(Reading time: 25 - 49 minutes)

வழக்கமாக அவளின் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு செய்து பழகியவனுக்கு, இன்று, அது முடியும் போல் தோன்றவில்லை.  அவ்வளவு எளிதில், அவள் கேட்ட கேள்வியை மறக்கவும் முடியாது என்பது புரிய... பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

“சஞ்சு எங்க போற? நில்லு! உனக்கு என்னாச்சு?” இவள் கேள்விகள் அவனை எட்டினாலும் நிற்காமல் கல்லுரியிலிருந்து வெளியேறினான்.

அதன் பிறகு, அவள் மனதிலிருக்கும் காதலை அவளுக்கு உணர்த்த வேண்டுமென்று மிகவும் கவனமாக செயல்பட்டான்.  நண்பர்களிடம் எப்போதும் போல் சாதாரணமாக பேசுபவன், அவளிடம் அவசியமான நேரங்களில் மட்டும் பேசினான்.  அவளிடம் அவன் காட்டும் அக்கறையையும் நெருக்கத்தையும் வெகுவாக முயன்று நிறுத்தியிருந்தான்.

பேருந்துக்கு எதிர் திசையில் வந்த ஒரு லாரியின் ஹார்ன் சத்தத்தில் யோசனைகளிலிருந்து வெளிவந்தவளின் கண்கள் அவசரமாக ஜெய் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு திரும்பியது. 

அவளுக்கே தெரியாமல் அவளை கவனித்து கொண்டிருந்தவனின் கண்களுக்கும் இவளின் செயல் தப்பவில்லை.  ஆனால் எதையும் வெளிகாட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் ஜெய்.

இவளருகிலிருந்த சௌம்யாவை தங்கள் ஆட்டத்தில் இணைத்து கொண்ட ரூபின், சிறிது நேரத்திற்கெல்லாம் இவளையும் ஜெய்யையும் கூட அழைத்தான்.  இருவரும் மறுத்துவிட, அவர்கள் ஆட்டம் தொடர்ந்தது. 

இவர்களுக்கிடையில் ஏதோ சரியில்லை என்பது மட்டுமே மற்றவருக்கு தெரிந்திருந்தது.  அவர்களை ஒன்று சேர்க்க முடிவு செய்த ரூபின் சௌம்யாவை தன்னோடு அமர்த்தி கொண்டு ஜெய்யை எழுப்பிவிட்டான்.

வேறு வழியில்லாமல் சரயூவினருகில் அவன் உட்கார, இத்தனை நேரமாக தன்னை அலைக்கழித்த கேள்வியை கேட்டு விட்டாள்.

“சஞ்சு! எங்கிட்ட ஏன் பேசமாட்டிங்கிற?” ஏக்கமும் தவிப்பும் அவள் முகத்தை நிறைத்திருக்க..

‘இப்படியெல்லா பார்க்காத சரூ! உனக்குள்ள நானிருக்கேன்னு தெரிஞ்ச பிறகு, என்னை மீறி எனக்குள்ள எழும் எண்ணங்களை, முதலே கட்டுபடுத்த முடியல.. இதுல நீ இப்படி பார்த்து வச்சா, ரொம்ப கஷ்டம்டி’

மனதின் ஓட்டத்தை முகத்தில் பிரதிபலிக்காது போலியான ஆச்சரியத்தை காட்டி,

“இப்போ நான் யாரிட்ட பேசிட்டிருக்க?” என்று புருவங்களை உயர்த்தவும், அந்த அழகில் அவளையுமறியாமல் மனம் மயங்கியது.

அந்த மயக்கமோ ஒரு சில நொடிகள் கூட நிலைக்காது, அவனுடைய கேள்வியில் இருந்த ஒட்டா தன்மை இவளை வீழ்த்தியது. 

சுற்றும் முற்றும் பார்த்தவள், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவள், பாய்ந்து அவன் சட்டை காலரை பற்றி தன் புறமாக திருப்பியிருந்தாள்.  எதிர்பாராத நேரத்தில், தன்னுடைய சட்டை இழுபடவும், அதனோடு சேர்ந்து திரும்பியிருந்தான் ஜெய்.  இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க,

“என்னடா ஓவரா பண்ற? போனா போகுதுன்னு பார்த்தா, நீ என்ன பெரிய இவனா? பேசாம முகத்தை திருப்பிக்கிற? நீ இந்த சரயூவோட ஃப்ரெண்டுங்கிறத மறந்துராத.  இப்போ, யாராவது நம்மை பார்க்குறாங்களானு செக் பண்ணிட்டு சட்டைய பிடிச்சிருக்க... இதே மாதிரி என்னை அவாய்ட் பண்ணி என்னோட கோபத்தை கிளப்பினன்னு வை, எங்க இருக்கோம்னு கூட பார்க்காம அறைஞ்சிருவ” பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்காதபடி மிகவும் மெல்லமாக, அதே சமயம் கோபத்தோடு சீறினாள் சரயூ.

அவள் கையில் சிக்கியிருந்த தன் சட்டை படும் பாட்டை ரசித்து சிலிர்த்தது ஜெய்யின் மனம்.  இதுதானே! இந்த உரிமை தானே அவனுக்கு தேவைபட்டது.  உரிமையோடு ரூபினிடம் மட்டும் சண்டை பிடிப்பவள், தன்னிடம் தள்ளி நிற்கிறாள் என்ற ஜெய்யின் நீண்டநாள் கவலை இன்று தீர்ந்தது.

கோபத்தில் சிவந்திருந்த முகத்தில் எப்போதையும் விட இன்னும் சற்று அதிகமாக விரிந்திருந்த அவளின் கண்களில் கரைந்து கொண்டிருந்தவனை உலுக்கினாள் சரயூ.

“என்னடா பார்வை? சொன்னது புரிஞ்சதா? ஒழுங்கு மரியாதையா எங்கிட்ட பழைய மாதிரி பேசுற”

இவளின் ஆவேசம் அவனுடைய திட்டத்தை மேலும் வலுபடுத்தவே அமைதியாக அவளை பார்த்தான். 

“கேக்கற இல்லை... பதில் சொல்லுடா” அவனை தன்னை நோக்கி இழுத்தாள்.

அத்தனை நெருக்கத்தில், அவளின் உரிமையில் திக்கு முக்காடி போனான் ஜெய்.  இன்னும் சிறிது நேரம் அந்த நெருக்கம் தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ... அவளுடை பிடியிலிருந்து தன்னுடைய சட்டையை அவன் விடுவிக்கவும் பேருந்து நிற்கவும் சரியாக இருந்தது.

‘இப்போ நீ தப்பிச்சிருக்கலாம் சஞ்சு... ஆனா இந்த மூனு நாளைக்குள்ள உன்னை பழைய மாதிரி மாத்துற’ என்று சரயூ தனக்குள் சபதமெடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.