(Reading time: 20 - 40 minutes)

அன்று மதியம்வரை மனோன்மணியின் முறைப்பிற்கு கட்டுப்பட்டு புகழின் பேச்சில் கொஞ்சமாய் இணைந்து கொண்டார் சுதாகரன். புகழின் சிரிப்பும் இயல்பான பேச்சும், சுமைக்கவே முடியாத பாறையை அவர் மனதில் தூக்கிவைத்துக் கொண்டது  போல உணர்வொன்றை தந்தது. “எப்படி இவனால் இத்தனை சகஜமாக இருக்க முடிகிறது?” எத்தனை தடுத்தாலும் தான் செய்த காரியங்களை அவரால் நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. சுதாகரனின் பார்வையும் முக வாட்டமும் புகழுக்கு புரியாதது இல்லை. அன்று மதியம் வரை அந்த வீட்டில் கலகலப்பாக வலம் வந்தவன், “அத்தை, நான் ப்ரண்ட்ஸை பார்க்க வெளில போறேன்… சாயந்திரம்தான் வருவேன்”என்று சொல்லிவிட்டு சென்றான்.

அதே வரவேற்பறையில் கண்களை மூடிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சுதாகரனின் செவிகளிலும் அவனது வார்த்தைகள் தெளிவாகவே கேட்டது. எந்தவொரு உணர்ச்சியும் காட்டிக்கொள்ளாமல் விழிமூடி அமர்ந்திருந்தவரை பார்க்க, புகழுக்கு பாவமாக இருந்தது! இந்த மனமானது எத்தனை விசித்திரமாக செயல்படுகிறது? வெறுக்கவேண்டிய நேரத்தில் நேசிக்கிறது, நேசிக்க வேண்டியவர்களை பிரிகிறது, நிமிஷத்திற்கு ஒரு விதமாக சிந்திக்கின்றது.

சுதாகரன் மீது அதீத கோபமும், வெறுப்பும் புகழின் மனதில் கனன்றது நிஜம்தான். அவரைப் பார்த்து கேட்க அவனிடம் பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவரின் தோற்றம்? என்னத்தான் கோபக்காரர், வீண் கௌரவம் என்று பல முகத்தை காட்டியிருந்தாலும், லேசாய் மெலிந்த தேகமும் தாடியும் அவரின் தேஜஸ் குறைந்து போனதை தான் காட்டியது! இத்தனை வீராப்பாய் இருந்துகொண்டு இவர் மட்டும் எதை சாதித்துவிட்டார்? இப்படித்தான் கேட்டது புகழின் மனம்.

“எனக்கு தெரியும் சார்.. நான் இங்க வந்தது உங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்குனு.. அடுத்து என்ன பண்ணனும்? என்கிட்ட என்ன பேசனும்? இப்படி பல குழப்பங்கள் உங்களுக்குள்ள இருக்கும்னு தெரியும். யுத்தத்தில் எப்படி நிராயுதபாணியாக இருப்பவரை தாக்க கூடாதோ, அதே மாதிரி மனதளவில் தளர்ந்து போனவரை நான் எப்படி எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு டைம் வேணுமோ எடுத்துக்கோங்க” என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டூ அங்கிருந்து கிளம்பினான் புகழ்.

புகழ் செல்லும்வரை காத்திருந்த மனோன்மணி, தன் கணவனின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தார். அடுத்த நொடி, சுதாகருக்கு தெரியாமல் தமிழை ஃபோனில் அழைத்தார். ஒரே ரிங்கில் அழைப்பை எடுத்தான் தமிழ்.

“சொல்லுங்கம்மா.. ஏதும் பிரச்சனையா?”

“இல்ல கண்ணா.. எல்லாம் நல்லாத்தான் போகுது..”

“சூப்பர் .. புகழ் என்ன சொல்லுறான்?”

“அவன் என்ன சொல்லல? சரியான வாலு..”என்று சிரித்தார் மனோன்மணி.

“ஹா ஹா.. அவன் பழைய மாதிரி ஆகிட்டாலே எனக்கு பாதி வேலை மிச்சம்..”

“ஆனா, உன் அப்பாத்தான் அப்படியே தலைகீழா மாறி தெரியுறாரு..புகழை பார்த்ததில இருந்தே அவர் முகமே சரி இல்லை கண்ணா. புகழ் இங்க இருந்து போனதுக்கு அவருதான் காரணமா இருக்கனும்னு நீ சந்தேகப்பட்டப்போ நான் நம்பவே இல்லை. ஆனால்,இப்போ எனக்கே சந்தேகமா இருக்கு தமிழ்”

“எதுக்கோ நாம கொஞ்சம் பொறுமையாகவே ஹேண்டல் பண்ணலாம்மா. டென்ஷன் ஆகாதீங்க”

“ஆனா தமிழ், ஒருவேளை இதுல உங்க அப்பாமேலதப்பு இருந்தால்.. யார் மன்னிச்சாலும் நான் அவரை மன்னிக்கவே மாட்டேன்..”

“அம்மா அதான் சொல்லுறேன்ல.. என்ன நடந்த்துன்னு தெரியாம இப்போதைக்கு எதுவும் யோசிக்க வேணாம்”

“ஆனாலும் இந்த புகழுக்கு உன்னைவிட அழுத்தம் ஜாஸ்தி கண்ணா.அவனைப் பார்த்ததில் உங்கப்பா எந்த அளவுக்கு மிரண்டு போயிருக்காரோ, அவன் அதே அளவுக்கு கூலா இருக்கான்.. விட்டால் , ஓ இவர்தான் தமிழோட அப்பாவா? அப்படிங்குற அளவுக்கு என்ன ஒரு பாவனைங்கிற நீ.. நீ நேருல இருந்து பார்த்திருக்கனும்”

“ஒருவேளை அவன் எதுவும் தப்பே பண்ணலனு அவனுக்குள் எழுந்த நிமிர்வு ஒரு காரணமாக இருக்கலாம்ல மா?”

“இருக்கலாம்தான் .. ஆனாலும் மனுஷங்க சுபாவம் எவ்வளவு வினோதமா இருக்கு. நீ எதையும் அதிகம் பேசி ஷேர் பண்ணுற ஆளே இல்லை.. ஆனால் முக்கியமான விஷயங்களில் வெளிப்படையா இருக்கு..ஆனா புகழ் எப்பவுமே அதிகமாக பேசுற குணம்கொண்டவன்.. ஆனாலும் அவனுக்குள்ள எவ்வளவு ரகசியங்களோ!”

“மை டியர் அம்மாவே, நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா, நம்ம ரகசியம் டக்குனு வெளி வந்துரும். சோ கொஞ்சம் மலை இறங்கி வாங்க”என்றான் தமிழ்.  அவன் பேச்சில் உறைந்துள்ள உண்மையை உணர்ந்தவராய் சாந்தமாகினார் மனோன்மணி. பொதுப்படையாக இன்னும் சில நிமிடங்கள் தமிழுடன் பேசிவிட்டு ஃபோனை வைத்திருந்தார் அவர்.

இருள்! எங்கும் வெளிச்சமே இல்லாத காரிருள்! அது தனது மனதினைத்தான் குறிக்கிறதோ? மூடிய விழிகளுடன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் சுதாகரன். நாம் செய்யும் நன்மை எல்லாம் நம்மை தொடர்கிறதோ இல்லையோ, நாம் செய்யும் தீமைகள் மட்டும் தொடர்வதை நிறுத்துவதே இல்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.