(Reading time: 19 - 37 minutes)

அவருக்கும் சற்று நேரமாக மனது நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தது. செழியன் அவருக்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்து , பிறகாக பிறந்தவன். சிவஞானம் , பார்வதி இருவருக்குமே அவன் உயிரானவன். அவனின் வாழ்க்கையின் முக்கிய விருப்பத்திற்கு தடை சொல்கிறோமே என்ற வருத்தம் இருந்தது அதிலும் செழியனின் அமைதியான இந்த பேச்சிற்கு பின் , அதிலும் அவன் காரணம் கேட்கவும், மடை திறந்து சொல்ல ஆரம்பித்தார்.

“பார்வதி, என்னை பத்தி உங்களுக்கு தெரிஞ்சுது எல்லாம் வாழ்க்கையிலே வெற்றி பெற்ற ஒரு மனுசனாத்தான்..  ஆனால் அதுக்கு முன்னாடி நான் பார்க்காத கஷ்டமில்லை.. அதுலேர்ந்து என்னை காப்பாத்தின தெய்வம் தான் நான் சொன்ன அந்த நமசிவாயம் ஐயா..” என்றவர்

“இன்னிக்கு நான் சொந்த ஊருன்னு சொல்ற இந்த இலஞ்சிக்கு நான் வாறதுக்கு என்ன பாடுபட்டேன் தெரியுமா? நாற்பது, ஐம்பது வருஷம் முன்ன நாங்க எல்லோரும் வாழ்ந்தது நம்ம மாஞ்சோலை எஸ்டேட்லே தான். இங்கிலிஷ்காரன் காலத்துலேர்ந்து அந்த எஸ்டேட்லே வேலை செஞ்சுகிட்டு இருந்துட்டு இருந்தோம்.. அங்க வேலை பார்க்கிறது அத்தனை சாதாரண விஷயம் இல்லை. அங்க உள்ளவங்க எல்லாம் காணிக்காரர்ன்னு சொல்ற பழங்குடியினர்தான்.. எங்க அப்பா அவங்கள எல்லாம் ஒன்னு படுத்தி அந்த எஸ்டேட் வேலைகளை செய்ய வக்கிறது தான் அவருக்கு வேலை.. இன்னைக்கு சொல்றதுன்னா நம்ம கடையில் ஒவ்வொரு மாடியிலும் வேலை ஒழுங்கா நடக்கான்னு பார்க்க நாம ஆள் வச்சிருக்கோமே சூப்பர்வைசர்ன்னு.. எங்க அப்பாவும் அந்த வேலை தான் பார்த்தார்.

சுதந்திர போராட்ட காலாத்துலே எங்க அப்பா, அங்க உள்ள இன்னும் சிலர் எல்லாம் சேர்ந்து இந்த எஸ்டேட் வச்சிருந்த அவங்க ஆங்கில முதலாளிகளை எதிர்த்து நிறைய கலகம் பண்ணிருக்காங்க.

சுதந்திரத்துக்கு பிறகு இந்த எஸ்டேட் அப்படியே சர்க்கார் கிட்டேர்ந்து ஒரு தனியார் கம்பனிக்கு போச்சு.. எங்க அப்பா, மத்தவங்க எல்லாம் எதிர்பார்த்தது அந்த மலை பகுதிக்கு ஒரு விடிவு வரும்ன்னு நினைச்சாங்க.. ஆனால் இப்போ நிலைமை இன்னும் மோசமாயிட்டுது.. அந்த கம்பனிகாரன், கூலி தொழிலாளிங்க  வயித்தில் அடிக்க ஆரம்பிச்சான்.

லாபம் பார்க்க எவ்ளோ வேலை வேணுமோ அவ்ளோ வேலை வாங்கிட்டு, சரியான கூலிய கொடுக்க மறுத்தான். அதோட இல்லாம, இது தனியான மலை பகுதிதானே. அவனுகளுக்கு தேவையான சமயம், பல அரசாங்க அதிகாரிகள், வெளிநாட்டு கம்பெனி அதிகாரிகளுக்கு இங்கே விருந்து கொடுத்து அவங்கள கைக்குள்ள போட்டுக்க நினைச்சாங்க.

