(Reading time: 25 - 49 minutes)

சௌம்யா மற்றும் மோனியோடு, எப்போதும் உதட்டோடு ஒட்டி கொண்டிருக்கும் அவளின் ட்ரேட் மார்க் புன்னகையோடும் வந்து கொண்டிருந்தாள் சரயூ.

பார்ட்டிக்கு தகுந்தபடி ஒன் பீஸ் ட்ரெஸை உடுத்தியிருந்தாள் சரயூ.  கையில்லாத வெள்ளை துணியில் உடலெங்கும் விதவிதமான நிறங்களில் பூக்கள் பூத்திருக்க, அவள் கால் முட்டியில் முடிந்திருந்த அந்த ஆடையில் தேவைதையாக இருந்தவளின் அழகை இன்னும் அதிகரித்தது அவள் கழுத்திலும் காதிலும் ஜொளித்த வெள்ளை முத்துகள். 

அவளை பார்த்ததும், எங்கோ எப்போதோ கேட்ட பாடல் அவனுக்கு கேட்கவும், வாய் தானாக அதை முணு முணுக்க... தன்னையும் மறந்து கையிலிருந்த கோக்கை பருக தொடங்கினான் ஜெய்.  அவளை விட்டு அகலாது கண்களை அவளோடு சேர்த்து ஒட்டிக்கொள்ள அவனுக்கு பசையேதும் தேவை படவில்லை.

அவள் கண்கள் எதிர்பார்ப்போடு யாரையோ தேடுவதை பார்த்தவனுக்குள் மகிழ்ச்சி பெருகியது.  இருக்காதா பின்னே, தன்னவள் தன்னை தேடுவது ஒவ்வொரு ஆண்மகனுக்கும் கர்வத்தைத் தரும் தருணமாயிற்றே!

சரூவா இது?! ஒரே ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியத்தை குடுக்குறா! அன்னைக்கு என்னடானா, ஃபோட்டோவை பார்த்து அப்படி வெட்கபட்றா... இன்னைக்கு உன்னை தேடுறா... எப்படியோ, நீ, நினைச்சத சாதிச்சிட்ட ஜெய் என்று மனம் அவனை பாராட்ட....

கூடிய சீக்கிரம் எங்கிட்ட வந்து காதலை சொல்லுவா.... அப்றம் உனக்கு வேலையே இருக்காது! எதையும் மறைச்சு மனசுலயே வைச்சுக்காம அவகிட்ட எல்லாத்தையும் ஷேர் செய்துக்குவ என்று பெருமை பொங்க மனதிடம் ஜெய் சொல்லவும்... அதையும் தான் பார்ப்போமே... என்னோட அவசியம் இல்லாம உன்னால இருக்க முடியாது என்று மனம் சவால் விட்டது. 

இருள் முழுதும் கவிழாத அழகான மாலையும், அதற்கு மெருகேற்றிக் கொண்டிருந்த அலங்கார விளக்குகளும், அவனுக்கு மட்டும் கேட்டு கொண்டிருந்த மெல்லிசையும், அமிர்தமாக உள்ளிறங்கிய குளிர் பானமும் ஜெயிற்கு சொர்க்கத்தையே அடைந்து விட்டதாக ஒரு மாயைத் தந்தது.  உடல் இங்கிருக்க, சரயூவோடு வானத்தில் மிதந்து கொண்டிருந்தது உயிர்.  சொல்ல தெரியாத புது உணர்வுகள் தனக்குள் எழுவது சுக வேதனையாக இருக்க...  

அதிலிருந்து தப்பித்து ஓடியவன் நின்றது, ரிசார்ட்டின் பின்புறத்திலிருந்த ஓடையிடம்.  பார்ட்டி நடக்குமிடத்திலிருந்த விளக்குகளை விட மங்கிய ஒளியை வீசிக்கொண்டிருந்தன இங்கிருந்தவை.  நீரில் பட்டுச் சிதறிய ஒளிக்கீற்றுகள் அங்கொரு வர்ணஜாலத்தை அறங்கேற்ற, அதை ரசித்தபடி ஒரு சிறு கல்லில் உட்கார்ந்திருந்தவன் நிலையை, சொல்லவும் வேண்டுமோ! எதிலிருந்தோ தப்பிக்க நினைத்து வந்தவனுக்கு எதிரியாகிப் போனது இச்சூழல். 

இன்று ஏனோ இயற்கை ஜெய்யிற்கு மட்டும் பெரும் எதிரியாக செயல்பட முடிவு செய்திருந்ததோ என்னவோ! சற்று நேரமாக ஓய்ந்திருந்த மழை, இப்போது ஊசித்தூறலாக ஆரம்பித்து அவன் உடலையும் உள்ளத்தையும் நனைத்து விட்டு உணர்ச்சியில் மட்டும் தீயை மூட்டியது.  

அவனுக்கு மேலும் ஒரு சோதனையாக, சரயூ வந்தமர்ந்தாள் அவனருகில்.

‘அய்யோ! இவள் எதுக்கு வந்தா? இவளாலதானே தனியா வந்து உட்கார்ந்திருக்க... எக்கு தப்பா எதுவும் நடக்குமுன்ன இவளை இங்கிருந்து அனுப்பனும்’

“இந்த மூனு நாளாதா என்னையே சுத்தி சுத்தி வந்தனு பார்த்தா... இப்ப எதுக்கு இங்க வந்த?” அவளிடம் எரிந்து விழுந்தான்.

தன்னவளிடம் கடினமாக பேசுவது பிடிக்காமல் முகத்தை அவளுக்கு காட்டது மறுபுறம் திருப்பி இதை சொல்லியிருந்தான்.

இவனுடைய பாரா முகமும் பேச்சும் அவளுக்கு வலியையும் அவமானத்தையும் கொடுத்தது.  எத்தனை சுலபமாக அவனை சுற்றி வந்ததை இழிவாக சொல்லிவிட்டான்.  நட்புக்குள் சண்டைகள் இருப்பதும், பிறகு சமாதானம் ஆவதும் சகஜம் தானே.  அவனிடம் சமாதானக் கொடியை பறக்க விட்டு கொண்டிருப்பவள் அவனை சுற்றி வராமல் வேறென்ன செய்ய வேண்டுமாம்? முன்பு போல் தோழி என்ற உரிமையோடு பழகுவதும் பேசுவதுமில்லை என்பதையே பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பவளுக்கு அவனுடைய எரிச்சலான வார்த்தைகள் வருத்தத்தை கொடுத்தது.   

அவன் தன்னுணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்க இவளோ அவன் பேச்சாலும் முகத்திருப்பலாலும் தாக்கப்பட்டாள்.

“சஞ்சு ப்ளீஸ்! எதுனாலும் என்னை பார்த்து பேசு”

ஏன் இவனிடம் கெஞ்சுகிறோம் என்று சிறு எண்ணம் எழுந்திருந்தாலும் கூட தன் மனதை சரயூ அறிந்திருக்கலாமோ?!

இவளின் கெஞ்சலுக்கு அவனிடம் எதிர்வினை இல்லாமல் போகவும்... எப்படியாவது அவனை சமாதானம் செய்துவிடும் நோக்கத்தோடு அவன் இடது தோளை பிடித்து

“சஞ்சு! எங்கிட்ட முன்ன மாதிரி பேசேன்” ஏங்கி யாசித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.