(Reading time: 12 - 24 minutes)

அமேலியா - 40 - சிவாஜிதாசன்

Ameliya

'ரணத்தின் வாசல் எப்படியிருக்கும்? அதற்கு பின்னாலும் வாழ்க்கை இருக்குமா?' இந்த கேள்விகளுக்கெல்லாம் மெல்ல மெல்ல பதில் தெரிந்து கொண்டிருந்தது அமேலியாவிற்கு. அவள் கண்களில் இருள் சூழ்ந்தது. உடலின் இயக்கம் மெதுவாக நிற்கத் தொடங்கியது. தண்ணீரில் அவளால் மூச்சுவிட முடியவில்லை. நினைவுகள் விளங்கிக்கொள்ள முடியா காட்சிகளை அவளுக்கு காட்டின. தவறான முடிவை எடுத்துவிட்டதாய் மனம் சொன்னது. இது தெளிவான முடிவு தான் என்று மூளை கூறியது. இருளான பாதை, தூரத்தில் வெளிச்சம், வித்தியாசமான அழுகுரல்கள். வெளிச்சத்தை நோக்கி மெல்ல மெல்ல பாதை நீண்டுகொண்டு போனது.

அவளால் திரும்பவும் முடியவில்லை, மீண்டும் செல்லவும் முடியவில்லை. அவள் மயங்கினாள். திடீரென ஒரு கை தன்னை இழுப்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. இழுத்தது யாரென்று கண்டுகொள்ளும் முன் அந்த கைகள் அவளை அலேக்காக தூக்கி வந்து கரையில் போட்டது. அமேலியாவால் நடந்ததை யூகிக்க முடிந்தது. தண்ணீரில் இருந்து தன்னை தூக்கும்போது வசந்தின் ஸ்பரிசத்தை அவளால் உணர முடிந்தது.

அமேலியா மெதுவாக சுயநினைவு கூட்டினுள் புகுந்தாள். விடாமல் இருமினாள். இதயமே வெளியே வந்து விழும் அளவிற்கு அவள் இருமல் தொடர்ந்தது. அவளை தண்ணீரில் இருந்து தூக்கி வந்த களைப்பில் வசந்திற்கும் சிறிது மூச்சு வாங்கியது.

"என்ன மடத்தனம் பண்ணிட்டு இருக்க நீ? இப்படியா கடல் கூட விளையாடுறது? நான் மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும்?" அமேலியா தவறுதலாய் அலையில் சிக்கிக்கொண்டதாய் எண்ணினான் வசந்த்.

வசந்த் கூறியதை எதுவும் அமேலியா காதில் வாங்கவில்லை. தண்ணீரில் நீண்ட நேரம் மூழ்கியிருந்தது போல் இருந்தாலும், வானில் சூரியன் இன்னும் மறையவில்லை. காற்றும் அதே வேகத்தோடு தான் வீசிக்கொண்டிருந்தது. பறவைகளின் கிரீச் ஒலிகளும் குறையவில்லை. இரண்டு நிமிடத்தில் ஆண்டுக்கணக்கான சித்திரவதைகளை அனுபவித்த உணர்வு. சாவதும் அவ்வளவு சுலபமில்லை. வாழ்வதை விட சாவதற்கு தான் அதிக தைரியம் தேவைப்படுகிறது.

தன்னுடைய பாதச் சுவடுகளின் அருகில் வசந்தின் பாதச் சுவடுகள் இருந்ததை கவனித்தாள் அமேலியா. அதற்கான அர்த்தம் என்னவென்று அவளுக்கு புரியவில்லை.

"கடல் அழகானது தான். ஆனா அதுல ஆபத்து அதிகம்" வசந்தின் குரல் அவள் சிந்தனையைத் தடை செய்தது. "சின்ன வயசுல இருந்தே தண்ணின்னாலே பயம்" கடலை பார்த்தபடியே சொன்னான் வசந்த். அமேலியாவும் கடலை பார்த்தபடியே இருந்தாள்.

