீ நல்லா வழியுவனு ஃபோட்டோல பார்த்தே... ஆனா நீ இப்படி ரொமாண்டிக் ஹீரோவா இருப்பனு நினைச்சு கூட பார்க்கல”

‘நீ மட்டும் காதலை சொல்லிதா பாரேன்... உன்னோட சஞ்சு எப்படிபட்ட ரொமான்டிக் ஹீரோனு புரிய வைக்கிறேன்’

அவளுக்கு கேட்காது தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன், அவளின் பதிலுக்காக அசையாமல் இருந்த நிலையிலேயே இருந்தான்.

“இந்த மாதிரி ப்ரபோஸ் செய்தா, எந்த பொண்ணாலும் நோ சொல்லவே முடியாது சஞ்சு!” என்றபடி அவன் கையிலிருந்த பூங்கொத்தை வாங்கியவள், மனதை மயக்கும் மனோரஞ்சிதத்தின் வாசத்தை நுகர்ந்துவிட்டு, அவனிடமாக குறுநகை புரிந்தவள்...

“அதான் சொல்லிட்டேனே ரொமான்டிக் ஹீரோனு, இன்னும் ஏன் இப்படியே இருக்க? எழுந்திரு சஞ்சு”

இத்தனை வருட காதலை, தன்னவளிடம் சொல்லிவிட்டு அவள் வார்த்தைகளுக்காக ஆவலோடு காத்திருந்தவனுக்கு, அவளின் பேச்சு, ஏமாற்றத்தை கொடுக்கவும், குழப்பமாக அவளை பார்த்தவன்....

“சரூ! நீ....இன்னும் ஒன்னுமே சொல்லலையே” என்று மெதுவாக நிறுத்தி நிதானித்து பேசினான். 

“அதை பத்திதா பேசனும், எழுந்திரு சஞ்சு!” என்று அவன் கையை பிடித்து இழுக்க, எழுந்து நின்றான் ஜெய்.

“வா...வா...உட்காரு!” அவளருகில் அவனை உட்கார வைத்தவள்,

“இப்ப எதுக்கு பே-னு முழிக்கிற? உன் லவ் கண்டிப்பா ஜெயிக்கும்!” இவன் மனதின் குழப்பத்தை ஓரமாக ஓட்டிவிட்டு சந்தோஷத்தை பரப்பியது அவளின் வாக்கு.

‘அது என்ன சுத்தி வளைச்சு மூக்கை தொட்றது? நேரடியாவே ஐ லவ் யூ சஞ்சுனு சொல்லாம, உன்னோட லவ் ஜெயிக்கும்னு’ இவன் மனம் சிணுங்கியது.  ஆசை ஆசையாய் ஐந்து ஆண்டுகளாக வளர்த்த காதலை உரியவளிடம் சேர்த்த பிறகும் அவள் வாய் வழியாக கேட்க நினைத்த வார்த்தைகள் இல்லாமல் போகவும் மனது முரண்டியது.  எப்படியாவது சரயூவிடமிருந்து காதல் வார்த்தைகளை கேட்டுவிட வேண்டுமென முடிவெடுத்து,    

“சரூ! அதெ....” ஜெய்யை பேச விடாது இடைபுகுந்தவள்

“ஹே திருடா! நல்லாவே ப்ரபோஸ் பண்ண” அவள் பாராட்டில் மனதில் காதல் சாரல் வீச முகத்தில் சிறு வெட்கம் படர்ந்தது. 

அதை கவனித்து, “சஞ்சு!” என்று இவள் ஆச்சரியமாக கூவியதை தவறாக புரிந்துகொண்ட ஜெய், இவளுக்கு ஏதுமோ என்று பதறினான்.

“பசங்க கூட வெட்க படுவீங்களா?!” குறுகுறுவென அவன் முகத்தை பார்க்கவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.