(Reading time: 16 - 31 minutes)

பின்னிருந்து பார்த்தவளுக்கோ சரயூ என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.  அவள் எதிலோ தீவிரமாக ஈடுபட்டிருக்கவும் தான் கதவு தட்டபட்டதும் சிடுசிடுத்திருக்கிறாள் என்று நினைத்தவள், தோழியோடு விளையாடுவதற்கு முடிவெடுத்து சத்தமிடாமல் சென்று, இடது கையால் அவள் கழுத்தை வளைத்து வலது கையால் கண்களை பொத்தினாள்.

“விட்றா என்னை...தொடாதே....என்னை விடு” என்று அலறியபடி திமிறிய சரயூ, கையில் கிடைத்த தலையணையை எடுத்து இவளின் மேல் வீசினாள்.  

விளையாட்டாக கண்ணை பொத்தியவளோ, சரயூவின் அலறில், கைகள் தாமாக கீழிறங்க, இரண்டடி பின்னே நகர்ந்திருந்தாள்.

பயத்தில் உடல் நடுங்க, கைகால்களை மடக்கி சுவரோடு ஒட்டிக் கொண்டாள் சரயூ. 

தோழியின் செயலில் அதிர்ந்து நின்றுவிட்டாள் மைத்ரீ. 

சில நொடிகளுக்கு பின் தன்னிலைக்கு திரும்பியவள் சரயூவை பார்க்க அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.  இப்போதும் இவளை பயப் பார்வை பார்த்து சுவரோடு ஒன்றினாள்.

‘தனியாக இருந்தவளுக்கு, நான் தொட்டதும் என்ன தோனுச்சோ... பயந்துட்டா!’ என்று தன்னை தானே சமாதான படுத்தியவளுக்கு, எதோ ஞாபகம் வரவும், ‘அய்யய்யோ....இவளுக்கு உடம்பு வேற சரியில்லயே.... பயந்தானா இன்னும் ஏதாவது வருமோ?’ என்று எண்ணியவள் அவளை நெருங்கினாள்.

“சரயூ! ஏன் இப்படி பயப்பட்ற? நான் சும்மா விளையாட்டுக்கு பண்ணே” 

கண்கள் மைத்ரீயை பார்த்தாலும் பதிலேதுமில்லை அவளிடத்தில்.

தோழியை செய்கை புரியாத போதும், அவளின் கையை பிடித்து சமாதானம் செய்ய தொடங்கினாள் மைத்ரீ.

“நான், என்ன பேயா, பூதமா? எதுக்குடி அப்படி கத்தின? நீயும் பயந்து என்னையும் பயமுறுத்திட்ட சரயூ”

அவளின் கைகளின் நடுக்கம் குறைந்ததை அறிந்த மைத்ரீ மேலும் பேசினாள்,

“உனக்கு உடம்பு சரியில்லைனு அத்தை ரொம்ப கவலையா இருக்காங்க.  அவங்க வரும்போது இப்படி கத்தி வைக்காத! அப்றம் என்ன நடக்கும்னே சொல்ல முடியாது.  இதுவே எங்கம்மாவா இருந்திருந்தா, இந்நேரத்துக்கு சாமி கோயில்னு என்னை படுத்தி எடுத்திருப்பாங்க.  ஆனா அத்தை, உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தா, நீ அவங்ககிட்ட சிடுசிடுக்கறதெல்லாம் நல்லாயில்லை”

இவள் பேசபேச சரயூ அழத் தொடங்கினாள்.

அவள் எதற்காக அழுகிறாள் என்று புரியாத மைத்ரீ, “ரொம்ப பயந்துட்டியாடி? ஐ ம் சாரி சரயூ!” என்று அவளை அணைத்து கொண்டாள்.

‘உடம்பு சரியில்லாதப்போ இப்படி பயந்து அழுறாளே.  எல்லாம் என்னை சொல்லனும்’

தன் விளையாட்டு வினையாகிவிட்டதென குற்ற உணர்ச்சி மேலிட தோழியை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.

ஏதேதோ பேசி ஒருவாறாக சரயூவை சமாளித்து தூங்க வைத்தவள், தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்காமலே, சாரதாவிடம் சொல்லி கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

தோழியின் பயமும், கண்ணீரும், பயத்தில் அவள் சொன்ன வார்த்தைகளிலும் குழம்பியிருந்தவள், ‘சரயூ இல்லைனா ஜெய்... இவங்க யாராவது வாய திறக்காம எதையுமே தெரிஞ்சுக்க முடியாது போல’ என்று நினைத்து கொண்டாள்.

அதற்கடுத்து இருமுறை அவளை பார்க்க சென்றவளை, பார்க்க முடியாதென மறுத்துவிட்டாள் சரயூ.  கைபேசி அழைப்புகளுக்கும் எந்த பயனும் இல்லாமல் போனது. 

இவளின் கேள்விகளை தவிர்த்து கொண்டிருந்த ஜெய்யை இங்கு பார்க்கவும் அவனை விட கூடாதென முடிவெடுத்து....

“சொல்லுடா, என்ன பிரச்சனை? நீயும் பேச மாட்டிங்குற, அவளும் பேச மாட்டிங்குறா.  நான் எதுக்கு உங்க நடுவுல மூக்கை நுழைக்கிறது... நீங்களே சமாதானம் ஆகுவீங்கனு நினைச்சுதா இத்தனை நாள் சும்மா இருந்ததே.... இதுக்கப்றம் வெய்ட் பண்றதுல எந்த பலனுமில்லைனு தெரிஞ்சு போச்சு ஜெய்.  இங்க அம்மாவும் அங்க அத்தையும்னு கவலையும் புலம்பலுமா இருக்காங்க.  அத்தைனாலும் பரவாயில்ல....நான் ஏதாவது செய்யமாட்டேனானு கேக்குறதோட நிறுத்திக்கிறாங்க.  ஆனா அம்மா, காலைல ஆரம்பிச்சாங்கனா நைட் தூங்குற வரைக்கும், என்னை கேள்வி கேட்டே கொல்றாங்க.  உன.....” பட்டாசு போல் வெடித்து கொண்டிருந்தவளை திசை திருப்பியது கைபேசி அழைப்பு.

ராகுலின் அழைப்பு என்று காட்டியதை அணைத்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு ஜெய்யும் இவள் கைபேசியை பார்ப்பது தெரிந்து,

“என்னடா பார்வை? அம்மா தொல்லைலிருந்து தப்பிச்சு வந்ததே இதுக்குதான்.  சரி அதை விடு! முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்று காய்ந்தவளை அமைதியாக பார்த்தவன்,

“ராகுல் தானே ஃபோன்ல! நீ அவரோட பேசு மைதி.  நான் அப்றம் வரேன்” கிடைத்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாக்கி தப்பித்து செல்ல முற்பட்டான் ஜெய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.