(Reading time: 12 - 24 minutes)

"நீ மட்டுமில்ல எல்லோரும் கிளம்புறோம். உங்களை விட்டுட்டு நான் மட்டும் தனியா வீட்டுக்கு வரேன்"

"ஏதோ பண்ணு.." என்று காரினுள் ஏற முற்பட்டவள் யோசனையோடு நின்றாள்.

"என்ன ஆச்சு?"

"காரை நான் ஓட்டி பாக்கட்டுமா ஜான்?"

"நீயா?" ஜான் அதிர்ந்தான்.

"நான் டிரைவிங் கத்துக்கிட்டேன்"

"நிஜமாவா? நம்பலாமா?"

"வண்டியை கொடுத்து பாரு. நீயே ஷாக் ஆவ. வேணும்னா கூட இரு"

"வேணா, எனக்கு உயிர் மேல பயமிருக்கு. எங்க, கொஞ்ச தூரம் காரை ஓட்டு பாக்கலாம்" என ஜான் சில அடிகள் தள்ளி நின்றான்.

ஜானும் ஜெஸிகாவும் செய்துகொண்டிருக்கும் வேடிக்கைதனத்தை ஆளுக்கொரு திசையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் வசந்தும் அமேலியாவும்.

ஜெஸிகா காரை ஸ்டார்ட் செய்தாள். அதுவே ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது போல் புன்னகைத்தாள்.  

"பாத்தியா ஜான், சரியா ஸ்டார்ட் பண்ணிட்டேன்"

"முதல்ல ஓட்டி காட்டும்மா"

முதல் கியரை போட்டு மெதுவாக ஆக்சிலேட்டரை அழுத்தினாள். கார் உறுமியபடி முன்னேறியது.

"ஜெஸிகாவே கார் ஓட்டுறான்னா இனி நாம கார் ஓட்டுறதில அர்த்தமில்லை" என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான் ஜான்.

திடீரென, "டமால்!" என்று சப்தம் எல்லோரையும் திடுக்கிட வைத்தது. வீட்டின் வாசலில் கார் மோதியபடி நின்றது. இன்ஜினில் இருந்து கரும்புகை வெளிவர, அதை சுவாசிக்க முடியாமல் இருமியபடி காரை விட்டு ஓடி வந்தாள் ஜெஸிகா. ஜான் தலைமேல் கை வைத்தபடி புல் தரையில் அமர்ந்து கொண்டான். அக்காட்சி வசந்தையும் அமேலியாவையும் சிரிக்க வைத்தது.

"கார் பிரேக் பிடிக்கலன்னு சொல்ல வேண்டியது தான" என ஜெஸிகா கத்தினாள்.

"அதாவது, கார் மேல தான் தப்பு?"

"ஆமா"

"பிரேக் எந்த பக்கம் இருக்கு?"

"ரைட் சைட்ல பர்ஸ்ட், அதான பிரேக்"

"இத்தனை நாளா பிரேக் சென்டர்ல இருக்குன்னு நான் நினைச்சிட்டிருந்தேன்" என்றபடி எழுந்தான் ஜான். "தேங்க் யூ"

"எதுக்கு?"

"என் காரை எவ்வளவு முடியுமோ வசந்த் நாசம் பண்ணிட்டான். உன் பங்குக்கு நீயும் அழகா செஞ்சிட்ட"

"கார் நல்லா இருந்தா ஏன் இப்படி நடக்க போகுது?"

"இதுக்கு மேல நான் எதையும் பேச விரும்பல. நான் கிளம்புறேன்"

"நீ எங்க போற?"

"உங்களை தான் இங்கிருந்து விரட்ட முடியல, நானாவது போறேனே"

"ஜான், நீ எதுக்கு கவலைப்படுறன்னே எனக்கு புரியல" என்றான் வசந்த்.

"போனது என் காரும் வீடும் தான உனக்கென்ன கவலை?"

"காரை இன்சூரன்ஸ் கம்பெனிகாரன் பாத்துப்பான். வீட்டை எங்க கம்பெனியே ரெடி செஞ்சு கொடுக்கபோறாங்க. அப்புறம் என்ன?"

அதன் பின் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கொரு திசையில் வெறுமையோடு அமர்ந்திருந்தனர்.

மாலை நேரம். சீக்கிரத்திலேயே இருளும் சூழ்ந்தது. குளிர் மெல்ல தன் வேலையை காட்ட துவங்கியதும்தான் எழுந்து நடமாட ஆரம்பித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவ்விடமே இருளாக காட்சி தந்தது. ஜெஸிகா வசந்தின் அருகில் வந்து அமர்ந்தாள்.  

"கோபம் போயிடுச்சா?"

"அதிகமா தான் ஆகுது. இந்த இடத்தை விட்டு எப்போ ஓடுவேன்னு இருக்கு"

"இப்போ கூட தான் ஓடு. யார் வேணாம்னு சொன்னது"

"எனக்கு இருட்டுன்னா பயம், அதுவும் மிருகங்கள்னா இன்னும் பயம். இந்த இடம் வேற காடு மாதிரி இருக்கு"

"மிருகங்கள் தான் உன்னை பார்த்து பயப்படும்"

"எல்லாம் என்னால தான். நான் மட்டும் கார் எடுக்காம இருந்திருந்தா இந்நேரம் வீட்டுல இருந்திருப்பேன்"

வசந்த் சிரித்தான்.

"என்ன?"

"எல்லோரும் கார்ல தான் வீட்டுக்கு போவாங்க. ஆனா நீ காரையே வீட்டுக்குள்ள கொண்டு போக பாத்திருக்க" என்று வசந்த் சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.