(Reading time: 25 - 49 minutes)

கூர்கின் மிக பிரசித்தமான சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து குதூகலித்தனர் அனைவரும்.  சரயூவின் பெற்றோர் ஜெய்யும் உடனிருப்பான் என்ற நம்பிக்கையில் தான் அவளை அனுப்புவதாக சொல்லியிருக்கவும், எப்போதையும் விட அவளை மிகவும் கவனமாக பார்த்து கொண்டான்.  சரயூ எடுத்த சபதத்தை நிறைவேற்ற அயராது உழைத்தாள்.  ஆனால் வெற்றி தான் கிடைக்கவில்லை.

மூன்றாம் நாள் மாலை, அவர்கள் தங்கியிருந்த ரிசார்டிலேயே ஒரு சிறு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ரிசார்டின் மத்தியில் இருந்த திறந்தவெளியில் சில மேஜைகளும், அவைகளுக்கு ஒருபுறம் புஃபே முறையில் உணவும் மறுபுறம் மினிபாரும் (Minibar) வைத்திருக்க, அதற்கடுத்து மியூசிக் சிஸ்டம், டிஜெவோடு (DJ) டான்ஸ் ஃப்ளோரும் (Dance floor) தயாராக இருந்தது.

ஆண்கள் எல்லோரும் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு சரியாக வந்துவிட பெண்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.

மினிபாரில் அடுக்கப் பட்டிருந்த குளிர்பான டின்கள் மற்றும் மது புட்டிகளிலிருந்து அவரவருக்கும் தேவையானதை எடுத்துகொண்டு மேஜைகளில் சிறு சிறு குழுவாக பிரிந்து உட்கார்ந்து, பானங்களை பருக ஆரம்பித்தனர். 

ரூபினும் வேதிக்கும் கூட தங்களுக்கு பிடித்தமானவகளை எடுத்து வந்திருக்க... ஜெய் மட்டும் தன்னுடைய ஃபோனில் கவனமாக இருந்தான்.

“என்ன மச்சா இது? பார்ட்டியே நாம எஞ்சாய் பண்ணதா.  நீ என்னடானா இப்பவும் இந்த ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்க....” என்று கடிந்த ரூபின் ஃபோனை அவனிடமிருந்து பிடுங்கி அணைத்து வைத்தான்.

முதலில் ரூபினை தடுத்தவன், பிறகு, அவனுக்காக தானே, அவர்கள் வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் அனைவரையும் சேர்த்து இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தான் ஜெய்.  ஒரு மாதத்தில் அமெரிக்க பயணமிருப்பதை மறந்து மிகவும் உற்சாகமாக இந்த மூன்று நாட்களையும் கழித்திருந்தான் ரூபின்.  அப்படியிருப்பவனை வருத்த கூடாதென ஃபோனை எடுத்து தன் பேன்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு,

“சரி மச்சா! இது உனக்கான பார்ட்டி, நாம ஒன்னா சேர்ந்து எஞ்சாய் செய்யலாம்” என்று சொன்னதுதான் தாமதம் போல் பாய்ந்து இவனை கட்டிகொண்டான் ரூபின்.

ஜெய் சாதரணமாக தான் சொன்னான்.  ஆனால் மூன்று நாட்களாக தன்னுடைய அமெரிக்க பயணத்தை முற்றிலுமாக மறந்து எல்லோருடனும் சேர்ந்து அரட்டை அடித்து, சிரித்து, ஒன்றாக உண்டு, ஊரைச் சுற்றி பார்த்து மகிழ்ந்திருந்தவனுக்கு இவற்றையெல்லாம் பிரிய வேண்டும் என்பதை ஜெய்யின் வார்த்தை நினைவூட்டியது.  குடும்பம், காதலி, நண்பர்கள் மற்றும் பிறந்து வளர்ந்த நாட்டையும் பிரியும் வலியை அந்நேரம் உணர்ந்தவனோ நண்பனை ஆரத்தழுவி இருந்தான். 

நண்பர்களை கண்ட வேதிக், தாங்கள் எல்லோரும் ஒன்றாக இன்றிருப்பது போல் இன்னொரு நாள் இருக்க முடியுமோ என்னவோ என்று நினைத்த மாத்திரத்தில் அவர்களின் அணைப்பில் தன்னையும் இணைத்து கொண்டான்.

மூவரின் கடை விழிகளிலும், நட்பின் பிரிவையும் தங்களுக்கிடையே வரவிருக்கும் இடைவெளியையும் நினைத்து சில கண்ணீர் துளிகள்.   

இவர்களை கவனித்த பிரதீப், “போதும்டா நிறுத்துங்க! நீங்க இமோஷ்னல் ஆகி எல்லாரையும் அழ வைக்காதீங்க.  நாம எல்லா ஒன்னா இருக்க இந்த நேரத்தை சந்தோஷமா மாத்துங்க” என்றவனின் பேச்சின் உண்மை புரிந்து மூவரும் விலகி நின்று புன்னகைத்தனர்.

“இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கனும்.  உங்க ட்ரிங்க்ஸை கைல எடுங்க பார்ப்போம்” என்று ப்ரதீப் சொன்னதும் வேதிக்கும் ரூபினும் அவரவர் கொண்டு வந்திருந்த பானங்களை எடுக்க ஜெய் அமைதியாக நின்றிருந்தான்.

“சஞ்சய், உன்னோடு ட்ரிங்க் எங்க?” ப்ரதீப் கேட்கவும்

“இல்லை! எனக்கு ஹாட் ட்ரிங்க்ஸ்ல இன்ட்ரெஸ்ட் இல்லை.  யூ கய்ஸ் கேர்ரி ஆன்”

“யாரும் உன்னை ஹாட் ட்ரிங்க்ட்தா எடுக்கனும்னு சொல்லலையே.  உன்னை போலவே நம்ம பேட்ச்ல (batch) சில பேரு இருக்கவும் தானே சாஃப்ட் ட்ரிங்க் அரெஞ்ச் பண்ணியிருக்கோம்.  போ! போயி உனக்கு என்ன வேணுமோ பார்த்து எடுத்திட்டு வா மச்சா!”

“இல்லை! பரவாயில்லை ப்ரதீப்! இந்த வெதர்ல கோல்டா எதுவும் குடிக்க பிடிக்கலை”

“கம் ஆன் சஞ்சய்! நீ முழுசா குடிக்கலைனாலும் பரவாயில்லை ஒரு சிப்பாச்சும், ப்ளீஸ்” என்று ப்ரதீப் கெஞ்சவும்

“சஞ்சய்க்கு கோக்தா பிடிக்கும்.  இருங்க, நான் போய் எடுத்துட்டு வர” என்று விரைந்த வேதிக் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கோக் டின்னோடு வந்து சேர்ந்தான்.

நால்வரும் ஒரு சேர, “சியர்ஸ்” என்று சொல்லி கையிலிருந்த பானங்களை முட்டிவிட்டு, பருக ஆரம்பித்தனர்.

ஜெய்யும் அவர்களுக்காக ஒரு வாய் குடிக்க, கூர்கின் குளிருக்கு, அந்த குளிர்பானமோ பனிக்கட்டிகளை விழுங்கிய உணர்வை தந்தது.  மற்றவர்களோ விரும்பி பானத்தை பருக, இவன் தானும் குடிப்பது போல் பாவனை செய்தபடி உட்கார்ந்து விட்டான்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.