(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 42 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் அப்பா சிவஞானம் கூறியதை கேட்ட அவன் அம்மா பார்வதி, வடிவேல் எல்லோரும் திகைத்து நின்றார்கள் .. அதிலும் செழியனுக்கோ என்னவென்றே புரியாத நிலை..

“ஐயோ.. எங்க அப்பா இப்படி தீயா வேலை செய்வார்னு தெரிஞ்சு இருந்தா வடிவேல் மாமாவிடம் விவரம் வாங்கியதும்  வேலையை ஆரம்பித்து இருக்கலாமே..“ என்று மனதுக்குள் நினைத்தான். அவரிடம் என்ன பேசுவது என்று யோசிக்கும்போது கை கொடுக்கும் தெய்வமாக அவன் அம்மாவே ஆரம்பித்தார்.

“இது என்ன கதையா இருக்கு? பொண்ண பாக்க போகலாம்னு சொன்னீங்க. சரி..? அங்கனேயே ஓப்பு தாம்பூலம் மாத்துறது எப்படி சரி வரும்? விதரணையா செய்யாட்டாலும், உங்க பக்கம், என் பக்கம்ன்னு உடன் பொறந்தவங்க மட்டுமாவது வர வேணாமா?”

“எனக்குதான் உடன் பொறந்தான்ன்னு யாரும் இல்லையே? எல்லாம் பங்காளிங்க மட்டும் தானே.. அவங்களுக்கு தகவல் சொல்லிக்கலாம்.. உன் கூட பொறந்தவன் , என் மச்சான் நான் சொன்னா கேட்டுப்பான்..”

“நல்லா இருக்கே.. நியாயம்.. இதுவே உங்களுக்கு அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி இருந்தா விட்டுடுவாகளா? எங்கண்ணன் மட்டும் சொன்னா கேட்டுக்கனுமோ?”

“அட நீ வேற.. விவரமில்லாம பேசிகிட்டு இருக்கே..? நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்க மனுஷங்க... பார்த்த வேகத்துக்கு நல்ல சேதிய கொடுப்போம்ன்னு தான் இன்னைக்கே முடிவு சொல்லிருவோம்னு நினைச்சேன்.. உங்க அண்ணனனுக்கு கல்யாணத்துலே வேண்டிய மரியாதை செய்துடுவோம்.”

“இப்போ நீங்கதான் விளங்காம பேசுதீங்க.. கல்யாணம்னா ஆயிரம் காலத்து பயிர்.. அத போனோம் வந்தோம்ன்னு முடிவு பண்ணுவீங்களா? நமக்கு அந்த நமசிவாயம் அய்யாவை தவிர வேற யாரையும் அவுங்க குடும்பத்துலே தெரியாது.. அவரும் இப்போ இருக்காரான்னு சந்தேகம். இப்போ அவுங்க என்ன மாதிரி இருக்காங்களோ... அந்தஸ்து கழுதைய விடுங்க.. மனுஷங்க எப்படின்னு தெரியனும் .. அதுக்கும் மொத பொண்ணு பிள்ளை பார்த்து ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கணும்.. இது எல்லாம் நடக்கும் முன்னாடி தாம்பூலம் மாத்துறது பத்தி பேசாதீங்க?”

“ஏண்டி.. கூறு கெட்டவளே.. இது எல்லாம் எனக்கு தெரியாது பாரு? இப்போ அவங்க விவரம் எல்லாம் யாரோ சொல்லியா நான் கேட்டுக்கிட்டேன். நமக்கு வேண்டியவங்க வடிவேல் மச்சான்.. அவர் நமக்கு சரியான தகவல் தானே கொடுத்து இருப்பாரு? அதான் நான் முடிவு பண்ணிட்டேன்..”

இப்போது வடிவேல் “மச்சான்.. நாந்தான் உங்களுக்கு எந்த விவரமும் சொல்லலையே.. நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க.. ?”

“நான் ரெண்டு வாரம் முன்ன.. உமக்கு போன் செய்தேன்.. நீர் வீட்டிலே போன் வச்சிட்டு போயிட்டதா என் தங்கச்சி.. அதான் உங்க பொஞ்சாதி .. சொன்னாபுலே. நீர் வந்தவுடன் பேச சொல்லும்மான்னு சொன்னேன்.. அதுக்குள்ளே தங்கச்சியே நீங்க சொன்ன விவரந்தானே.. அந்த வேலைய அவர் முடிச்சுட்டாருங்கன்னு சொல்லிச்சு.. யாரு , என்ன விவரம் எல்லாம் கேட்டேன்... அதுவும் முழுசா சொல்லிடுச்சு.. ஆனா நீர் ஏன் எனக்கு தகவல் சொல்லலன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. சரி நேர்லே சொல்லலாம்ன்னு நினைக்குரீரோன்னு தோணிச்சு.. அதோட தங்கச்சி அவங்க போன் நம்பரும் கொடுத்தாங்க.. சரின்னுட்டு நானே அவங்களுக்கு பேசி இன்னைக்கு பொண்ணு பார்க்க வாரத பத்தி சொன்னேன்..”

“ஏங்க .. எல்லாம் சரிதான்.. நம்ம பையன் கிட்டே ஒரு வார்த்தை கேட்டீங்களா? அவன் மனசுலே என்ன இருக்கோ ?”

“பொண்ணுக்கு எந்த குறைச்சலும் இல்லை. படிச்ச புள்ள தான். அவன மாதிரி பெரிய படிப்பு படிக்கனும்னா நம்ம வீட்டுக்கு வந்த பொறவு படிச்சுட்டு போகட்டும் “

இதுவரை பேசாமல் இருந்த செழியன் . இனியும் மெளனமாக இருந்தால் , அந்த முகந்தெரியா பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட வைத்து தான் தன் அப்பா இந்த ஊரை விட்டு கிளம்புவர் என்று தோன்ற, நேரடியா மோதும் முடிவிற்கு வந்தான்.

இப்போதும் வடிவேல் மாமா இருப்பதால் அவனுக்கு தயக்கம் தான்.. தன் தந்தையிடம் பேச எந்த மாதிரியான வார்த்தைகள் வருமோ, அது எல்லாம் மூன்றாம் மனிதர் முன்னால் பேச கஷ்டமாக இருந்தது.. ஆனால் இப்போது அந்த பெண் வீட்டுக்கும், தங்களுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இவர்தான்.. இவர் தன்னுடைய நிலைமையை புரிந்து கொண்டால் , அதுவே தனக்கு பெரும் பலம் என்று எண்ணினான்.. வேறு வழியில்லாமல் இப்போது பேச்சை துவக்க முடிவு செய்தான்.

“அப்பா , அம்மா இப்போ நீங்க ரெண்டு பேரும் நான் சொல்றத கவனிங்க.. அப்பா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். நான் மலர்விழிய விரும்பறேன் .. அவளதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்”

“நினைச்சேம்லே.. இந்த வார்த்தை உன் வாயிலேர்ந்து வர முன்னாடி உனக்கு நிச்சயம் பண்ணனும்னு நினைச்சேன்.. இப்போ வந்துட்டுதே..

“ஏங்க .. அந்த புள்ளைக்கு என்ன குறைச்சல்.? படிச்சு வேலை பார்க்குது.. அதுவும் நம்ம மவன் வேலை பார்க்கிற இடத்திலேயே .. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு போக வாட்டமா இருக்கும். “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.