(Reading time: 10 - 20 minutes)

“அதுக்கு ஏன் உங்க அப்பாகிட்டே சொல்ல வேணாம்னு சொல்லுத?”

“இல்லை.. நீங்க விவரம் எல்லாம் கொடுத்தீங்கன்னா, அப்பா நேரடியா பேசி முடிச்சிடுவார்.. எனக்கு அதில் சில பிரச்சினைகள் இருக்கு.. அதான் நான் நேர்லே அவங்ககிட்டே பேசிரலாமேன்னு பாக்கேன்..”

“ஒஹ்.. சரி.. ஆனா உன் அப்பன்கிட்டே எத்தனை நாள் மறைக்க முடியும்?”

“ரொம்ப நாள் எல்லாம் இல்லை மாமா.. எப்படியும் நாங்க ஊருக்கு வாரப்போ நீங்க தகவல் சொல்றதாதானே சொல்லிருக்கீங்க.. அந்த நேரம் நாம மட்டும் சம்பந்தபட்டவங்க வீட்லே போய் பேசிட்டு வந்துருவோம்,.. பொறவு அப்பாக்கு விஷயத்தை சொல்லிக்கலாம்..”

“சரி சரி.. என்னவோ செய்ப்பா. இருந்தாலும் நம்ம ஊர்ல் புள்ளைய நீ கட்டிகிடுவன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. “

“அது ஏன். என்னங்கரத நான் நேர்லே சொல்றேன் மாமா..” என்றவன்

“சரி ..மாமா.. நீங்க உறங்குற நேரமோ.. நான் போன் பண்ணி உங்கள தொல்லை கொடுத்துட்டேன்.. போலே..”

“இதில் என்னப்பா  இருக்கு.. ? ஒரு நாள் சித்த நேரங்கழிச்சு உறங்கினா.. ஒன்னும் ஆவாது.. நீ பார்த்துக்கோப்பா.. உங்கப்பாவையும் விசாரிச்சேன்னு சொல்லு” என்றபடி போனை வைத்தார்.

அவர் வைக்கவும், பெருமூச்சு விட்ட செழியன் மனதுக்குள்ளே “செழியா.. இப்போவே கண்ணை கட்டுதே.. இனிமேதான் உங்கப்பாவ நீ சமாளிக்கணும் .. நியாபகம் வச்சுக்கோ” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

நாட்கள் நகர இருவர் வீட்டிலும் ஆவலுடன் எதிர்பார்த்த ஊர் திருவிழாவும் வந்தது.. மலரின் அப்பா கடைசி நேரத்தில் முயற்சி செய்ததால் அவர்களுக்கு ட்ரைன் டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் திருச்சியில் இருந்து காரிலேயே புறப்பட்டார்கள்.

செழியன் அப்பாவோ கிட்டத்தட்ட பொங்கலன்று ஊர் போய் வரும்போதே இந்த தேதிகளை கணக்கிட்டு இருந்ததால் , டிக்கெட் எடுத்து வைத்து இருந்தார். அதனால் அவர்கள் ட்ரெயினில் வந்தனர்.

இவர்களோடு செந்தில், அவன் மனைவி செல்வி இருவரும் வந்தனர். கொஞ்சம் விருந்து உபசாரங்கள் இன்னும் மிச்சம் இருப்பதால், இந்த விடுமுறையை பயன்படுத்தி கிளம்பி இருந்தனர்.

ட்ரெயினில் செழியனை பார்த்ததும், செல்வி

“அண்ணே .. கைகாயம் நல்லா ஆறிட்டா? மலருக்கும் காயம் எல்லாம் சரியாகிட்டுதா?” என்று வினவ, செழியன் முழித்தான்.

அவள் என்ன செய்வாள்? அந்த டூருக்கு பிறகு இன்றுதான் செழியனை சந்திக்கிறாள்.. அதனால் அவனின் நலம் விசாரித்தாள். அவள் அத்தோடு விட்டு இருந்தாலும் பரவாயில்லை..

“நல்ல வேளை .. நீங்க யோசனையா அந்த கம்பிய பிடிச்சு அந்த ஆள அடிச்சீங்க.. இல்லாட்டா மலர் நிலைமை .. நினைச்சே பார்க்க முடியல..” என்று முடிக்க,

செழியன் அப்பா செழியனை முறைக்க, செழியன் செந்திலை முறைத்தான். எப்படியோ அதற்கு மேல் அந்த பேச்சு பேசாமல் வேறு ஏதோ பேசி தப்பித்தான்.

செழியன் அப்பா ஊரில் இறங்கவும், அவரை சந்திக்க வந்த வடிவேல்,

“வாங்க மச்சான்.. நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

“நல்லா இருக்கேன் மச்சான்.. நானே உங்களுக்கு சொல்லி விடலாம்னு நினைச்சேன்.. நீங்களே வந்துடீங்க..?” என்றவர், “நான் கேட்ட விவரம் என்னாச்சு?’”

“எல்லாம் தயார்தான் மச்சான்.. நீங்க சாமி காரியத்த மொத முடிங்க.. பொறவு இந்த சோலிய பார்க்க போகலாம்” என்று செழியனை பார்த்தவாறே கூற,

அதுவரை மூச்செடுக்காமல் நின்று இருந்த செழியன் நிம்மதியாக மூச்சு விட்டான்.. அடுத்து அவன் அப்பா கூறியதை கேட்ட செழியனின் நிம்மதி அந்த நிமிஷத்தோடு நின்றது.

“என்ன மச்சான் நீங்க.. ? நான் சாமி கும்பிட வந்ததே .. இந்த காரியம் நல்லபடியா முடியனும்னுதான்.. அதான் நீரு சொன்ன மாதிரி முடிச்சுடீரே..? பொறவு என்ன சோலி இங்கன..?”

“என்ன சொல்லுதீங்க ? விளங்கலையே?”

“நம்ம நமசிவாயம் ஐயா குடும்பத்த கண்டுபிச்சுட்டேன்..” என்று கூற, திகைத்து நின்றனர் செழியனும், வடிவேலும்.. அதோடு இல்லாமல்.

“இன்னிக்கு பொழுது சாய நாம முறைப்படி பொண்ணு பார்த்துட்டு, அங்கனையே உப்பு தாம்பூலம் மாத்துராதாவும் பேசி வச்சுருக்கேன்” என

இப்போது செழியன் அம்மா பார்வதியும் திகைத்து நின்றார்.

தொடரும்!

Episode # 40

Episode # 42

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.