(Reading time: 13 - 25 minutes)

‘ஷுர். ஷூர் சார்’ பெரியப்பா அவசரமாக சொல்ல ஹரிஷ் யோசனையுடன் அவரை பார்க்க

‘நீ வந்தவங்களை கவனி ஹரிஷ். நாங்க இப்போ வந்திடுவோம். நீ வாம்மா’ என்றபடி அனுவை அழைத்துக்கொண்டு மாடிப்படி ஏறினார் சுவாமிநாதன்.

ஓரளவுக்கு சுவாமிநாதனின் எண்ண ஓட்டத்தை கணிக்க முடிந்தது பெரியப்பாவல். ‘நடக்கட்டும். நடப்பது நடக்கும்படி நடக்கட்டும்’ சொல்லிக்கொண்டார் அவர்.

தே நேரத்தில் அந்த கோவில் பிரகாரத்தை சுத்தி வந்துக்கொண்டிருந்தனர் ரகுவும், ஸ்வேதாவும். தாடி, மீசை, கண்ணாடி, வேஷ்டி சட்டை என தன்னை யாரும் சட்டென அடையாளம் கண்டுக்கொள்ளாத வகையில்தான் வந்திருந்தான் ரகு.

சில வருடங்களுக்கு முன்னால் இதே கோவிலில்தான் அவர்கள் முதன் முதலில் சந்தித்ததும். அன்றைக்கு நடந்தவைகளை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியுமா என்ன? கண்கள்தாண்டி வழியும் கண்ணீருடன்தான் இந்த கோவிலில் இதே பிரகாரத்தில் அன்று அவள் அமர்ந்திருந்தாள்.

கல்லூரி பரீட்சை முடிவுகள் வந்திருக்க இரண்டு பாடங்களில் தவறி இருந்தாள் அவள். அப்பா இருந்தவரை இப்படி நடந்ததில்லை. எல்லா படங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்தே பழக்கம் அவளுக்கு. இப்போது அதெல்லாம் கடந்த காலம் ஆகிவிட்டது.

அப்பாவின் குரல் நடவடிக்கைகள் எல்லாம் இன்னமும் அவள் மனதை விட்டு நீங்காமல் அவளை ஆட்டிப்படைக்கின்றன. அவர் நடப்பது, சிரிப்பது, போனில் பேசுவது என எல்லாமே அழகுதான்.

‘ஹலோ திஸ் இஸ் ரகு ஹியர் என்பாரே’ கைப்பேசியை காதில் வைத்துக்கொண்டு யோசித்தபடியே அவள் அமர்ந்திருக்க

‘ஹலோ திஸ் இஸ் ரகு ஹியர்’ என கேட்டது ஒரு குரல். அது நம் ரகுவேதான். விலுக்கென எழுந்தே விட்டாள் ஸ்வேதா.

அந்த குரலுக்கு உரியவனை பார்க்க வேண்டும் போல் தோன்ற யாரது என தேடி அவனருகில் செல்வதற்குள் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் அவன் அத்தனை பிரபலம் இல்லை. அவன் ஒரு கிரிக்கெட் வீரன் என்று அவள் அறிந்திருக்கவும் இல்லை. அவளை பார்த்ததும் கொஞ்சம் பயந்துதான் போனான் ரகு. அழைப்பை துண்டித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

‘யாரு நீங்க ? ஏன் இப்படி அழறீங்க?’ அவன் சற்றே பதற்றத்துடன் கேட்க

‘அவள் அவனிடம் கேட்ட முதல் கேள்வி ‘உங்க பேர் ரகுவா?’

‘ஆமாம் ஏன்?’

‘இல்ல... இல்ல அது வந்து.. சும்மா கேட்டேன்..’ கண்ணீரை துடைத்துகொண்டாள் ஸ்வேதா..

‘எதுக்கு இப்படி அழறீங்க?’

‘அது.... பரிட்சையிலே ஃபெயில் ஆயிட்டேன்’

‘அவ்வளவுதானா? நான் என்னமோ ஏதோனு நினைச்சேன். நான் ஃபெயில் ஆனதுக்கு எல்லாம் அழுதிருந்தேன்னு வெச்சுக்கோங்க சென்னை தண்ணி கஷ்டம் தீர்ந்தே போயிருக்கும்’ சிரித்தான் அவன்.

‘எங்கப்பா இருந்த வரைக்கும் இப்படி எல்லாம் எனக்கு ஆனதே இல்லை தெரியுமா?’ அவள் சிறு தேம்பலுடன் சொன்னாள். இவனிடம் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று அவளுக்கு அப்போது யோசிக்க தோன்றவில்லை.

‘உங்களுக்கு அப்பா இல்லையா?’ குரல் சற்றே இறங்கிப்போக கேட்டான் ரகு.

‘ம்ஹூம்... அவர் பேர் கூட ரகுதான்..’ அவள் அவன் முகம் பார்த்து சொல்ல அவளை பார்க்க பாவமாக இருந்தது ரகுவுக்கு.

‘சரி... நானும் ரகுதானே அந்த இடத்திலே இனிமே நான் இருக்கேன்னு நினைச்சுக்கோங்க..’ சொல்லிவிட்டான் அவன். அந்த நேரத்தில் அவனுக்கு இருந்தது அவள் கண்ணீரை நிறுத்தும் நோக்கம் மட்டுமே.

‘சரி...’ கன்னங்களில் மீதமிருந்த கண்ணீருடன் தலையசைத்தாள் ஸ்வேதா.

‘நான் அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவேன். வரும்போது நாம பார்க்கலாம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க நான் கண்டிப்பா செய்யறேன். சரியா. நான் சொல்றேன் நெக்ஸ்ட் டைம் நீங்க கட்டாயம் பாஸ் பண்ணிடுவீங்க’ ஆதரவான குரலில் சொல்லிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்று நகர்ந்திருந்தான் ரகு.

அதன் பிறகு அவன் நினைவை விட்டு அவள் அகன்றிருந்தாள். அவள் முகம் கூட அவனுக்கு மறந்து போயிருந்தது. அதனாலேயே அவளை பெண் பார்க்க அவன் சென்ற போது கூட இதெல்லாம் அவன் நினைவுக்கு வரவே இல்லை.

ஆனால் அவளை பொறுத்தவரை கதையே வேறு. அவனுடன் பேசிய நாள் முதல் பல முறை கோவிலில் அவனை தூரத்திலிருந்து பார்த்துக்கொள்வாள் அவள்.

அவனை பார்க்கும் போதெல்லாம் ரகு என்ற பேரை மறுபடி மறுபடி தனக்குள்ளே சொல்லிக்கொள்வாள். அவனை பார்த்தபடியே சில நிமிடங்கள் அமர்ந்திருப்பாள். அப்போதெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாத ஏதோ ஒரு புத்துணர்ச்சியும், சந்தோஷமும் அவளுக்கு உண்டாகும்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.