(Reading time: 20 - 40 minutes)

25. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

மிழின் கார் தன் வீட்டிலிருந்து வெளியேறுவதைப் பார்த்து ஒரு நொடி அசைவற்று நின்றார் சுதாகரன். “தமிழ்” அவரின் ஆழ்மனம் மகனின் பெயரை உச்சரித்தது. அவனை வெறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் நியாயங்கள் அவருக்கு இருந்தாலும், தமிழ் அவரின் மறு உயிர்! ஒரே உயிர்! அவருக்கு மட்டும் அவன்மீது பாசம் இல்லையா என்ன? தலையை உலுக்கி கொண்டார் சுதாகரன். “ச்ச..என்ன ஆச்சு எனக்கு? “ என்று வெகுண்டவர் தனக்கான அதிர்ச்சி ஆறடியில் அங்கு சிரித்து கொண்டிருப்பதை அறியாமல் உள்ளே சென்றார்.

“அத்தை.. எனக்கு கெஸ்ட் ரூம் போதுமே” மனோன்மணியின் கன்னத்தை செல்லமாய் வருடியபடி கேட்டான் புகழ். வந்து அரைமணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் மனோன்மணியின் கண்களில் நீர் வரும் அளவிற்கு அவரை சிரிக்க வைத்திருந்தான் புகழ். அதிலும் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் ஒரு “அத்தை”யை சேர்த்து அவரின் மனதையும் நெகிழ வைத்தான் அவன். அவனது இலகுவான பேச்சினால் கவரப்பட்ட மனோன்மணி பல நாட்களுக்குப் பின் மனம் மலர்ந்திருந்தார். அவனிடமும் உரிமையைக் காட்டினார்.

“அடி வாங்குவ புகழ் நீ.. அதான் சொல்லிட்டேன்ல? நீ தமிழ் ரூம்ல தான் தங்குற? என் பையன் என்ன சொல்லிட்டு போனான்னு மறந்து போச்சா உனக்கு? இனி இந்த வீட்டில் புகழ் தான் தமிழாய் இருப்பான்னு சொன்னான்ல?”

“அதுக்காக என்னால உர்ருனு சிடுமூஞ்சியா இருக்க முடியாதுப்பா..”என்று சிரித்தான் புகழ்.

“என்னது சிடுமூஞ்சியா? என் பையனைப் பத்தி என்கிட்டயே நக்கலாக பேசுறியா நீ? இரு இன்னைக்கு சாப்பாட்டுல உப்பள்ளி போடுறேன்”என்றார் மனோ.

“அத்தை நோ.. இப்போத்தானே சொன்னிங்க, இந்த வீட்டுல  நான் தமிழ் மாதிரின்னு? தமிழுக்கு எப்படி நளபாக விருந்து ஏற்பாடு பண்ணுவிங்களோ அப்படித்தான் என்னையும் கவனிக்கனும். அதுமட்டுமில்ல, தமிழுக்கு சிடுமூஞ்சின்னு பேரு வெச்சதே உங்க பாசமிகு மருமகள்தான்” என்று யாழினியைப் பற்றி போட்டுக் கொடுத்தான் புகழ்.

“ஹ்ம்ம் குத்துனது நண்பனா இருந்தால் செத்தாலும் சொல்ல கூடாதுனு சொல்லுவாங்க.. ஆனா நீ இப்படி எட்டப்பாவா இருக்கியேப்பா”என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு மனோன்மணி நடிக்கவும் புகழின் முகம் இஞ்சி தின்ற “புகழ்” மாதிரி ஆகிவிட்டது. (ஹீ ஹீ சும்மாத்தான் உங்களை குரங்குன்னு சொல்ல ஆசையா இருக்கு புகழ்)

“ஹா ஹா என் மருமகளைப் பத்தி சொன்னா, உடனே நம்பி அவளை கண்டிப்பேன்னு நினைச்சியோ?” என்று மனோ மறுபடியும் அவனை வியக்க வைக்க,

“நல்ல மாமியார், நல்ல மருமகள்.. ஆளை விடுங்க”என்று கை கூப்பினான் புகழ். அவனது செய்கையில் பக்கென சிரித்து வைத்தார் மனோன்மணி. நீண்ட நாட்களுக்கு பின், தன் மனைவி வாய்விட்டு சிரிக்கும் சத்தம் கேட்க வீட்டினுள் நுழைந்தார் சுதாகரன்.

