(Reading time: 25 - 49 minutes)

அவள் கூவியதின் காரணம் புரியவும் சற்று சங்கடமாக உணர்ந்தான்.  போதா குறைக்கு அவளின் பார்வை இவனை பாடாய் படுத்தியது.

“ப்ளீஸ் சரூ!” என்று மிகவும் மெல்லியக் குரலில் அவனிடமிருந்து பதில் வரவும்

“சரி...சரி...உன்னை எதுவும் சொல்லலை, ஆனா ஒரு கண்டிஷன் இருக்கே” என்று மறுபடியும் அவன் முகத்தை பார்த்தாள்.

இவள் வெட்க படுவானு பாத்தா, உன்னை வெட்க பட வைக்கிறா! பொன்னுங்க மட்டும் வெட்க படுவாங்கனு யாரோ சொன்னதா ஒரு ஞாபகம்.  ஹூம்....அது யாருனு உனக்கு தெரியுமா ஜெய் என்று மனம் அவனை வம்புக்கு இழுத்து சீண்டியது.

ஒருபுறம் சரயூவும் மறுபுறம் மனதிடமும் சிக்கி திண்டாடினான் ஜெய்.

‘இவ ஏதோ கண்டிஷன்னு சொன்னாலே... என்ன கண்டிஷனோ?’

“பேசாம இருந்தா விட்ருவேன்னு நினைச்சியா? அது நடக்காது சஞ்சு! எங்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட” என்று அவள் சிரிக்க...

அந்த சிரிப்பில் மயங்கியவன், “அதுதா எனக்கு தெரியுமே!”

“புரிஞ்சா சரிதான் சஞ்சு! என்னோட வேலை சுலபமா போச்சு”

மனதில் நினைப்பதாக நினைத்து அவன் வாய்விட்டு வெளியில் சொல்லியிருப்பது புரிந்து அசடு வழிந்தான்.

“இப்போவே வழிஞ்சு எல்லாத்தையும் காலி பண்ணிடாத சஞ்சு! இப்போ தானே பேசவே ஆரம்பிச்சிருக்கோம்.... இன்னைக்கு அது உனக்கு நிறையவே தேவைபடும்னு நினைக்கிறேன்”

‘அய்யோ! இவட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறனே...’

இதையெல்லாம் வெட்க படுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்... இப்போ ஒன்னும் செய்ய முடியாது! சரூ என்ன சொல்றானு கேட்கலாம்... இல்லைனா அவள் உன் மானத்தை கப்பல் ஏத்தி பசுபிக் கடல்ல மிதக்க விட்ருவா என்றது ஜெய்யின் மனம். 

‘இவ செய்தாலும் செய்வா’ என்று ஜெய் நினைக்க

“கண்டிஷன் என்னன்னா சஞ்சு.... அந்த பொண்ணு யாருன்னு எனக்கு சொல்லனும்... அதோட எத்தனை நாளா இது நடக்குதுன்னும் எனக்கு தெரிஞ்சாகனும்... ஏதோ நல்லவனா இருக்கியேனு உன்னை கவனிக்காம விட்டா, நீ பார்த்தியா எங்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்ட”

அவள் பேச்சில் உறைந்து போனான் ஜெய். 

‘யாரந்த பொண்ணு?’ என்ற கேள்வியை யார் கேட்டிருந்தாலும் சாதரணமாக பதில் சொல்லியிருப்பான்.  ஆனால் அவளிருக்க வேண்டிய இடத்தில் வேறொருத்தியை நிறுத்தி பார்க்க எப்படி முடிந்தது இவளால்? நேற்று வரையிலும், தன் காதலை சொல்லி இருக்காதபோதே இப்படியொரு கேள்வியை அவள் கேட்டிருந்தாலும் தன்னால் தாங்கியிருக்க முடியாது.  அப்படியிருக்க, இன்று, தன் காதலை சொன்ன சில நிமிடங்களிலியே அவளால் எப்படி இப்படியொரு கேள்வியை கேட்க முடிந்தது?

தன் மனதில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று சரயூ நினைக்கிறாள் என்பதே அவனுக்கு கசப்பாக இருந்தது.

சற்று முன் தங்கள் புகைபடத்தை பார்த்து வெட்கபட்டாளே! அதற்கு, அவள் மனதில் நான் இருக்கிறேன் என்று தானே அர்த்தம்.  அப்படியிருக்க இவளால் எப்படி என் மனதில் இன்னொருத்தியை குடியேற்ற முடிந்தது?

ஐந்து ஆண்டுகளாக காத்திருந்து, அவள் மனதில் இவனிருப்பதை தெரிந்து கொண்ட பின்னர், காதலை சொல்லியும் என்ன பயன்? வருடங்கள் ஓடிபோக இவள் மனதில் மட்டும் என் மீது காதல் பிறக்கவே இல்லையா? பல வித காதல் கனவுகளை கண்ட அவன் பைத்தியக்காரனா? அவளை மட்டும் சுமந்து சோலையாக இருந்த மனம், இன்று அவளின் கேள்வியில் வரண்ட பாலையாக மாறி ஜெய்யை ஏமாற்றிவிட்டது. 

வலியும் வேதனையுமாக நிமிர்ந்து பார்த்தவனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால் அவனுடைய பாவனையில் ஏதோ ஒன்று அவளை தடுமாற செய்தது.

“அது யாருன்னு சொல்ல பிடிக்கலைனா பரவாயில்லை விடு! அதுக்காக இப்படி பார்க்காத சஞ்சு!”

தன் காதல் இப்போதும் அவளை எட்டவில்லையா? சோர்ந்து போனான்.

“ப்ளீஸ் சஞ்சு! அப்படி பார்க்காத... ஏன்னு தெரியலை... ஆனா உன்னை இப்படி பார்க்க முடியலை சஞ்சு!”

தன் ஏக்கமும் காதலும் அவளை தொடுகிறது என்பது அவனுக்கு இப்போது புரியாமலில்லை.  அது ஆறுதலை தந்தாலும், அவனுடைய மனதில் வேறொருத்தி இருக்கிறாள் என்ற அவளின் எண்ணம்.... அதை நினைக்கயிலேயே மனதில் கோபம் துளிர் விட்டது.  இத்தனை வருடங்களாக அவளை மட்டும் நினைத்து வாழ்ந்ததற்கு கிடைத்த பரிசு இதுதானா? அதுவும் அவள் வாயாலேயே அந்த பரிசை கொடுத்து விட்டாளே! இந்த நினைப்பு அவன் கோபத்தை வளர்த்தது.

“சஞ்சு....ப்ளீஸ்! கொஞ்சம் நார்மலா இரேன் சஞ்சு!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.