(Reading time: 16 - 31 minutes)

22. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

மைத்ரீயின் வார்த்தைகள் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சி என்றால் ஜெயிற்கோ தனக்காக பூமியிலிருந்த கடைசி நபரையும் இழந்துவிட்டதாக தோன்றியது.  அன்று தன் கன்னத்தில் அறைந்தவள், இன்று, வார்த்தைகளால் தன் உயிரில் அறைந்துவிட்டாள்.  நட்பை உடைத்து அவளுள் குடியிருக்கும் இவன் மீதான வெறுப்பு வளர்ந்து வேரூன்றியிருப்பதை கண்டு எல்லாமே சூன்யமானது.  தான் சரூவின் மேல் கொண்ட காதலை புரிந்துதானே அன்று அவனுக்குமே தெரியாமல் நிச்சயத்தை நடத்தினாள்.... ஆனால் இப்போது அவள் சொன்ன வார்த்தைகளோ!....அதன் அர்த்தம் அறிந்துதான் சொன்னாளா?  

எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்குமில்ல, அன்னைக்கு உன்னை என்ன செய்றேன்னு பாரு, குரங்கே!” மைத்ரீயின் பெண் பார்க்கும் படலத்தன்று ஜெய் அவளுக்கு சாதகமாக பேசாத கோபத்தில் அவள் சொன்ன வார்த்தைகள்.  விளையாட்டாக சொல்கிறாள் என்று நினைத்து இவன் சிரித்தது, இன்று பொய்த்து விட்டது.

அதை சொன்ன போது, தன் வார்த்தைகள் நிஜமாக போகிறதென்று அவளே அறியாத ஒன்றை இவன் மட்டும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  எல்லாமே காலத்தின் கோலம்!

“உனக்கும் சரயூக்கும் என்னதான் பிரச்சனை? இன்னைக்கு பதில் சொல்லாம நீ தப்பிக்க முடியாது ஜெய்” நூறாவது முறையாக இதே கேள்வியை கடந்த பதினைந்து நாட்களாக கேட்டு கொண்டிருந்தாள் மைத்ரீ.  எப்போதும் போல் ஜெய்யின் பதில் என்னவோ அமைதி மட்டுமே.

தொழில் சம்பந்தமாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த ராகுலிடம் பேசுவதற்காக மொட்டை மாடிக்கு வந்த மைத்ரீக்கு, நண்பனை அங்கு அப்படி கண்டதில் அதிர்ச்சி.

எங்கோ பார்வையை பதித்து இலக்கில்லாமல் இருளை வெறித்தபடி நின்றிருந்தான் ஜெய்.  கூர்க் சென்று வந்ததிலிருந்து நண்பன் கவலையும் குழப்புமாக இருப்பதாக தோன்றியது மைத்ரீக்கு.  முன்பு போல் தன்னிடம் பேசுவதுமில்லை, சரியாக சாப்பிடுவதுமில்லை.  ஒருபுறம் இவன் செய்கைகள் கவலை கொடுக்க மறுபுறம் சரயூவோ இவளிடம் பேசுவதே இல்லை.  எத்தனை முறை அழைத்தும் பயனில்லை.  இதை குறித்து மனதிலிருப்பதை ராகுலிடம் பேசி, அவன் என்னவோ ஏதோ என்று பதறி, போன காரியத்தை முடிக்காமல் திரும்பி வந்தால் என்ன செயவதென்று யோசித்தவள் மேலோட்டமாக தோழியைப் பற்றி விசாரித்தாள்.  சரயூவிற்கு உடல் நலக்குறவு என்று தெரிந்ததும் வீட்டிற்கே சென்றுவிட்டாள் மைத்ரீ.

“வா மைத்ரீ! நானே உன்னை வீட்டுக்கு வர சொல்லாம்னு நினைச்சிருந்த.  நல்ல வேளை நீயே வந்துட்ட” மைத்ரீயின் கையை பிடித்து வரவேற்றார் சாரதா.

