(Reading time: 13 - 25 minutes)

திடீரென ஜெஸிகாவின் குரல் நின்றது. ஜான் நின்றான். 'அவள் குரல் எங்கே? ஒருவேளை, இங்கிருந்து சென்றுவிட்டாளா? எப்போவாச்சும் தான் எனக்கே வீரம் வருது, அதுவும் பாதியிலே தடைபடணுமா?'. ஜெஸிகா மீண்டும் பேசினாள். ஜானின் வீரம் மீண்டும் எழுந்தது. வேகமாக சென்றான். பாதையில் இருந்த கல்லில் இடித்து வலியால் அலறினான்.  

"ஜான் என்ன ஆச்சு?" வசந்தின் குரல் கேட்டது.

"ஒண்ணும் இல்லை, நீங்க பேசுங்க" என்று நொண்டி நொண்டி நடந்தான் ஜான்.

"ஏன் அப்படி நடக்குற?" என்றான் வசந்த்.

"கேட் வாக் போல இது லயன் வாக். உலகத்துல இருக்க வீரமான ஆண்கள் மட்டும் தான் இப்படி நடப்பாங்க. இதெல்லாம் உனக்கு புரியாது"

"இத பார்த்தா அப்படி தெரியலையே. அடிபட்ட நாய் வலி பொறுக்காம ஓடி வர போல இருக்கு"

"உன்கிட்ட நான் எந்த கருத்தையும் கேக்கல வசந்த். நீ எங்க இருக்க?"

"கொஞ்சம் ரைட்ல வா"

ஜான் பாதையை மாற்றினான். ஆனால், வசந்தை கடந்து நேராக சென்று ஒரு மரத்தின் முன்னால் நின்றான். 'இது தான் ஜெஸ்ஸி. மரம் மாதிரி நின்னுட்டு இருக்கா' என எண்ணியவன், "என்ன அப்படி பாக்குற? என்னையா அடிக்குற?" என்று மரத்தை ஓங்கி அடித்தான். அவனுக்கு வலித்தது. இருந்தும் மீண்டுமொரு அடி அடித்ததும் அவனது கை ஒடிந்துவிட்டதை போல க்ளிக் என்றது. வலி உயிரைப் பிடுங்கியதால் கத்தினான்.

"நான் இங்க இருக்கேன் ஜான். நீ ஏன் மரம் கூட சண்டை போடுற?"

"போச்சுடா! என் வீரம் எல்லாம் கேவலப்பட்டு போச்சு" என ஜெஸிகாவை நோக்கி நேராக வந்தான் ஜான்.  

"நீ தப்பா புரிஞ்சிகிட்ட ஜெஸ்ஸி. நான் உன்னை அடிக்க முயற்சி பண்ணலை. எப்பவும் நான் மரத்துல குத்தி தான் பாக்சிங் பிராக்டிஸ் பண்ணுவேன்"

"ஜெஸிகா அந்த பக்கம் இருக்கா" என்றான் வசந்த்

ஜெஸிகா இருந்த பக்கம் திரும்பிய ஜான், "என்னை நம்பு ஜெஸ்ஸி எனக்கு வயலென்ஸ் பிடிக்காது. புத்தரோட வம்சாவளி நான்"

"நீ பேச ஆரம்பிச்சபோதே ஜெஸிகா இங்கிருந்து போயிட்டா"

"அட போங்கடா! என்னால முடியல" என்று சலித்தபடி துவண்டு அமர்ந்தான் ஜான்.

அமேலியா அங்கில்லாததை உணர்ந்த வசந்த் அவளைத் தேடி சென்றான்.

