(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 10 - வத்ஸலா

Kannathil muthamondru

சில நிமிடங்கள் முன் பேசிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு இவர்களை மறுபடியும் பார்த்தார் சுவாமிநாதன்..!

பெரியப்பா எதிர்பார்த்தது போல் கோபம்தான் மிகுந்தது சுவாமிநாதனின் கண்களில். சுற்றிலும் அங்கங்கே முக்கிய விருந்தினர்கள் பலர் நின்றிருக்க கோபம் வெடித்து விடாமல் தனக்குள்ளே அழுத்திக்கொண்டார் சுவாமிநாதன். அது பெரியப்பாவுக்கு புரியாமலும் இல்லை.

கழற்றிய கண்ணாடியை மறுபடி அணிந்துக்கொண்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு இதழோரத்தில் ஒரு புன்னகைத்துளியை தேக்கிக்கொண்டு

‘மிஸ்டர் ஆனந்தகண்ணன்! ரைட்?’ வாங்க வாங்க’ என்றார் அவர். வணங்கிய கரங்கள் இறங்காமல் பெரியப்பா புன்னகைக்க

‘மை காட். இந்த நாட்டிலே உங்க பையன் எவ்வளவு பெரிய ஆளு. நாங்க எல்லாரும் ஒண்ணுமே இல்லை. நீங்க என் முன்னாலே இப்படி கை கூப்பி நிக்கலாமா சார்.’ சொன்னவரின்  குரலில் கொஞ்சம் எகத்தாளம் எட்டிப்பார்த்தது உண்மை.

ஒரு முறை தனது மகனை பார்த்து புன்னகைத்துக்கொண்டார் சுவாமிநாதன். ‘நிஜமாவே ஜெயிச்சிட்டேடா கண்ணா நீ’ வாய்விட்டு அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் பெரியப்பாவுக்கு நன்றாக புரிந்தது.

அப்பாவின் வார்த்தைகள் மெல்ல உள்ளுக்குள் இறங்க ஒரு ஆழமான சுவாசம் எடுத்துக்கொண்டு பெரியப்பாவையும், அனுவையும் தீர்கமாக பார்த்தான் ஹரிஷ். அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என புரியவில்லை பெரியப்பாவுக்கு.

சுவாமிநாதன் என்ன சொல்ல வருகிறார் என புரிந்துக்கொள்ள முடியாமல் அனு கேள்வியாய் ஹரீஷை பார்க்க சட்டென அப்பாவின் பக்கம் திரும்பினான் அவன். .

‘ஏன்பா? ஏன் அப்படி சொல்றீங்க? எனக்கு புரியலை’ கேட்டான் ஹரிஷ்.

அப்போதுதான் சுருக்கென்றது சுவாமிநாதனுக்கு. ‘அனுவின் அண்ணன்தான் ஷங்கர் என  ஒரு வேளை ஹரிஷுக்கு தெரிந்திருக்காதோ?’

‘ஒண்ணுமில்லை. எங்க ரெண்டு பேருக்கு நடுவிலே ஒரு பழைய கணக்கு.’ சமாளித்தார் அப்பா ’ஆமாம் நீ சாரோட பிள்ளையை மீட் பண்ணி இருக்கியா?’ பெரியப்பாவை பார்த்துக்கொண்டே கேட்டார் சுவாமிநாதன்

‘இல்லையேபா. அவர் அவ்வளவு பெரிய ஆளா?’ அவன் பார்வை பெரியப்பாவை தொட்டு மீண்டது. ‘அப்படின்னா நான் உடனே மீட் பண்ணனுமே’ அவன் சொல்ல

‘அப்படி ஒண்ணும் அவசரம் இல்லை. மீட் பண்ணலாம் நேரம் வரும்போது’ கொஞ்சம் அழுத்தமும் ,அலட்சியமும் ஒரு சேர வந்திருந்தது அவர் குரலில்.

