(Reading time: 13 - 25 minutes)

அங்கு நிலவிய ஆழ்ந்த தனிமை அவள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை மேலோங்கச் செய்தது. கடல் வேறு தன்னிடம் வருமாறு அவளை வற்புறுத்தியது. தான் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கும் விடை தெரியப் போவதில்லை. எதையும் தெரிவிக்காத உலகில் நாம் ஏன் வாழ வேண்டும்?

அமேலியா மெதுவாக தண்ணீரில் இறங்கினாள். அவளுக்கு பயம் வந்தது. சிறிது நேர மௌனம், சுற்றி ஒரு முறை நோட்டம், தனிமை, பயம், மரணத்தைப் பற்றி எண்ணுதல், மீண்டும் நீரில் கால் வைத்தல், பிறகு பயம் கொண்டு பின் வாங்குதல். இவ்வாறாகவே சில நிமிடங்கள் கடந்தன.

சிறிது நேரம் மறையும் சூரியனை நோக்கினாள் அமேலியா. அது கடலில் மெதுவாக கரைந்துகொண்டிருந்தது. கடற்கரை மணலில் தான் பதித்த காலடி சுவடுகளை பார்த்தாள். தன் பாதையில் தன்னைத் தவிர யாரும் செல்ல முடியாது. விறுப்போ வெறுப்போ பயணம் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து செல்ல வேண்டும்.

எதற்காக நான் செல்ல வேண்டும்? நான் தான் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போகிறேனே. இந்த கடலைக் கண்டு நான் ஏன் பயப்படுகிறேன்? உண்மையில் கடலைக் கண்டு தான் எனக்கு பயமா, அல்லது மரணத்தைக் கண்டா? ஐந்து நிமிடங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டால் எல்லாம் முடிந்து விடுமே. சில நிமிடங்கள் கூட உன்னால் பொறுத்து கொள்ள முடியாதா அமேலியா?

அவளுக்கு துணிவு பிறந்தது. உலகத்தையே வெற்றி கொண்டது போல் தைரியம். ஏ உலகமே! இனி உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும். நான் உன்னை விட்டு செல்லப் போகிறேன். இனி என்னை நீ துன்புறுத்த முடியாது. பாசாங்கு செய்து ஏமாற்ற முடியாது. பந்த பாசங்களைக் காட்டி மயக்க முடியாது. இந்த நிமிடம் நான் உன்னை வென்றுவிட்டேன். என்னிடமும் தோற்று நீ பரிதாபமாக நிற்கிறாய். என்ன செய்வதென்று யோசிக்கிறாய்.

இதோ! நான் நீரில் இறங்கிவிட்டேன். இறுதியாக உன்னிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். என்னைப் போன்ற அபலைகளை நீ உருவாக்காதே. நானே முடிவாகிக் கொள்கிறேன். இனி தொடங்க வேண்டாம்.

அமேலியாவிற்கு பயம் வந்தது. திரும்ப கரைக்கு சென்றுவிடலாமா என்று எண்ணுவதற்குள் ராட்சத அலை ஒன்று அவளை கீழே தள்ளியது. அவள் எழுவதற்குள் மீண்டுமொரு அலை அவளை இழுத்து அமேலியா தண்ணீரில் மூழ்கினாள். மூச்சு விட முடியவில்லை. துடித்தாள், கை கால்களை ஆட்டினாள். பதினெட்டு வருட பயணங்கள் மின்னலாக மனக்கண் முன்னால் தோன்றின. இறுதியாக வசந்தின் முகம்!

தொடரும்...

Episode # 38

Episode # 40

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.