(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 41 - தேவி

vizhikalile kadhal vizha

சில நாட்களாக நூற்றாண்டு விழா என்ற கொண்டாட்டத்தில் காலேஜ் இருந்ததால், போர்ஷன் முடிப்பதில் மிகவும் தேக்கம் இருந்தது. அதனால் எல்லா பேராசிரியர்களும் பிஸியாக இருந்தனர். செழியன், மலரும் அதில் அடக்கம். அதனால் மாலை வேளை சந்திப்பு இருவருக்கும் அரிதாகி இருந்தது. இரவிலும் வாட்ஸ் அப் மெசேஜ் மட்டுமே..

செழியன் இரவு நேரங்களில் அவன் தீசிஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்ம்ராமாக இருப்பதால் அவனால் யாரிடமும் பேச இயலவில்லை. காலேஜ்ஜில் இருந்து வந்தவுடன் தன் அறைக்குள் சென்று அடைபவன், அவன் அம்மா சாப்பிட கூப்பிட்ட பிறகே வெளியில் வருவான். சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையை ஆரம்பித்து விடுவான்.

என்றாலும் மலர் உறங்கச் செல்லும் முன், அவனுக்கு மெசேஜ் செய்வாள். அதற்கு பதில் அனுப்பி மேலும் ஒரு பத்து நிமிடம் மெசேஜ் மூலம் பேசிவிட்டு குட் நைட் சொல்லி விடுவான்.

நேரில் காலேஜ்ஜில் சந்தித்த போது அவன் சொல்லியிருந்ததால் அவளும் புரிந்து கொண்டு அதிகம் அவனை தொந்தரவு செய்வதில்லை.

ஒரு மாதம் வரை இப்படியே செல்ல, ஒரு ஞாயிறு இரவு மலரின் வீட்டில், இரவு ஒன்றாக சாப்பிட அமர்ந்து இருந்தனர்.

“அம்மா.. நம்ம மாணிக்கம் அண்ணாச்சி பேசினாக..”

“என்னவாம்.. “

“பங்குனி உத்திரம் வருதுல்ல.. ஊர்லே திருவிழாக்கு அழைச்சாக..”

“ஆமாம்.. எப்போ வருதாம் திருவிழா?”

“இன்னும் .. பதினஞ்சு நாளு இருக்கு “

“அப்படினா.. இந்த வாட்டி வீட்டுலே எல்லோருக்கும் டிக்கெட் போட்டுரு வேலா..”

“அம்மா .. எல்லோருக்குமா?”

“ஆமாம்.. பேச்சிக்கும் சேர்த்துதான் சொல்றேன்”

இப்போது மலர் குறுக்கிட்டு,

“என்னை பேச்சி சொல்லாத .. ஆச்சி.. அப்புறம் எனக்கு கோபம் வரும்”

“ஏண்டி.. இங்கன முக்கியமா பேசும் போது உன் பேரு தான் முக்கியமோ?”

“ஏன் பேச மாட்ட? நான் லீவ் எல்லாம் போட முடியாது.. முடிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கு” என்று சொல்ல,

“அடக் கொடுமையே.. பள்ளிக்கூடத்துலே படிக்கிற பிள்ளைங்க தான் லீவ் எடுக்க பயப்படனும்.. இங்கன என்னடானா.. சொல்லிக் கொடுக்கிற வாத்திச்சி.. பயப்படுது.. இத நான் எங்கன போயி சொல்ல ?”

“ஆச்சி.. எங்கியும் நீ போயி சொல்லவேண்டாம்.. நிஜமாவே எனக்கு வேலை இருக்கு என்னை விட்டுரு.. “

“அப்படி எல்லாம் விட முடியாது.. நீ வந்தாகணும்..”

“முடியாது ஆச்சி.. லீவ் எடுத்தா என்னாலே போர்ஷன் முடிக்க முடியாது..”

ஆச்சி மீண்டும் ஏதோ கூற ஆரம்பிக்கும் முன், வேலன் குறுக்கிட்டு

“மலர் .. என்ன எதுன்னு கேக்கும் முன்னாடி.. மாட்டேன்னு சொல்லுற.. என்ன பழக்கம் இது?”

“அதில்லைப்பா.. ஒரு வருஷமும் இல்லாம தீடிர்னு இந்த வருஷம் வர சொல்லுறாங்க.. ஆனால் எனக்கு வேலை இருக்குபா”

“பேச்சி.. நீ நம்ம ஊருக்கு வராமா இருந்ததில்லை மா.. சின்ன வயசுலே உன்னை கூட்டிக்கிட்டுதான் போவோம்.. உன் படிப்பு காரணமா கொஞ்ச வருஷமா நீதான் வாறதில்லை கண்ணு..”

‘அது எனக்கும் தெரியும் ஆச்சி.. ஆனா என்னவோ லீவ் வேணும் கேக்க ஒரு மாதிரி இருக்கு ‘

‘இல்லடா மலர் .. நீ லீவ் எல்லாம் யாருக்கிட்டயும் கேக்க வேணாம்.. கோவில் திருவிழா அன்னிக்கு குட் ஃப்ரைடே .. அந்த சனி , ஞாயிறும் சேர்த்து அரசாங்க விடுமுறை.. நாம வியாழகிழமை நைட் புறப்பட்டா வெள்ளி காலையில் திருவிழாலே கலந்துகிட்டு , சனி கிழமை பக்கத்துலே எங்கியாச்சும் போயிட்டு வரலாம் .. ஞாயிறு பகல் ட்ரைன்லே நாம திரும்பிட்டா.. திங்கள் கிழமை நீ காலேஜ்க்கு போயிறலாம்..”

“சரிப்பா.. எனக்கு காலேஜ் லீவ் போடாம இருந்தா போதும்” என

“அம்மா.. அதான் புள்ள சரின்னு சொல்லிடுச்சு.. இனிமே என்ன.. “

“சரி .. ஏன்தா.. வள்ளி.. நீ ஒன்னும் சொல்லாம கிடக்க..?”

“நான் என்ன சொல்றதுக்கு இருக்கு.. நீங்க சொன்ன மாதிரி ஊருக்கு போய் வார வேண்டியதுதான் ..”

“சரி.. இப்போ சாப்பாடு முடிஞ்சா எல்லாம் போய் படுக்கலாம்..” என்று வேலன் கூற, மலர் தன் அறைக்கு வந்தாள்.

அவள் மனதில் என்னவோ ஒரு உறுத்தல் .. அவளுக்கு ஊர் நினைவு அவ்வளவு இல்லை.. அதனால் ஊருக்கு செல்ல ஆசையாகதான் இருந்தது. ஆனால் அவள் ஆச்சி கோவிலுக்கு செல்ல மட்டுமாக அவளை கூப்பிடவில்லையோ என்று தோன்றியது. உள்ளுக்குள் ஒரே கவலையும் குழப்பமும் தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.