(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 01 - புவனேஸ்வரி

vellai pookkal ithayam engum malaruthe

மித்ரனே,

பூவொன்று மோதி பூவொன்று வீழ்ந்ததுபோல்,

நீ மோதி நான் தரையில் விழுந்திட,

என் காலில் உதிரமும் உன் விழிகளில் கண்ணீரும்,

உதிர்ந்ததில் உணர்கிறேன்.

விழுந்தது நான், எழுந்தது நட்பென!

காலை மணி 6.30

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா..

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு,

குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

புன்னகை மாறாமல் புல்லாங்குழலுடன் காட்சியளித்த மதுசூதனனை விழிகளில் நிரப்பிக் கொண்டு பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தாள் அந்த பெண். அக்கோயிலுக்கு அடிக்கடி வருபவர்கள் அவளை பரிட்சயமாகவும், புதிதாக வந்தவர்கள் ஆச்சர்யமாகவும் பார்த்து வைத்தனர். எப்போதையும் விட மிக அழகாக தோற்றமளித்தாள் அவள். சந்தனம் மற்றும் ஊதா வண்ணத்தில் வெண்கற்கள் பதிக்கப்பட்டு நுணுக்கமான வேலைப்பாட்டில் நெய்திருந்த பட்டுப்புடவை அவளுக்கு பாந்தமாக பொருந்தியது. அதே வெண்கற்களை தங்கத்துடன் இணைத்து அவளுக்காகவே தயார் செய்திருந்த நகைகள் ஒருபுறம் அவளின் அழகை இரட்டிப்பாக்கின.

இவை அனைத்தையும் மீறி அவள் இதழோரம் இழையோடிய புன்னகையொன்று அந்த மாயக்கண்ணனே அளித்த தனி அழகென தோன்றியது. மொத்ததில் அலங்கரிக்கப்பட்ட “பாதி” மணமகளாகவே தோன்றினாள் அவள். அவளின் பாடலில் எப்போதும் போலவே லயித்து நின்ற அர்ச்சகர் அவள் விழி திறக்கும்வரை காத்திருந்தார்.

“ எப்பவும் போலவே அருமையா பாடிட்ட பாப்பா” நெகிழ்வுடன் அவர் சொல்லிட, மீண்டும் அதே புன்னகையை பதிலாக்கினாள் அவள்.

“ஆமா, இன்னைக்கு ரொம்ப அழகா தெரியுறியே என்னம்மா விஷேசம்?”என்று கேட்டவர் அவளது அனல் தெரிக்கும் பார்வையைக் கண்டதும் தனது ஞாபக மறதியை சபித்துக் கொண்டார்.

“அடடே, இன்னைக்கு ஜனவரி ஆறாம் திகதில? கல்யாணம்னு சொல்லி இருந்தியே..மன்னிச்சிடும்மா.. மறந்துட்டேன்” என்று அவர் உண்மையாகவே வருந்த,

“எப்போ பார்த்தாலும், கஜினி சூர்யா மாதிரி எதையாச்சும் பண்ணிட்டு, குஷி படம் ஜோதிகா மாதிரி மன்னிப்பு கேட்குறீங்க சாமி அங்கிள் நீங்க” என்றாள் அவள். சிறுவயதில் இருந்தே அவள் அவருக்கு பரிட்சயமானவள்தான். தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே அந்த அர்ச்சகரை அவள் “சாமி அங்கிள்” என்று தான் அழைப்பாள்.

“ அட போ பாப்பா..என்னை ஏதாச்சும் சொல்லலன்னா உனக்கு தூக்கம் வராதே..”

“என்னமோ சாமி அங்கிள், உங்களையும் இந்த கண்ணனையும் மறுபடியும் பார்க்க ரொம்ப நாளாகும்னு தோணுது.. இந்த கண்ணன் என்னை கைவிட மாட்டான்ல?” என்று கண்ணனிடம் தனக்காக சிபாரிசு செய்யும்படி பார்வையாலேயே கெஞ்சியபடி கேட்டாள் அவள்.

கோவிலில் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசை நிற்பதை கண்ட அர்ச்சகர், மனம் விட்டு பேச அது தோதான சமயமில்லை என்பதை புரிந்துகொண்டு, “ விழ வைப்பவனும் அவன்தான் கை தூக்கி விடுறதும் அவன்தான்..தைரியமா இரு பாப்பா” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

“அப்படியா கண்ணா? விழுந்தாலும், என்னை நீ கைத்தூக்கி விடுவியா?” என்று பார்வையாலேயே வினவி நின்றிருந்தாள் அவள்.

காலை மணி 8

சுயோதசேனா இல்லம்என்ற பெயர் பலகையை கம்பீரமாக தாங்கி இருந்தது அந்த வீடு. சுயோதன் என்ற துரியோதனின் பெயரையும் வசுசேனா என்ற கர்ணனின்  பெயரையும் இணைத்து அந்த இல்லத்திற்கு பெயரிட்டிருந்தார்கள். பச்சை மரகதகற்களுக்கு நடுவில் பதித்த முத்துக்கள் போல, பச்சை பசேலென்ற தோட்டத்திற்கு நடுவில் வெண்மாளிகையாய் மிளிர்ந்தது அந்த வீடு. வீட்டினுள், இரு கார்களும், ஒரு பைக்கும் நிறுத்தப்பட்டிருந்தன.

“ ஆயிரம் சூரியன் சுட்டாலும்” என  இசைப்புயலின் குரல் செல்ஃபோனில் ஒலிக்க, அந்த பாடலில் நிரம்பியுள்ள நம்பிக்கையை எல்லாம் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவன் போல சிரித்தான் பிரபஞ்சன். ஜன்னல் திரைசீலையை அவன் விலக்கிய மறுநொடியே சூரியன் ஜொலிக்கத் தொடங்கினான்.

வழக்கம்போலவே, மிகவும் பொறுமையாக ஜன்னல் வழியே சுற்றுப்புறத்தை ரசிக்கத் தொடங்கினான் பிரபஞ்சன். அவனது படுக்கை அறையில் இருந்து பார்க்கையில் கடற்கரை இருகரம் நீட்டி அவனை வா என்று அழைப்பது போலவே தோன்றியது. சூரியனின் மங்காத வெளிச்சம் கடல்மீதும் படிய தூரத்தில் இருந்து அதை பார்த்தவனுக்கு, வானிலிருந்து யாரோ பொற்காசுளை சிதறிவிட்டதுபோலவே பிரம்மை தோன்றியது. தினம் தினம் பார்க்கும் காட்சித்தான் என்றாலுமே அவனுக்கும் பொங்கும் ரசனையானது அடங்கியதாக தெரியவில்லை. பிரபஞ்சனின் அறைக்கு பக்கத்து அறையில் இருந்த, கதிரவனும் அதே காட்சியைத்தான் ரசித்துக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.