(Reading time: 13 - 25 minutes)

அதனாலேதான் அவன் பெண் பார்க்க வந்தவுடனே மகிழ்வுடன் சம்மதித்திருந்தாள் திருமணத்திற்கு. அதன் பிறகே அவளுக்கு தெரிய வந்தது அவன் ஒரு கிரிக்கெட் வீரன் என்று!

இவர்கள் முன்பே கோவிலில் சந்தித்திருந்த  நிகழ்வுகள் ரகுவுக்கு நினைவு வந்தது கூட சில நாட்களுக்கு முன்புதான்! ஸ்வேதாவை பற்றி அவளது நடவடிக்கைகள் பற்றி அவளது தாயிடம்  பேசிய போதுதான்!

பழைய நினைவுகளுடனே இருவரும் அமர்ந்திருக்க, அவற்றிலிருந்து கொஞ்சம் விடுபட்டு அருகில் அமர்ந்திருந்த ஸ்வேதாவின் கை பற்றிக்கொண்டு  மெல்லக்கேட்டான் ரகு.

‘அன்னைக்கு ஃபெயில் ஆயிட்டேன்னு அழுதிட்டு இருந்தியே அந்த சப்ஜெக்ட் எல்லாம் பாஸ் பண்ணியா இல்லையா?’

‘ம்? ம்ஹூம்..’ அவள் சின்ன சிரிப்புடன் தலை அசைக்க

‘அடிப்பாவி... இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்றது இல்லையா. போச்சு. போச்சு என்னை எல்லாருமா சேர்ந்து ஏமாத்திட்டீங்க ..’ அவன் பொய் கோபத்தை குரலில் பொருத்திக்கொண்டு அவளை சீன்டிக்கொண்டிருந்த அதே நேரத்தில்

ங்கே ஹரிஷின் தந்தையிடம் பேசிவிட்டு கீழறங்கி வந்தாள் அனுராதா. அவர் இறங்கி வரவில்லை. போகும் போது நடையில் இருந்த துள்ளல் இப்போது அவளிடத்தில் இல்லைதான். உள்ளம் பாரமகிப்போய் கிடந்தது.

பெரியப்பாவுக்கும் நடந்தவைகள் தெரியும் என்பது இப்போது புரிந்திருந்தது. அன்றொரு நாள் எதையோ சொல்ல வந்து பிறகு சொல்கிறேன் என அவர் தவிர்த்தும் இதுதான் என தெளிவாகி இருந்தது அனுராதாவுக்கு.

அவள் விழிகள் ஒரே நேரத்தில் பெரியப்பாவையும், ஹரிஷையும் தேடின. இருவருமே கண்ணில் தென்படவில்லை.

‘ஹாய்... அனுராதா...’ உற்சாக கூவலுடன் ஒரு குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள் அனுராதா. சந்தோஷ சிரிப்புடன் அவள் பின்னால் நின்றிருந்தாள் அந்த பெண். அவள் யாரென்றே தெரியாமல் இவள் திருதிருவென விழிக்க

‘நான் வித்யா. ஹரீஷோட அண்ணி’ அறிமுகப்படுத்திக்கொண்டாள் அவள்.

‘ஓ...’ இவள் சட்டென உதடுகளில் சிரிப்பை தேக்கிக்கொள்ள

‘எங்க அனுபாப்பா சொன்னா சித்தி வந்துட்டங்கனு. அதான் உன்னை பார்க்க ஓடி வந்தேன். நீ உள்ளே மாமா கூட பேசிட்டு இருந்தே போலிருக்கு. ரொம்ப சந்தோஷம் உன்னை பார்த்தது’ அனுவை பேசவே விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள் வித்யா. அதற்குள் அவன்  அண்ணனும் வந்துவிட அவனுமே இணைந்துக்கொண்டான் அண்ணியுடன்.

இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவள் பார்வை அவனுக்காகவே தவித்தது ஒரு புறம். வந்துவிட்டால் மட்டும் என்ன செய்வாளாம்? அப்பா சொன்னதை எல்லாம் அவனிடம் சொல்லி விடுவாளாமா? வாய்ப்பே இல்லைதான். மனம் சொல்லிக்கொண்டது இன்னொரு புறம்.

அதற்குள் அவள் இது வரையில் டி.வி யில் மட்டுமே பார்த்து ரசித்திருக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் அங்கே நின்றிருக்க எல்லாரிடமும் அவளை அறிமுக படுத்தி வைக்க ஆரம்பித்தான் அவன் அண்ணன். எல்லாவற்றுக்கும் பதிலாக சின்னதாய் ஒரு புன்னகை மட்டுமே இவளிடத்தில்.

அடுத்து மெல்ல இவளருகில் வந்தான் பரம் அகர்வால். அன்று கிரிக்கெட் போட்டியில் ஹரிஷை கவிழ்த்து விடவே முயன்றுக்கொண்டிருந்தவன். அவனை பார்த்தவுடன் இவள் முகத்தில் கொஞ்சம் மாற்றம் வரத்தான் செய்தது. இவனை எதற்கு அழைத்து வைத்தான் இந்த ஹரிஷ் என்றுதான் தோன்றியது அவளுக்கு,

‘நீங்க ஹரிஷ் ஃபியான்சியா? கங்ராட்ஸ்..’ சொன்னான் அவன்.

‘தேங்க்யூ’ ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து மெல்ல அகன்றாள்.

எங்கேதான் சென்றான் இந்த ஹரிஷ்? தேடிக்கொண்டே இருந்தன கண்கள். அதற்குள் இரவு உணவு துவங்கி இருந்தது.

‘நீ சாப்பிட வரலையா?’ மறுபடியும் அண்ணியே. ‘ வா என்னோட’ இவள் கைப்பிடித்து தோட்டத்துக்கு இழுத்துக்கொண்டு நகர்ந்தாள். அவளை அங்கே விட்டுவிட்டு அண்ணி விலகி செல்ல...

அவன் தந்தை சொன்ன விஷயங்கள் மனதிலாடிக்கொண்டே இருந்தது இவளுக்கு. கையில் தட்டுடன் எதையுமே எடுக்க மனமில்லாமல் அவள் நின்றிருக்க

‘ஸ்வீட்லேர்ந்து ஆரம்பிப்போமா?’ காதுக்கு வெகு அருகில் கேட்டது அவன் குரல்.

திடுக்கென ஒரு நொடி திடுக்கிட்டு விலகி சட்டென விழி நிமிர்த்தி அவனை பார்க்க

உடம்பெல்லாம் காயம், சட்டை கூட இல்லை. வாயிலே ரத்தம் வழிவழிய பார்த்தேன்மா என் குழந்தையை’ ஹரிஷ் பற்றி அப்பா விளக்கியது அவள் காதுகளில் ஒலிக்க உடல் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது. கண் சிமிட்டாமல் அவனையே பார்த்திருந்தாள் அனுராதா.

அழகு புன்னகையுடன் இனிப்பை எடுத்து அவள் தட்டில் வைத்தான் ஹரிஷ். அவள் தோள் உரச உரச நின்றிருந்தான் அவன். கண்களில் காதல் சொட்ட சொட்ட அவளையே பார்த்திருந்தான் அவன். அவளும் அவனை விட்டு விழி அகற்றவில்லை.

‘சாப்பிடு அனும்மா..’ அவள் காதருகில் மெல்ல கிசுகிசுத்தான். ‘என்னை அப்புறம் ரசிக்கலாம்’ அப்போது ஏதோ ஒரு ஓரத்திலிருந்து ஒரு கேமரா அவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்து பதித்துக்கொண்டதை இருவருமே கவனிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.