“ஹை ..மாமா வந்துட்டார் போல.. நான் அவருக்காக காஃபி கொண்டு வரேன்.. நீங்க கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணிட்டு வாங்க”என்று கண்ணடித்தான் புகழ்.

“வாலு..வாலு .. புதுசா மீட் பண்ணுற மாதிரியா பேசுற நீ? கொஞ்சமாச்சும் பவ்யமா இருக்க தெரியாதா?”

“நானா தமிழை கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துருக்கேன்.. என்னையே வாலுங்குறீங்களே.. கூடிய சீக்கிரம் ஒரு ரெட்டை வாலு வந்திடும்.. அப்போ என்னத்தான் பண்ணுவீங்களோ.. ஹையோ ஹையோ..” என்று வடிவேலுப்போல சொன்னான் புகழ்.

“கொஞ்சம் சும்மா இரு புகழ். அவரு முன்னாடி நான் கெத்தா பேசனும்.. நீ பாட்டுக்கு சிரிப்பு மூட்டி காரியத்தை கெடுக்காதே.. வேணாம்.. இதுக்கும் பதில் சொல்லி பேச்ச வளர்க்காம காஃபி போடு போ”என்று அவனை சமையலறைக்குள் அவனை தள்ளிவிட்டு வெளிவந்தார் மனோன்மணி.

“என்ன மனோ சிரிப்பு சத்தமெல்லாம் அமர்க்களமா இருக்கு? யார்ட்ட பேசிட்டு இருந்த?”

“நான் என்ன பைத்தியமா தனியா சிரிக்கிறதுக்கு? எல்லாம் இந்த வீட்டுல உரிமை உள்ளவங்கத்தான் வந்துருக்காங்க”என்றார் மனோன்மணி. சற்றுமுன் பார்த்த தமிழின் காரையும் இப்போது தன் மனைவி பேசுவதையும் வைத்து வந்திருப்பது யாழினி என்று முடிவே எடுத்திருந்தார் சுதாகரன்.

“என்னமோ சவால் விட்டான் உன் பையன்.. என் சம்மதம் இல்லாமல் இங்க வந்து குடும்பம் நடத்த மாட்டான்னு..என்ன எல்லாம் காத்துல பறந்துடுச்சா? இல்ல என்னை வாயடைக்க வைக்கத்தான் இப்படியெல்லாம் பண்ணுறீங்களா?”என்று அவர் கேட்க,

“உங்களை வாயடைக்க வைக்க யாழினித்தான் வேணுமா மாமா? நான் போதாதா?” என்று கேட்டபடி காஃபியை ஏந்திக் கொண்டு வந்தான் புகழ். ஊடுருவும் பார்வையுடன் இதழில் புன்னகையை தவழவிட்டபடி சுதாகரிடம் வந்தான் புகழ்.

“நீ.. நீ எப்போ வந்த?”என்று கேட்டார் சுதாகர். புகழ் சொன்னதுபோலவே அவர் தற்பொழுது வாயடைத்து போய்தான் நின்றார்.

“இங்க எப்போ வந்தேன்னு கேட்குறீங்களா? இல்லை சென்னைக்கு எப்போ வந்தேன்னு கேட்குறீங்களா மாமா?” இருபொருளில் கேட்டான் புகழ். அவன் பார்வையில் இருந்த தீட்சண்யத்தை எதிர்க்கொள்ள முடியாமல் மௌனித்திருந்தார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.