யற்கையின் அழகு அமேலியாவை மயக்கியது. புயலால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்திருந்தாலும் அவ்விடத்தின் அழகுக்கு பெரியதாய் பங்கம் ஏற்படவில்லை. ஆங்காங்கே தேங்கியிருந்த மழை நீர் மட்டும் அமேலியாவிற்கு அசௌகரியத்தை உண்டாக்கியது. வானில் தெரியும் மேகத்தட்டுகள் தூரத்தில் தெரியும் மலையின் மேல் குடையாய் படர்ந்திருப்பதைக் கண்டு அதிசயித்தாள். இது போன்ற மனம் மயக்கும் காட்சிகளை இதற்கு முன் அவள் கண்டதில்லை. அவள் உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடியது. துப்பாக்கி குண்டுகளின் சத்தம், அழுகுரல், தூசி படிந்த வீடுகள், வாகனங்களின் ஹாரன் சத்தம், ஜன கூட்டங்கள் என்று எதுவும் இல்லாமல் ஆழ்ந்த அமைதியை அமேலியா உணர்ந்தாள்.

பறவைகளின் ஒலி, இலைகளின் பச்சை வாசம், சற்று தொலைவில் இருக்கும் கடல் அலைகளின் ஓசை, இவையெல்லாம் அமேலியாவை ஈர்த்தன. உலகில் தான் எத்தனை விதமான இடங்கள்! ஓரிடத்தில் அமைதி, மற்றொரு இடத்தில போர், இன்னுமோர் இடத்தில மகிழ்ச்சி. அமேலியாவின் தத்துவக் கேள்விகள் மனம் முழுவதும் ஆக்கிரமித்தன.

கடற்காற்றின் குளிர்ச்சி அமேலியாவின் உடலை குண்டூசியால் குத்தியது. அதைக் கூட உணராமல் கடற்கரையை நோக்கி சென்றாள். மனித நடமாட்டம் இல்லாத அமைதியான கடல் பகுதி மணற்பரப்பில் தன் கால்  தடத்தை பதித்தபடி கடலின் அருகில் சென்றாள் அமேலியா. காற்றில் அவள் ஆடைகள் சரசமாட கடல் அலையின் ஓசை அவளை தன்னிடம் வருமாறு அழைத்தது. ஒருவித பயத்துடன் கடல் நீரில் கால் வைத்தாள். அவள் உடல் சில்லிட்டது. பயத்தில் சில அடிகள் பின்னால் நகர்ந்தாள். முதன் முதலாக கடல் நீரில் கால் வைத்த நொடி புதுமையை உணர்ந்தாள்.

ஈராக்கை விட்டு கடலில் வந்த தருணத்தை எண்ணிப் பார்த்தாள். அவள் வாழ்க்கையில் நடந்த, மறக்க நினைக்கும் ஆனால் மறக்க முடியாத வேதனைகள் நிரம்பிய நாள். ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றிய நாள்! இப்பொழுது இங்கு நிற்கிறேன். இதற்கு என்ன பதில்? அலைகள் சொல்லுமா?

அமேலியாவின் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது. ஏதேனும் கப்பல் ஒன்று வந்து அவளை வீட்டிற்கு அழைத்து செல்லாதா என்று கூட  நினைத்தாள். நினைப்பதல்லாம் நிறைவேறிவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

தன் கண் எதிரே கடலில் குதித்த அமெரிக்கனை நினைத்து பார்த்தாள். கடல் அவனை விழுங்கியபோது அவன் எப்படி சிரமப்பட்டு துடிதுடித்து உயிரை விட்டிருப்பான். வாழ்வதை விட இறப்பதே மேல் என்று அவள் நினைத்திருக்கிறான். பாவம்! அவன் காதலில், விதியின் விளையாட்டில் தான் எத்தனை முடிச்சுகள்!

இப்படியான எண்ணங்களால் மூழ்கியிருந்த அமேலியாவிற்கு விபரீதமான எண்ணமொன்று உருவானது. தான் இறந்துவிட்டால் என்ன? தான் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேனா? தன்னைக் கண்டு யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. ஏன் அவர்களுக்கு பாரமாக, எதற்காக இருக்க வேண்டும்? இது நாள் வரையில் தன் ஊருக்கு செல்ல எந்த வழியும் தெரியவில்லை. உண்மையில் நாம் ஈராக் செல்வோமா? பெற்றோரை பார்ப்போமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.