(Reading time: 16 - 31 minutes)

இத்தனை நாட்களாக தப்பித்துவிட்டு இப்போதும் தப்பிக்க பார்க்கிறான் என்றதும் எழுந்த கோபத்தில், “ஹே நில்லு! நம்ம ஃப்ரெண்ட்ஷிப் உண்மைனா, என்ன நடந்ததுனு சொல்லிட்டு போ” என்று அவன் மறுத்து ஓட முடியாத வார்த்தைகளை சொல்லியிருந்தாள் மைத்ரீ.

காதல் வேகத்தில் நடந்துவிட்டிருந்த செயலை அவன் நியாய படுத்த விரும்பவில்லை.  அப்படியே அவன் நினைத்தாலும் அதை செய்யவும் முடியாது.  குற்ற உணர்ச்சி தலைதூக்க சரயூவை அழைத்தான்.  அந்த பக்கம் ரிங்க் போனதே தவிர அழைப்பு எற்கபடவில்லை.  எத்தனை முறை முயன்றாலும் பயனில்லாமல் போக, அன்று கண்ணீர் வழிய கண்ட அவளின் முகமே தோன்றி இம்சிக்கவும் அவளின் வீட்டிற்கே சென்றுவிட்டான்.  தன் பெற்றோரின் முன் எதையும் காட்டி கொள்ளாது தன்னிடம் பேசிடுவாள், இல்லையென்றால், குறைந்த பட்சம் அவள் முகத்தையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.  அப்போதாவது அவளின் அழுத முகம் மனதிலிருந்து மறையும் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.  சௌம்யா, ரூபின், வேதிக் என எல்லோரின் ஃபோனிலிருந்தும் அழைத்தும் பார்த்தாயிற்று.  இன்னும் என்ன செய்ய முடியுமென யோசித்து யோசித்து சோர்ந்து போனான். 

இதற்கிடையில் வடிவு, ப்ரியா, மைத்ரீயென அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் மூச்சு முட்டுவது போன்றதொரு நிலை.  யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ளாது மனதோடு மறுகியவனுக்கு திடீரென தோன்றிய கேள்வியில் ஆடி போனான்.  தன்னை கேட்டது போல் மைத்ரீ சரயூவிடம் கேட்டு அவள் நடந்ததை சொல்லிவிட்டால், அதை மைத்ரீ எப்படி எடுத்துகொள்வாள்? தன் காதலே என்னாகுமோ என்று அவன் பயந்திருந்த நேரத்தில் நட்பையும் இழக்க வேண்டி வருமோ என்ற எண்ணத்தில் செயவதறியாது தத்தளித்தான்.

சரயூ இவனிடத்தில் கோபத்தை காட்டினால் அது நியாயம்.  ஆனால் அவளோ யாரிடமும் தொடர்பில் இல்லாமல் இப்படி கூட்டில் அடங்கியது பல விபரீதமான கேள்விகளை இவனுக்குள் விதைத்தது.  அவள் தைரியமானவள்! எந்த தவறான முடிவையும் எடுக்க மாட்டாள் தான்.... இருந்தும் அவளின் கண்ணீர்...அது தான் அவனை அலைக்கழித்தது.  இவனுக்கு தெரிந்து அவள் கண்ணீர் விட்டதில்லை.  அப்படியிருக்க அன்று அழுது கொண்டே ஓடினாளே!

அவன் நினைத்திருந்தால், பிஸ்னெஸ் பார்க்கிறேன் என்ற பெயரில் இங்கு வருவதை தவிர்த்திருக்கலாம்.  ஆனால் சரயூவை பற்றி மைத்ரீக்கு ஏதாவது தெரிய வந்தால் என்ற நப்பாசையில் இங்கு வருவதையும் நிறுத்தவில்லை.  அதே சமயம் மைத்ரீயின் கேள்விகளிலிருந்து தப்பிக்க மாடிக்கு வந்துவிடுவான்.  அவன் சற்றும் எதிர்பாராதது இப்படி தனியாக இவளிடம் மாட்டியது.  இப்போது அவள் தங்களின் நட்பை முன்னிறுத்தி கேட்ட பிறகு அவன் எதை மறைக்க முடியும்? ஜெய் நடந்ததை சொன்னாலும் சொல்லாவிடினும் இவன் நட்பின் நிலை என்னவோ கேள்விகுறி தான். 

மனதை திடபடுத்தியவன், அன்று ரிசார்ட்டில் வைத்து நடந்ததை சொல்லி முடிக்கவும், அவனை அறைந்திருந்தாள் மைத்ரீ.

தன் நண்பனிடமிருந்து இப்படியொரு செய்லை சற்றும் எதிர்பாராதவள் அதிர்ந்து போனாள்.  அன்று சரயூ ஏன் அப்படி அலறினாள் என்று இப்போது புரிந்தது.  எந்த அளவுக்கு ஒரு பெண் பாதிக்க பட்டிருந்தால் தொடுவது ஆணா பெண்ணா என்ற வித்தியாத்தை கூட உணர முடியாது பயந்து அலறியிருப்பாள்.... அதை நினைக்கியிலேயே நொஞ்சு நடுங்க நண்பனை பார்த்தாள்.  இவனும் ஒரு சராசரி ஆண்மகன் தான்.  சந்தர்பத்திற்காக காத்திருந்திருக்கிறான் என்று முத்திரை குத்தியது அவள் மனது.

தவறு தன் பக்கமிருப்பதால் தலை குனிந்தபடி அவள் சொல்ல போகும் வார்த்தைகளுக்காக காத்திருந்தான் ஜெய்.

“ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்குறதுக்கு உனக்கு வெட்கமா இல்லை? நீ என்னோட ஃப்ரெண்டுனு நினைக்கவே அவமானமாயிருக்கு” என்றவளின் முகத்தில் அப்படியொரு அருவருப்பு.

அவளுடைய, அவமானமென்ற வார்த்தையில் நிமிர்ந்தவனின் கண்ணிலும் அது தப்பவில்லை.  அந்த நிமிடம், அவள் தன்னை நண்பன் என்று பெருமையாக சொல்லி கொண்ட தருணங்கள் மனக்கண்ணில் தோன்றவும், அவன் செயல் தானே தோழியின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.

“சாரி மைதி!” என்றவனின் கண்களிலும் குரலிலும் கலக்கம் நிரம்பி வழிந்தது.

“யாருக்கு வேணும் உன்னோட மன்னிப்பு? போடா போ... உன்னையெல்லாம் நம்பினேனே என்னை சொல்லனும்” என்றவளின் குரல் அடைத்தது.

“உன்னோட காதல் உண்மைனு நம்பி, ரெண்டு வீட்டு பெரியவங்களையும் சமாளிச்சு என்னோட நிச்சயத்தன்னைக்கே உனக்கும் சரயூக்கும் நிச்சயம் செய்து வச்சேனே!” என்று நெற்றியில் அறைந்து கொண்டு, “தப்பு பண்ணிட்ட... நான் தப்பு பண்ணிட்ட” என்று வருந்தியவளின் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.