“என் ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லைனு தெரிஞ்சா, நீங்க கூப்பிடலனாலும் வருவேன் அத்தை!” என்று இவள் புன்னகைக்க...

“உன் ஃப்ரெண்ட, என்னனு நீயாவது கேளுமா.  அவளோட அப்பா என்ன பேசாதேனு நிறுத்தி வக்கிறதுலுயே குறியா இருக்கார்.  இவ பண்றது எதுவுமே சரியில்லை” என்று புலம்பியபடி கிட்சனுக்கு சென்றார்.

அவர் பின்னாலேயே சென்ற மைரீயிடம் காஃபியை கொடுத்தவர், மகளின் நிலையை குறித்து பேச ஆரம்பித்தார்.

“ட்ரிப் முடிஞ்சு வந்ததிலிருந்து, சரயூ ரூம்லயே அடைஞ்சு கிடக்கிறா.  என்னனு கேட்டா உடம்பு சரியில்லைனு சொல்றா.  சரி டாக்டர்ட்ட காட்டலாம்னு சொன்னாலும் கேட்க மாட்டிங்கிறா.  எங்கிட்ட எதையும் சொல்லலைனாலும் அப்பாவும் பொண்ணும் ஏதோ பேசிக்கிறாங்க.  அது ஒன்னுதா நிம்மதியா இருக்கு” என்று பெருமூச்சு விட்டவர், “ஜெய் தம்பி வேற ரெண்டு முறை வந்து போச்சு.  ஆனா இவ, ரூமை விட்டு வந்து முகத்தை கூட காட்டலை.  தம்பி முகமே மாறி போச்சு.  இவளுக்கு உடம்பு சரியில்லைனா ஜெய் என்ன செய்ய முடியும், சொல்லு?” மகளின் கவலையில் படபடவென பொரிந்தவரை

“மெதுவா அத்தை!” என்றவள் சாப்பாட்டு மேஜையிலிருந்த தண்ணீரை தம்பளரில் ஊற்றி குடிக்க கொடுத்து, “முதல்ல தண்ணீயை குடிங்கத்தை.  உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல” என்றதும் ஆம் என்பதாக சாரதா தலை அசைக்கவும், இவள் புன்னகைத்து, “குட்! இப்போ இதை குடிங்க.  நான் சரயூவை பார்த்துட்டு வர” என்றபடி இவளின் பார்வை வீட்டை சுற்றி சுழன்றது...

அதை புரிந்தவராக, “மேல லெஃப்ட்ல இரண்டாவது ரூம்”

“தேங்க்ஸ் அத்தை!” என்றுவிட்டு மாடியை நோக்கி நகர்ந்தாள்.

‘ரெண்டு முறை இங்க வந்து போயிருக்கா, ஆனா சரயூக்கு உடம்பு சரியில்லைனு எங்கிட்ட ஏன் சொல்லல? இவங்களுக்குள்ள ஏதோ சரியில்லை.  இவட்ட பேசி பார்ப்போம்’ என்று தனக்குள்ளே பேசியபடி வந்தவள் கதவை தட்டவும், அது தாழ் போடாதது தெரிந்தது.

சரயூ சாப்பிட கூட வெளியில் வராமல் இருக்கவும், வேளாவேளைக்கு  சாரதா உணவை அவள் அறைக்கு கொண்டு கொடுத்தார்.  இப்போது கதவு தட்ட படவும், “என்னம்மா வேணும்? கொஞ்ச முன்ன தானே சாப்பிட்ட... எனக்கு எதுவும் வேணும் போம்மா.  பசிச்சா நானே வரேன்” என்று சிடுசிடுத்தாள்.

‘எதுக்கு இத்தனை சிடுசிடுப்பு?’ என்று எட்டி பார்த்தவளுக்கு முதுகு காட்டி, எதிரிலிருந்த சுவற்றை வெறித்தபடி உட்கார்ந்திருந்த சரயூ தெரிந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.