(Reading time: 13 - 25 minutes)

அமேலியா - 39 - சிவாஜிதாசன்

Ameliya

சினிமாவில் வரும் திடுக்கிடும் திருப்பங்கள் போல் இரண்டு மூன்று நாட்களாக வசந்தின் விவகாரத்தில் சந்தித்து வருகிறார்கள் ஜானும் ஜெஸிகாவும்.  

அமேலியாவின் விஷயத்தில் வசந்தின் நடவடிக்கைகள் ஜெஸிகாவிற்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்குள் மௌனம் நிலவியது. யார் முதலில் பேச்சைத் துவங்குவது என்று அவர்களுக்குள் போட்டி இருந்திருக்கலாம். ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு தலைவர்களின் சிலை போல் நின்றிருந்தார்கள்.

எல்லோரையும் கண்ட மகிழ்ச்சியில் அமேலியா இதழில் புன்னகையை ஓடவிட்டாள். ஆனால், அந்த புன்னகை இரண்டொரு நொடிகளில் மறைந்து போனது. தான் இங்கு வந்தது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலும் என எண்ணினாள். அவளின் கூற்று உண்மை என்பது போல் அவர்களது மௌனம் சாட்சியாய் அமைந்தது.

தன் கவனத்தை அங்கு சூழ்ந்திருந்த இயற்கையின் மீது ஓடவிட்ட அமேலியா, அப்பொழுது தான் ஓர் உண்மையை உணர்ந்தாள். அந்த நொடி அவள் சுதந்திரம் அடைந்து விட்டதை நினைவுபடுத்தியது.

வானில் தவழும் மேகக் கூட்டங்களைப் பார்த்தபடி தன் சுதந்திர மூச்சை உள்ளே இழுத்தாள். தான் கடந்து வந்த முட் பாதைகள் எல்லாம் சோலைகளாக மாறிவிட்டதைப் போல் அவள் மனம் லேசானது. இயற்கை அழைக்க கால்கள் தன்னையறியாமல் நடைபோட அமேலியா பிரமிப்போடு இயற்கையை ரசிக்க சென்றாள். அவள் சென்றதை யாரும் பார்க்கவில்லை. இன்னும் அவர்கள் சிலையாகவே இருந்தார்கள்.

ஜான் மட்டும் தன் காரை நாய்க்குட்டியைப் போல சுற்றி சுற்றி வந்து பார்த்தபடி இருந்தான். அவன் மனதுக்கு பிடித்தபடி இருந்த அந்த கார் அலங்கோலமாக காட்சியளிப்பது அவன் மனதை மேலும் ரணப்படுத்தியது.

"வீடு போச்சு கார் போச்சு லவ்வும் செட் ஆகாது" வசந்தை சில நொடிகள் நோக்கிவிட்டு "நண்பர்களும் சரியில்லை. இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு? பேசாம இவங்களை விஷம் வச்சு கொன்னுடலாமா? ஜெயில்ல கூட கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தான். 

"என்னடா? லூசு போல பேசிட்டு இருக்க" என்று எதுவும் நடக்காதது போல் கேட்டான் வசந்த்.

"எந்த மெண்டல் ஹாஸ்பிட்டல்ல போய் சேரலாம்னு எனக்கு நானே கேட்டுகிட்டு இருந்தேன்"

"நான் இருக்கும்போது நீ ஏண்டா கவலைப்படுற?"

"ஏன்? நீயே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் விடுறேனு சொல்லுறியா?"

"சே சே உனக்கு உறுதுணையா இருப்பேன்னு சொன்னேன்"

"அதை உபத்திரம் செய்றவன் சொல்லக்கூடாது"

"ஜெஸ்ஸி, ஜான் என்ன சொல்லுறான்னு பாத்தியா?"

"நான் கிளம்பணும் வசந்த்"

"இங்க என்ன பிரச்னை ஓடிட்டு இருக்கு, நீ சம்மந்தமே இல்லாம கிளம்பணும்னு சொல்லுற"

"உங்க பிரச்சனைக்குள்ள வரதுக்கு நான் யாரு? என் வீட்டோட சாவிய கொடு"

"ஜெஸ்ஸி"

"சாவியை கொடுன்னு சொன்னேன்"

"என் மேல என்ன கோவம் உனக்கு?"

"உன் மேல கோவப்பட நான் யாரு? எனக்கு என் சாவி வேணும்"

"நீ விஷயத்தை சொல்லாம நான் எதையும் கொடுக்கபோறது இல்லை"

"அன்னைக்கு எதுக்கு அமேலியாவை பார்க்க அப்படி ஓடுன?"

"அவளுக்கு சாப்பிட எதுவும் இல்லை. சாப்பாடு இல்லாம அவ எப்படியிருப்பா?"

"சரி, இந்த இரண்டு நாளுல சார் அந்த பொண்ணுக்கு என்ன எல்லாம் சாப்பிட கொடுத்தீங்க?"

அந்த கேள்வியை வசந்த் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியடைந்தான். அது அவன் முகத்தில் அப்பட்டமாக பிரதிபலித்தது.

"சரியான பாயிண்ட் ஜெஸ்ஸி. நான் என்ன நினைக்குறேன்னா, என் காரை நாசப்படுத்துறதுக்குனே அமேலியாவை பார்க்கபோறேன்னு பொய் சொல்லிருப்பான். என் கார் மேல அப்படியொரு பொறாமை அவனுக்கு"

"நீ கொஞ்சம் வாயை மூடுறீயா?"

"இங்க இருந்தே அங்க இருக்க உன் வாயை எப்படி மூட முடியும் ஜெஸ்ஸி?"

"ஜான் இங்க வா" பரிவுடன் அழைத்தாள் ஜெஸ்ஸி.

"என்ன ஜெஸ்ஸி?"

"வா சொல்லுறேன்"

"இவ்வளவு பாசமா என்னை கூப்பிடமாட்டியே" என்றபடி ஜெஸிகாவின் அருகில் சென்றான் ஜான்.

"கண்ணு நல்லா தெரியுதா?"

ஜான் சிரித்தான். "எனக்கென்ன ஜெஸ்ஸி? வானத்துல இருக்க கடவுள் கூட தெரியுறாரு. அங்க பாரு, அவரு கை அசைச்சு ஹாய் சொல்லுறாரு. ஹலோ சார்! வாங்க காபி சாப்பிடலாம்" என்று வானைப் பார்த்து பேசிய ஜான், "அவருக்கு நேரம் இல்லையாம், இன்னொரு நாள் வரேன்னு சொல்லுறாரு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.