"உனக்கு நான் பேசுறது கொஞ்சம் கூட புரியலையா? ஒரே ஒரு வார்த்தை கூடவா?"

அமேலியா அமைதியாக இருந்தாள்.

"நான் வேணும்னா அரபி பேசட்டுமா?"

அரபி என்ற வார்த்தை அமேலியாவை வசந்தின் பக்கம் இழுத்து. சில நொடிகள் வசந்த்தை நோக்கினாள்.

"அப்பாடா! நான் சொன்ன ஒரு வார்த்தையாவது உனக்கு புரிஞ்சுதே. நீ வேணும்னா இங்கிலிஷ் கத்துக்குறியா? அது ரொம்ப சுலபம். நிலா படிச்ச புத்தகம் வீட்டில தான் இருக்கு" 

அதன் பின் வசந்த் கூறிய வேறு எந்த வார்த்தையும் அமேலியாவிற்கு புரியவில்லை. எதற்காக அவன் அரபி என்ற வார்த்தையை பயன்படுத்தினான் என்று யூகிக்கவும் முடியவில்லை. அமேலியாவிற்கு குளிரில் உடல் நடுங்கியது.

"சரி சரி வா" என்று எழுந்த வசந்த் அவள் எழுந்திருக்க உதவியாய் தன் கைகளை நீட்டினான். ஆனால், அமேலியா தானே எழும்ப முற்பட்டு பலவீனமாக தவித்தாள். அவளது அனுமதியைக் கேட்காமல் அவள் கையைப் பிடித்து இழுத்து நிற்க வைத்தான் வசந்த்.

வசந்தின் கைகள் தன் மீது பட்ட தருணங்களில் எல்லாம் உடலில் தோன்றும் வினோத உணர்வுகளை அமேலியாவால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. வசந்தின் கைகள் தன்னைப் பற்றியதை மனதார அனுமதிக்க வில்லையென்றாலும், தன்னுடைய பலவீனமான உடல்நிலையைக் கருத்தில்கொண்டு உரிமையோடு உதவும் வசந்தின் செய்கைகளை நிராகரிக்கவும் முடியாமல் சங்கடத்தில் நெளிந்தாள், கடவுளிடமும் மன்னிப்பு கேட்டாள்.

இருவரும் வீட்டை நோக்கி சென்றனர். இருவரின் பாதச் சுவடுகளும் மணலில் பதிந்திருந்ததை மீண்டுமொரு முறை நோக்கினாள் அமேலியா. வசந்தை விட்டு சற்று தள்ளி நடந்தாள். ஆனாலும் பாதச் சுவடுகள் அருகிலிருப்பதை போல் தோன்றியது.

கர டப்பாவாக மாறியிருந்த தனது காரையே இன்னமும் சுற்றியபடி இருந்தான் ஜான். காரை பார்க்க பார்க்க வசந்தின் மேல் கோபம் அதிகரித்தது. ஜெஸிகா மரத்தின் கீழே போடப்பட்டிருந்த நாற்காலியில் கால் மேல் காலிட்டபடி யோசனையோடு அமர்ந்திருந்தாள். வண்டியின் இஞ்ஜினை சரிபார்த்தபடி ஜெஸிகாவை நோக்கினான் ஜான்.  

"நான் இங்க தவிச்சிட்டு இருக்கேன். இவ என்னடானா விண்வெளிக்கு ராக்கெட் விட்டு வேடிக்கை பாக்குறது போல உக்காந்துட்டு இருக்கா. இவளை..." என புலம்பியவாறே கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அவள் மேல் வீசினான். குறி தவறி அந்த கல் எங்கேயோ போய் விழுந்தது. ஜெஸிகாவின் கவனம் கலைந்து மேலும் கீழுமாக பார்த்துவிட்டு ஜானை நோக்கினாள். எந்த சம்மந்தமும் இல்லாதது போல் இன்ஜினை நோண்டிக் கொண்டிருந்தான் ஜான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.