‘சுவாமிநாதன் மீது எந்த குற்றமும் இல்லை என்று தோன்றியது பெரியப்பாவுக்கு., அவர் நிலையில் எந்த தந்தை இருந்தாலும் இப்படித்தான் நடந்துக்கொள்ளக்கூடும். சொல்லப்போனால் அவர் மிக மிக நாகரீகமாகவே நடந்துக்கொள்கிறார்.’ யோசனையுடனே மெல்ல தாழ்ந்தன பெரியப்பாவின் விழிகள். மகனும், மருமகளும் அன்றொரு நாள் செய்து வைத்த காரியத்துக்கு இன்று இவர் தலை தாழ்ந்துதானே ஆக வேண்டும்

அதற்குள் ‘இது யாரு சித்தப்பா?’ அனுவை காட்டி கேட்டது ஹரீஷின் கை பற்றிக்கொண்டு நின்றிருந்த குழந்தை அனு.

சின்ன புன்னகையுடன் தூக்கிக்கொண்டான் குழந்தையை. அவன் பார்வை ஒரு முறை அங்கிருந்த மூவரையும் வருடி திரும்ப ‘உன் சித்திடா’ என்றான் உறுதியான குரலில்.

‘தாத்தாவை கேளு. ப்ளீஸ் தாத்தா இவங்களையே நம்ம வீட்டுக்கு சித்தியா கூட்டிட்டு வந்திடலாம்னு கேளு’ சொன்னவனின்  பார்வை அப்பாவின் கண்களுக்குள் தஞ்சமாகிக்கிடந்தது

மகனின் விண்ணப்பம் அவர் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்த ‘ப்ளீஸ் தாத்தா. இவங்களையே சித்தி ஆக்கலாம்’ எதுவுமே புரியாத போதும் குழந்தை சித்தப்பாவை வழி மொழிய ஒரு ஆழ்மூச்சு எடுத்துக்கொண்டு அனுவை பார்த்தார் சுவாமிநாதன்.

லேசாக பயம் பரவிய விழிகளுடன் அவள் அவர் முகம் பார்க்க, அவளுக்குமே உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது அவருக்கு. இதழ்களுக்கு புன்னகையை கொடுத்தார்.

‘யூ கேன் டூ இட் ஹரீஷ்! யூ கேன் டூ இட் ஹரீஷ்’ மெல்ல சொல்லியபடியே சிரித்தார் அவர். இத்தனை நேரம் அவள் முகத்தில் இருந்த குழப்பமும் மெல்ல வடிந்தது.

‘உனக்கு ஹரீஷை ரொம்ப பிடிக்குமாமா?’ கேட்டார் ஹரீஷின் தந்தை.

‘ம்...’ புன்னகையுடன் தலை அசைத்தாள் அனுராதா.

‘குட். அப்போ அவன் மரியாதை, என்னோட, இந்த வீட்டோட மரியாதை கெட்டு போக நீ எப்பவும் விட மாட்டே இல்லையா?

‘கண்டிப்பா அங்கிள். எப்பவும் விட மாட்டேன்’ அவள் கொஞ்சமும் யோசிக்காமல் சொல்ல

‘ரொம்ப சந்தோஷம்மா. ரொம்ப ரொம்ப சந்தோஷம். இந்த வீட்டு மருமகளா நான் உன்கிட்டே எதிர்பார்க்கிறது அது மட்டும்தான். உன் வார்த்தையை முழுசா நம்பறேன். மனசிலே வெச்சுக்கோ.’ சொன்னவர் சில நொடிகள் ஏதோ ஒரு யோசனையில் விழுந்து எழுந்தார்.

‘ஆனந்தகண்ணன்’ சுவாமிநாதனின் அழைப்பும், தோள்களில் அணைப்பாய் விழுந்திருந்த அவர் கரமும் தளர்ந்து போய் நின்றிருந்த பெரியப்பாவை  கொஞ்சம் நிமிர்த்தியது.

‘உங்க பொண்ணுகிட்டே நான் கொஞ்சம் பேசலாமா’ என்றார் அவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.