(Reading time: 20 - 40 minutes)

“என்ன மாமா, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் வாயடைக்கிறேன்னு சொன்னேன். அத சீரியஸா எடுத்துக்கிட்டு அமைதியாகிட்டீங்களா? காஃபி எடுத்துக்கோங்க மாமா”என்றான் புகழ் இயல்பாய். அவன் “மாமா” என்று அழைப்பது சுதாகருக்கும் இன்னும் எரிச்சலை மூட்டியது. அவனிடம் பேச விரும்பாதவர் மனோன்மணியிடம் பாய்ந்தார்.

“என்ன மனோ நடக்குது இந்த வீட்டுல? யாரை வேணும்னாலும் வீட்டில் சேர்த்துப்பியா? அதுவும் என்னை ஒரு வார்த்தை கேட்காம? இதென்ன புது பழக்கம் உனக்கு?”

“புகழ் ஒன்னும் யாரோ இல்லை.. அவன் தமிழோட ப்ரண்டு”

“இல்ல யாழினியின் ப்ரண்டு”என்று பட்டென உரைத்தார் சுதாகரன். புகழின் முகத்தில் பிரம்மிப்பும் சந்தோஷமும் போட்டியிட்டது.

“அப்போ நான் யாழினிக்கு ப்ரண்டு தான்னு ஞாபகம் இருக்கா மாமா?” என்றான் புகழ். “ப்ரண்டு” என்ற வார்த்தையை மட்டும் அவன் அழுத்த  கூட்டி சொன்னதின் காரணத்தை மனோன்மணி அறியாமல் போகலாம். ஆனால், ஆண்கள் இருவருமே அறிந்திருந்தனர். சுதாகரின் விழிகளில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

“என்ன உங்களோட ப்ளான்? தமிழ்தானே உன்னை அழைச்சிட்டு வந்தான்? அவன் காரை நான் பார்த்தேனே ? என்ன வேணும் உங்களுக்கெல்லாம்?” என்றார் சுதாகரன்.

“இப்போதைக்கு இந்த காஃபியை வாங்கிக்கிட்டா போதும் மாமா. எனக்கு எதுவுமே வேணாம். ரொம்ப நாளுக்கு அப்பறம் சென்னைக்கு வந்திருக்கேன். எனக்கே வெளில நிறைய வேலை இருக்கு. வீட்டுக்குள்ளயும் வீட்டில் இருக்குறவங்களோடும் எனக்கு எந்த வேலையும் இல்லை. அத்தை நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்”என்று காஃபியை அங்கேயே வைத்துவிட்டு சென்றே விட்டான் புகழ்.

மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் வீட்டிற்கு வந்திருக்கும் நினைவுகளை புரட்டி, தமிழின் அறையை கண்டுபிடித்தான் புகழ். மிகவும் நேர்த்தியாய், அப்போது பார்த்தது போலவே இருந்தது அந்த அறை.

“அப்போவே கெஸ்ட் ரூம் கேட்டேன்.. இங்க பாரு எல்லாமே அடுக்கி நீட்டா இருக்கு..நானும் இந்த சுத்தத்தை மெயிண்டேயின் பண்ணனுமே.. தமிழ்! உங்களை என்னத்தான் பண்ணுறது?”என்று வாய்விட்டே பேசியவன், தன் மனது லேசானதை உணர்ந்தான். தமிழ் எடுத்த முடிவு மிக சரியானது தான்.அவன் சொன்னது போலவே யாழினி வீட்டில் ஒரு குற்ற உணர்ச்சியுடன் வளம் வந்தவன், இங்கு அப்படியொரு அழுத்தமின்றி சுதந்திரமாகவே உணர்ந்தான். “தேங்க்ஸ் தமிழ்” என்று அவன் மானசீகமாக சொல்லிக் கொண்டான்.

“யாரை கேட்டு இதெல்லாம் பண்ணுற மனோ நீ? அவனை உடனே கிளம்ப சொல்லு.. உடனே அனுப்பு!” என்று கோபத்துடன் மொழிந்தார் சுதாகரன்.

“அனுப்பிட்டு? அனுப்பிட்டு என்ன பண்ணனும்? இப்படித்தானே என் பையனையும் அனுப்பி வெச்சேன்? கடைசிவரை இந்த வீட்டுக்கு யாரும் வர கூடாதா? எனக்குனு யாரும் இங்க இருக்க கூடாதா? என்னை கல்யாணம் பண்ணும்போது என்ன சொன்னீங்க நீங்க?” திடீரென மனைவி பொறுமையிழந்து பேசிய விதத்தில் ஸ்தம்பித்து போன சுதாகரன் அவர் கேட்க கேள்வியில் குழம்பியே போனார்.

“எ..என்ன கேட்ட?”

“ஏன் பாஷை புரியலையா? என்னை கல்யாணம் பண்ணும்போது என்ன சொன்னீங்க? என்னை எதுக்கும் கலங்க விடாமல் பாத்துப்பேன்னு சொன்னிங்களே.. எங்க போச்சு அந்த வார்த்தை எல்லாம்? காத்துல கரைஞ்சு போச்சா ? இல்லை மறைஞ்சு போச்சா?”

“..”

“தமிழுக்கும் உங்களுக்கும் நடந்த சண்டையில தமிழ் மேல கொஞ்சம் தப்பு இருக்குத்தான். அதுக்காக உங்க மேல தப்பே இல்லன்னு ஆகிடுமா? இல்ல, எது சரி தப்புனு புரிஞ்சுக்க முடியாத அளவு குழந்தையா நானு? ஒரு மிஸ்ட் கால் கொடுத்தா என் பையன் வந்து என்னை அவனோடு கூட்டிட்டு போயிட மாட்டானா?” என்று ஒரே போடு போட்டவரை மௌனமாக பார்த்தார் சுதாகரன்.

“உண்மைதானே? மனோன்மணி நினைத்திருந்தால் எப்போதோ இதை நிறைவேற்றி இருக்கலாமே” என்று நினைத்தவருக்கு திகைப்பு அடங்கவே இல்லை! மூன்று ஆண்டுகளாக வீட்டின் படியேறாத மகன் வந்ததா? எப்போதும் எதிர்த்துபேசாமால் தனது எண்ணங்களுக்கு இசைந்துபோகும் மனைவி எதிர்த்து பேசிய விதமா? அல்லது புகழின் வருகையா? மூன்றுமே ஒன்று கூடி அவரை வாயடைக்க வைத்தது.

“இது பாருங்க.. புகழ் என்னை நம்பி இந்த வீட்டுல வந்துருக்கான். அவன்கிட்ட கோபமா முகத்தை காட்டுறது, பேசாமலே ஒதுங்கி போறதுனு இருந்தீங்கன்னா, இனி எதையும் நான் சொல்லிட்டு செய்ய மாட்டேன்.. உங்க பொண்டாட்டியின் முடிவுக்கும் மதிப்பு தருவிங்கனு நம்புறேன்”என்று முகம் சிவக்க பேசியவர், தான் சொல்ல வந்த விஷயம் முடிந்த விட்ட்து போல சட்டென முகபாவத்தை மாற்றினார்.

“காஃபி ஆறி இருக்கும்.. நான் வேற போட்டு கொண்டு வரேங்க.. நீங்க ப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. மூணு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்”என்று முகம் முழுக்க புன்னகையைப் பூசிக் கொண்டார். மனைவியின் தோரணையில் முதன்முறையாக ஆடிப்போனார் சுதாகரன். கட்டளையிட்டே பழகியவர், இனி சொல்பேச்சை கேட்பாரா? பார்ப்போம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.