வெறும் விருந்து மட்டும் இல்லாம, அங்கே வேலை செய்யற பொண்ணுங்களையும் ...... என்று வார்த்தையை முழுங்கியவர் , பயன்படுத்திக்க ஆரம்பிச்சாங்க..

இதை எதிர்த்து கேள்வி கேட்ட, எங்க அப்பா இன்னும் சிலரை, ஆள் வைத்து மிரட்டுவது, அடித்து போடுவது அப்படின்னு பல விஷயங்கள் நடந்தது. கொஞ்ச நாளில் இன்னும் சில தொழிலாளிகள் சேர, அவங்களுக்கு பயம் பிடிச்சுட்டுது.. அப்போ இந்த அளவிற்கு டிவி எல்லாம் கிடையாதா, அதனால் அவங்க இந்த விஷயம் பத்திரிகைகாரங்களுக்கு தெரியும் முன்னே அடக்க நினைச்சு, தொழிலாளிகள் சிலரை வீட்டோடு கொளுத்திட்டாங்க.. அது மட்டும் இல்லாம அவங்களுக்கு பொறுப்பா இருந்தா எங்க அப்பாவையும் கொன்னுட்டாங்க.. அந்த வீட்டோடு கொளுதினதுலே எங்க வீடும் ஒன்னு.. நானும் , எங்க அப்பாவும் வெளியே போயிருந்த நேரம் இது நடந்தாதலே , எங்க அம்மா மட்டும் செத்துட்டாங்க..

நாங்க அலறி அடிச்சு ஓடும் நேரம் , எங்க அப்பாவ பார்த்த ஒரு கொலைகாரன், அவரை கொன்னுட்டான். என் அப்பா என்னை தப்பிக்க வைப்பதற்காக ஒரு கோயில் உள்ளே விட்டுருந்தாரு.

இந்த விஷயம் எங்க ஆட்கள் நிறைய பேருக்கு பயம் கொடுக்க, அவங்க அந்த ஊரை விட்டு போனா போதும்ன்னு கிளம்ப ஆரம்பிச்சுடாங்க. அதிலே எங்க சொந்தக்காரார் ஒருத்தர் கோவில்லே நான் மட்டும் நின்னுட்டு இருக்கத பார்த்து, தன்னோட என்னையும் கூட்டிகிட்டார்.

எல்லோரும் எங்க போகன்னு தெரியாம, பஸ் மாறி பஸ் மாறி போனதுலே, இலஞ்சி பக்கம் போய் இறங்கினோம். எங்க கூட்டத்துலே நிறைய நண்டும் சிண்டுமா இருந்தது. பாவம் எல்லாத்துக்கும் பசி தாங்க முடியாம அழ ஆரம்பிச்சுதுங்க..

அப்போ இந்த முருகன் கோவிலில் ஏதோ திருவிழான்னு அன்னதானம் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. சரின்னு போய் ரெண்டு பேர் கேட்டதுக்கு, இப்போ எல்லாம் போட முடியாது. இன்னும் ஊர் பெரிய மனுஷங்க வந்துதான் அன்னதானம் ஆரம்பிப்போம்னு சொல்லிடாங்க.. நாங்க தலைய தொங்கபோட்டு அப்போவும் உக்கார்ந்து இருந்தோம்.

அப்போதான் கோவில் உள்ளேர்ந்து ஒருத்தர் எங்களுக்காக பேச ஆரம்பிச்சார்.

“யோவ்.. உங்களுக்கு எல்லாம் மண்டையிலே ஏதாவது கூறு இருக்காயா? எத்தனை சின்ன புள்ளைங்க பசியில் கிடக்குதுங்க.. அதுங்களுக்கு சோறு போடாம, காலையில் ரெண்டு வேளை தின்னுட்டு, அன்னதானத்திலே சாப்பிடறது புண்ணியம்ன்னு ஓசிலே சோறு திங்க வாரவங்களுக்காக காத்து இருக்கணுமோ.. சாமிக்கு பூஜை முடிஞ்சதுன்னா, இலைய போடுங்கடா “ என்று சத்தம் போட்டார்.

அவரின் சத்தம் கேட்டதும், கோவிலில் வேலை செய்பவர்களும் வேகமாக எங்களை அழைத்து சாப்பாடு போட ஆரம்பித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.