அவர் என்ன சொல்ல என்று தெரியாமல் சூர்யாவை பார்த்தார்.
அவன் சரி என்று சொன்னதும் எல்லாரும் உள்ளே போனார்கள்.
திலகா வந்து கதவை திறந்தாள். அதன் பின் சுந்தருக்கும், திலகாவுக்கும் காவ்யா தான் எல்லாரையும் அறிமுக படுத்தினாள்.
அவர்களும் வரவேற்றார்கள். சாப்பிட சொன்னதுக்கு "காலேஜ்ல தான் வடை காபி எல்லாம் சாப்பிட்டோம்", என்று மறுத்து விட்டார் சண்முகம்.
"மதி ரொம்ப நல்ல பொண்ணுங்க. இங்க ரெண்டு மூணு தடவை வந்திருக்கா. நாங்க காவ்யா வேற மதி வேறன்னு நினைச்சது இல்லை. ஆனா அவ கல்யாணத்தை பாக்க முடியலைன்னு கொஞ்சம் கஷ்டமா இருக்கு", என்று சொன்னார் சுந்தர்.
"அது அவசர கல்யாணம் அதனால் தான்", என்று சொன்னார் சண்முகம்.
"ஹ்ம்ம் மதி மா. உனக்கு கிடைச்சிருக்கு வாழ்க்கையை சந்தோசமா ஏத்துக்கணும் சரியா? தம்பியை பாத்தா நல்ல பையனா தெரியுது. நீ அவங்க வீட்டில் எல்லாரையும் சந்தோசமா வச்சுக்கணும். சந்தோசமா இருக்கணும் டா", என்று சொன்னாள் திலகா.
அம்மா இருந்து அவளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரையை திலகா சொன்னதால் அடுத்த நொடி "அம்மா", என்ற கேவலோடு திலகாவை அணைத்து கொண்டாள் கலை மதி.
அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் சூர்யா.
போகும் போது "உங்க பொண்ணு கல்யாணத்தை பாக்கலைனு கவலை படாதீங்க. அடுத்த வாரம் இங்க தான் ரிசப்ஷன் இருக்கு. அதுக்கு முறைப்படி அழைக்க வரோம். அதுக்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்", என்று சொன்னான் சூர்யா.
"சரிங்க தம்பி. கண்டிப்பா வருவோம். நீங்க அலைய கூட வேண்டாம். என்னைக்குன்னு சொன்னா, நாங்களே மதிக்காக வந்திருவோம்", என்று சொன்னார் சுந்தர்.
ஒரு வழியாக அவர்கள் அனைவரிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினார்கள்.
தான் தங்கி இருக்கும் வீட்டின் முன் காரை நிறுத்தினான் சூர்யா.
இறங்கிய கலைமதி அந்த வீட்டையும், சுற்றி இருந்த வீடுகளையும் பார்த்து கொண்டிருந்தாள்.
சிறு பிள்ளை போல் வேடிக்கை பார்க்கும் அவளை பார்த்தவன் சிரிப்புடன் உள்ளே நடந்தான்.
அப்போது வாசலிலே வந்து காத்திருந்தார் சுப்பிரமணியம் சூர்யாவின் அப்பா.
"மங்களம் அவங்க வந்துட்டாங்க பாரு", என்று உள்ளே நோக்கி சத்தம் கொடுத்த சுப்ரமணியம் "வா மா மதி. ரெண்டு பேரும் சேந்து நில்லுங்க. அம்மா ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வருவா", என்றார்.
அவரையே இன்று தான் முதல் முறை பார்க்கிறாள் மதி.
"இவர் தான் மாமா போல?", என்று நினைத்து கொண்டு அவரை பார்த்து சிரித்தவள் அவன் அருகில் சென்றாள்.
உள்ளே இருந்து சிரித்து கொண்டே வந்த மங்களம், "வா மா மதி. டேய் அவ கிட்ட நில்லு டா", என்று சொல்லி இருவருக்கும் ஆரத்தி சுற்றி பொட்டு வைத்து உள்ளே அழைத்து கொண்டு போனாள்.
உள்ளே போன பின்னர் இருவரும் பெரியவர்கள் மூவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
வீட்டுக்குள்ளே போன பின்னரும், அதே மாதிரி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் மதி.
"உக்காரு மா. உக்காருங்க அண்ணன்", என்று அங்கு இருந்த சோபாவில் அமர சொன்னாள் மங்களம்.
அப்பாவும், பொண்ணும் அமர்ந்த பின்னர் அவர்கள் எதிரே சுப்பிரமணியம் அமர்ந்து அவர்களுடன் பேச துடங்கினார்.
அமைதியாக இருந்தவளை காலேஜ், படிப்பு பற்றி பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
சூர்யா அவனுடைய அறைக்குள் சென்று விட்டான்.
உள்ளே காபி போட சென்ற மங்களத்தை பார்த்து "இப்ப காபி வேண்டாம் மா", என்று சொல்லி விட்டார் சண்முகம்.
"சரி நீங்க பேசிட்டு இருங்க", என்று சொல்லி விட்டு சூர்யா அறைக்கு சென்றாள் மங்களம்.
அவன் கட்டிலில் எதையோ யோசித்து கொண்டு அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்ற மங்களம், "என்னை மன்னிச்சிரு பா. அண்ணன் எதாவது நினைச்சுக்க கூடாதுன்னு தான், உன்னை காலேஜ்க்கு கூட்டிட்டு போக சொன்னேன். அதனால தான் மதியை கூப்பிட உன்னை கூட்டிட்டு போனார். கோபமா இருப்பேன்னு தெரியும். அதான் இந்த தடவை மட்டும் அம்மாவை மன்னிச்சிரு", என்று சொன்னாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. கோபம் எல்லாம் இல்லை. சரி நான் குளிச்சிட்டு வரேன்", என்று சொல்லி விட்டு பாத்ரூம் நோக்கி சென்றான்.
அவன் புன்னகை சிந்தவில்லை தான். ஆனால் கோபத்தில் கத்துவான் என்று அவள் எதிர்பார்க்க, அவனுடைய அமைதி மங்களத்துக்கு திகைப்பையும், நிம்மதியையும் தந்தது.
அதன் பின் வெளியே வந்து அவளும் கலை மதியுடன் பேச ஆரம்பித்தாள்.
அப்போது தான் அவளுடைய களைப்பு மங்களத்துக்கு கண்ணில் பட்டது. "சரி அவன் குளித்த பின்பு இவளை அனுப்பலாம். அதுவும் அவனோட ரூமுக்கே அனுப்பலாம். கேட்டா, அண்ணன் இருக்காங்கன்னு சொல்லிக்கலாம். என்ன தான் செய்றான்னு பாப்போம்", என்று பிளான் செய்து அமர்ந்திருந்தாள்.