(Reading time: 25 - 49 minutes)

அவளின் ஏக்க பேச்சில் முற்றிலும் கரைந்தவனுள், பல மாற்றங்களை விதைத்தது அவளின் ஸ்பரிசம்.  சற்று நேரம் அதில் சுகாமாக தொலைந்தவனை மீட்டது திடீரென வேகமெடுத்த ஈரக் காற்று.  சட்டென தன் தோளிலிருந்து சரயூவின் கையை தட்டிவிட்டு எழுந்து கொண்டான்.

அவளுக்கு முதுகு காட்டி நின்றவன், “நாளைக்கு பேசலாம் சரூ.  இப்போ கிளம்பு!” என்றவனின் குரலில் பழைய ஜெய்யை உணர்ந்தவள் மனமோ, ‘இதுதான் என்னோட சஞ்சு...’ என்று குதூகலித்தது.

‘இதே மாதிரி இருப்பானா இல்லை மாறிடுவானா? என் கையை தட்டிவிட்டானே! என் முகத்தை கூட பார்க்காம, எதுக்கு நாளைக்கு பேசலாம்னு சொல்றா? ஒரு வேளை, இப்போதைக்கு தப்பிச்சா போதும்னு அப்படி சொல்லிட்டு, நாளைக்கு மறுபடியும் வேதாளம் முருங்கமரம் ஏறிடுமோ? இவனை விடக்கூடாது! இன்னைக்கே இதை சரி செய்யனும்’

அவனுக்கு முன் சென்று நின்று கொண்டவள், அவன் முகம் பார்த்து அழகாக சிரித்தாள்.

அவளின் குண்டு கண்களும், மலர்ந்த இதழ்களும் ஜெய்யை புரட்டிபோட்டன.  அவைகளை உணர்ந்திடும் ஆசைப் புயல் அவனை உலுக்கிட நிலைதடுமாறினான்.  அந்நிலையிலும் விழித்து கொண்ட அவன் மனது எச்சரிக்க,

“ஒரு முறை சொன்னா புரியாதா உனக்கு? ஒழுங்கா இங்கிருந்து போ!” என்று எரிச்சலோடு உறுமினான்.

இத்தனை மாதங்களாய் அவனுடைய ஒதுக்கத்தையும் பாரா முகத்தையும் கண்டிருக்கிறாள் தான்.  ஆனாலும் அவனிடம் இப்படியொரு சீற்றத்தை கண்டதில்லை.  எப்போதுமே கனிந்த முகமும் பேச்சுமாக மட்டுமே இருக்கும்.... இவளறிந்திருந்த ஜெய்யிடம், இந்த சீற்றம் மிகவும் புதிது! சற்றும் பொருந்தாத ஒன்றும் கூட.  பயத்தில் நடுங்கி உடல் சிலிட்டது அவளுக்கு. 

‘முதல்ல நல்லபடியா இங்கிருந்து போக சொன்னா... நான் கேக்கலைன்னதும் இப்படி கத்தி என்னை பயமுறுத்த பார்க்குறான்.  இதுக்கு பயந்து இங்கிருந்து போயிட்டா, இவனை சமாதான படுத்த வேற சான்ஸே கிடைக்காதே.... பத்து நாள்ல ட்ரெனிங்காக மைசூர் போகனும்.  அது முடிஞ்சு உடனே வேலைக்கு ஓடனும்.  இவனும் பிஸ்னஸ்னு பிஸியாயிட்டான்னா? இப்போவே என்னோட ஃபோன் கால்கு ரிஸ்பான்ஸ் கிடையாது.  இப்படியே போனா....? ம்ஹீம்... இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி, இதுக்கு ஒரு முடிவு கட்றேன்’

“அது என்ன நாளைக்கு பேசுறது? இன்னைக்கு அதுவும் இப்பவே பேசலாம்” என்று சொன்னவளின் உறுதி கண்களிலும் பிரதிபலித்தது.

சரயூவின் கண்களில் தெரிந்த பயத்தில், வருந்தினாலும் அவள் இங்கிருந்து போனால் சரியென்று நினைத்தவனோ... இப்போது அவளிடம் தெரிந்த உறுதியில் அசந்து போனான்.  எந்த சூழ்நிலையையும் எளிதாய் எதிர் கொள்ளும் தன்னவளின் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் எப்போதுமே ரசிப்பவன் இப்போதும் ரசிக்க தவறவில்லை.

அந்த ரசனையில் அவன் முகம் வெளிபடுத்திய கனிவை கண்டு கொண்டவள், அவனை பார்த்து நாக்கை துருத்தி மூக்கை சுருக்கி குறும்பு கொப்பளிக்கும் கண்களோடு பழிப்பு காட்டினாள்.

இப்படி எதையாவது செஞ்சே உன்னை மயக்கிடுறா! நீயும் அவளை பார்த்து வண்டி வண்டியா ஜொள்ளு விடுறதே வேலையா போச்சு ஜெய் என்று மனம் சலித்து கொண்டது.  அவளை இங்கிருந்து அனுப்பனும்னு கூட மறந்து போச்சா என்ற மனதின் கேள்வியில் வலுகட்டாயமாக வரவழைத்த கோபத்தோடு சரயூவை முறைத்தான்.  

‘இவனுக்கு உம்மேல கோபமெல்லாம் இல்லை.  எதுக்காகவோ கோபமா இருக்க மாதிரி நடிக்கிறா.... விடாத சரயூ அந்த காரணத்தை கண்டுபிடி’ என்ற மனதின் உந்துதலில் இவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும்...

இவள் இங்கிருந்து போகவில்லை என்றால் என்ன? தான் அங்கிருந்து செல்லலாம் என்று ஜெய் அங்கிருந்து பார்ட்டி நடக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

‘பயந்துட்டான்! பேசாததுக்கு காரணத்தை சொல்லிடுவோமோனு பயந்து ஓடுறான்.  ஆனா உன்னை அவ்வளவு சுலபமா விடமுடியாதே சஞ்சு’

விறுவிறுவென முன்னேறி அவனை வழிமறித்தாள் சரயூ.

நின்று அவளை முறைத்தவன், சற்று விலகி மறுபடியும் நடந்தான்.

“சஞ்சு நில்லு!”

ஜெய் பதிலேதும் சொல்லாமல் முன்னேற.... அவனுக்கு முன் நின்றிருந்த சரயூ, அவன் முகத்தை கூர்ந்தவாறே பின்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“நீ நின்னு பேசலைனா என்ன? நான் உங்கூடவே வரேன்... நீ பேசு சஞ்சு! நாளைக்கு வரைக்கு வெய்ட் பண்ண முடியாது”

அவளின் சிறுபிள்ளை தனமான பேச்சும் செயலும் அவனுக்கு சிரிப்பை கொடுத்தது.  அதை வாயினுள் அடக்கி மறுபடியும் சீறினான்,

“பேச முடியாது! உங்கிட்ட ஒரே இம்சையா போச்சு... ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போறியா?”

அவன் தன்னை இம்சை என்று சொன்னதில் திகைத்து போனாள்.  தன்னிடம் ஏதோ காரணத்துக்காக பொய் கோபம் காட்டுகிறான் என்று நினைத்த மனதிற்கு இந்த வார்த்தை பெரும் அடியாய் விழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.